Published:Updated:

தரிசித்த கணமே மனக்குறை தீர்க்கும் கயிலாசநாதர்

மகான் வண்ணச் சரபம் தண்டபாணி சுவமிகள் இந்தத் தலத்தின் இறைவனைப் பாடிப் பரவியுள்ளார். இத்தலத்து விருட்சமாக வில்வமரம் திகழ் கிறது.

பிரீமியம் ஸ்டோரி

பூலோகத்தில் வைகுண்டம் மற்றும் திருக்கயிலாய தரிசனப் புண்ணியத்தை ஒருங்கே அருளும் அற்புதத் தலமாகத் திகழ்கிறது விழுப்புரம். ஆம், அருள்மிகு கயிலாசநாதர் ஆலயம் மற்றும் வைகுண்டவாச பெருமாள் ஆலயத்தால் ஆன்மிகச் சிறப்புடன் திகழ்கிறது இந்தப் புண்ணிய பூமி.

இவற்றில் அருள்மிகு பிரஹன்நாயகி சமேத அருள்மிகு கயிலாசநாதர் ஆலயம் விழுப்புரம் திரு.வி.க சாலையின் அருகே அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் திகழ்கிறது. கிழக்கு நோக்கிய ஆலயம் இது. எனினும், ராஜ கோபுரம் மேற்கு வாயிலில் அமைந்துள்ளது.

கயிலாசநாதர் கோயில்
கயிலாசநாதர் கோயில்


சோழர்கால கட்டட பாணி யுடன் கோயில் திகழ, கருவறையைச் சுற்றி உள்ள கல்வெட்டுகள் சிறப்புமிக்க வரலாற்றுத் தகவல்களுடன் காணக் கிடைக்கின்றன.

பிரசித்திபெற்ற திருப்புறம்பியம் போரில் பாண்டியரை வென்றனர் பல்லவர்கள். இந்த வெற்றியின் நினைவாக, ‘விஜய நிருபதுங்க செயந்தாங்கி சதுர்வேதிமங்கலம்’ என்று தன் பெயரால் வழங்கப்பட்ட இந்தப் பகுதியை, அந்தணர்களுக்கு இறையிலியாக வழங்கியுள் ளான் பல்லவன்ன் நிருபதுங்கவர்மன்.

முதலாம் ராஜராஜன் காலத்தில், ‘ஜன நாதச் சதுர்வேதிமங்கலம்’ என அழைக்கப் பட்டுள்ளது இவ்வூர். இங்குள்ள அந்தணர் களுக்கு 1015-ம் ஆண்டு முதல் மானியமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல பெயர்களில் வழங்கப்பட்ட இந்தப் பகுதி, வில்லிபுரம் வில்லுபுரம் என்றெல்லாம் பெயர் பெற்று நிறைவில் விழுப்புரம் என்றானது என்கிறார்கள்.

இவ்வூரில் கயிலாச நாதர் கோயில் மூலவர் சந்நிதியும், பெருமாள் கோயில் மூலவர் சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளன. ஸ்வாமிகள் இருவரின் விழிகளும் ஒரே புறத்தை நோக்கி இருப்பதால், ‘விழி ஒரே புறம்’ என்று பெயர் வழங்கப்பட்டு, அதுவே, பின்னாளில் விழுப்புரம் ஆகிவிட்டது என்றும் கூறுவர்.

முதலாம் குலோத்துங்கன், கோப்பெரும சிங்கன், ராஜநாராயண சம்புவ ராயன், சடையவர்மன், சுந்தரபாண்டியன், விருபண்ண உடையார், சாளுவ நரசிங்கராசர், நரசிங்க நாயக்கர், கிருஷ்ண தேவராயர், அச்சுத மஹா தேவ மகாராயர், சதாசிவ தேவ ராயர், இரண்டாம் ரங்கதேவர் ஆகிய அரசர்களின் காலத்தில் இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடை பெற்று வந்துள்ளன.

ராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும், வலப்புறத்தில் விநாயகரும் இடப்புறத்தில் பாலமுருகனும் அருள் கிறார்கள். தெற்கில் மகா மண்டபத்தை ஒட்டியபடி விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர் சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர் சந்நிதிக்கு எதிரில் பைரவர் சந்நிதியும் மகா மண்டபத்தில் நவகிரக சந்நிதியும் உள்ளன.

கருவறைச் சுற்றில் வடக்கு நோக்கி துர்கை, பிரம்மன், மேற்கு நோக்கி லிங்கோத்பவர், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.தனி சந்நிதியில் சண்டிகேஸ்வரரையும் தரிசிக்கலாம்.

கருவறையில் எழிலோவியமாக லிங்கத் திருமேனியராக அருள்கிறார் கயிலாசநாதர். அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடல் கடைந்தனர். அதிலிருந்து ஆலகால விஷம் உருவானது. உலக உயிர்களைக் காக்க சிவபெருமான் அந்த விஷத்தைத் திரட்டி அருந்தி, தன் தொண்டையில் தேக்கித் திரு நீலகண்டர் என்று சிறப்புப் பெற்றார்.

