மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த திங்கட்கிழமை (5.12.2022) அன்று திருமலை திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு இஸ்திகபல் (Istikaphal) மரியாதை வழங்கப்பட்டது. அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பாரெட்டி மற்றும் செயல் அலுவலர் தர்மாரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். திருமலையின் உயர்ந்த மரியாதையாகக் கருதப்படும் இஸ்திகபல் மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு வந்தார். அங்கே அவருக்கு உரிய மரியாதைகளோடு வரவேற்பு வழங்கப்பட்டது. திங்கட்கிழமை சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக சுவாமி புஷ்கரிணிக்குச் சென்று வேண்டுதல்கள் செய்து பின் வராக சுவாமியை தரிசனம் செய்தார். அதன் பின் அவர் மகாதுவாரம் எனப்படும் வாயிலுக்குச் செல்ல அங்கே குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்படும் இஸ்திகபல் என்னும் மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் பக்திப் பரவசத்தோடு சுவாமி தரிசனம் செய்தார் முர்மு. தேவஸ்தானம் சார்பில் அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
‘இஸ்திகபல்’ மரியாதை என்றால் என்ன?
திருமலை திருப்பதியில் முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்படும் ‘இஸ்திகபல்’ மரியாதை என்றால் என்ன என்பது குறித்து விசாரித்தோம். அப்போது திருமலையில் வழங்கப்படும் இரண்டு விதமான மரியாதைகள் குறித்த தகவல்களை அடியவர்கள் வழங்கினர்.
திருமலை திருப்பதியில் பெரிய மரியாதை, சின்ன மரியாதை என்று இரண்டு மரியாதைகள் வழங்கப்படுவது உண்டு. பெரிய மரியாதை என்பது ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள் ஆகியோர் எழுந்தருளும்போது செய்யப்