அவ்வாறு தேவர்களுக்கும் உலக உயிர்களுக்கும் அருள்பாலித்த சிவ பெருமான், பின்னர் இந்தத் தலத்தில் வந்து அமர்ந்ததாகத் திருக்கதை உண்டு. இப்போதும் தன்னைத் தேடி வந்து துயர் நீக்க வேண்டிக்கொள்ளும் அன்பர்களின் இன்னல்கள் அனைத்தையும் நீக்கியருள்கிறார் கயிலாசநாதர்.

அன்னை இங்கே அருள்மிகு பிரஹன்நாயகி யாக அருள்கிறாள். விழுப்புரம் அருகே உள்ள தலம் திருவாமாத்தூர். ஆதிகாலத்தில் இந்த இரண்டு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்று இருந்ததாகவும் நாளடைவில் சுரங்கம் தூர்ந்துபோனதாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.

திருவாமாத்தூரிலும் விழுப்புரம் கோயிலி லும் அன்னை மேற்கு நோக்கியே அருள் பாலிக்கிறாள். மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு கரங்களில் வரத - அபய முத்திரை களைக் காட்டி அருளும் இந்த அன்னையின் திருமேனி, பிற்கால பிரதிஷ்டையாக இருக்கலாம் என்கிறார்கள்.

மகான் வண்ணச் சரபம் தண்டபாணி சுவமிகள் இந்தத் தலத்தின் இறைவனைப் பாடிப் பரவியுள்ளார். இத்தலத்து விருட்சமாக வில்வமரம் திகழ் கிறது.

அம்பிகை
அம்பிகை


“வியாழன்தோறும் இங்கு வந்து அருள்மிகு தட்சிணா மூர்த்தியை வழிபட்டுச் சென்றால் திருமண பாக்கியம் கைகூடும். 11 வாரங்கள் செவ்வாய்க் கிழமைகளில், ராகு காலத்தில் இங்குள்ள துர்கையை வணங்கி வழிபட்டால் கல்யாண வரம் கிடைக்கும்; குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு அமையும்.

மிகுந்த கடன் தொல்லையால் துன்பப் படுவோர் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபட்டுச் சென்றால் தீராத கடன்கள் அனைத்தும் தீரும்; வறுமை நிலை நீங்கி செல்வ வளம் சேரும்.

மேலும், பல்வேறு மனக்குறைகளை மனத்தில் தாங்கியபடி, அவை நீங்கவேண்டும் எனும் பிரார்த்தனையுடன் கயிலாசநாதரை வழிபட ஏராளமான அன்பர்கள் வருகின் றனர். அவர்கள் ஸ்வாமியை தரிசித்த நொடியிலேயே தங்களின் மனக்குறைகள் என்ன என்பதே மறந்து மனநிறைவு ஏற்படுவ தாகக்  கூறுகின்றனர்.

பெண்கள் பலர் பெளர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்துக்கு வந்து அம்பாளை வேண்டி, நோன்பு இருப்பதும் உண்டு. இதனால் சர்வ மங்கலமும் உண்டாகும்; மாங்கல்ய பலம் பெருகும்’’ என்று இக்கோயிலின் பிரார்த்தனைச் சிறப்புகளை விவரித்தார், இந்தக் கோயிலின் வைத்தியநாத சிவாசார்யர்.

விழா வைபவங்களும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம், சித்ரா பெளர்ணமியில் 1008 சங்காபிஷேகம், வைகாசி வசந்த உற்சவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமா வாரங்கள், மார்கழி ஆருத்ரா என விழாவை பவங்களும் பிரதோஷம் முதலான வழிபாடு களும் சிறப்புற நடைபெறுகின்றன இந்தத் திருக்கோயிலில்.

வாய்ப்பு ஏற்படும்போது நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் சென்று விழுப்புரம் கயிலாசநாதரையும் பிரஹன் நாயகியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்; அந்த அம்மையப்பனின் அருளால் உங்கள் குடும்பத்தின் குறைகளும் நீங்கும் வீட்டில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.பஞ்சாமிர்தத்தில் ஐந்து பொருள்கள்!

பஞ்சாமிர்தம் இறை அபிஷேகங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. வாழைப்பழம், தேன், சர்க்கரை, பால், நெய் ஆகிய ஐந்தையும் கலந்து பஞ்சாமிர்தம் செய்வது வழக்கம்.

காலப்போக்கில் வாழைப்பழத்துடன் வேறு பழங்களையும் சேர்த்துப் பஞ்சாமிர்தம் தயார் செய்யப் படுகிறது. சில இடங்களில் வாழை, தேங்காய்த் துருவல், தேன், நெய், பால் ஆகிய ஐந்தைக் கலந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கின்றனர். கஷ்டங்களைக் களைந்து இனிய வாழ்வைப் பெற, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது விசேஷம்!

- சி.மீனா, வேலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு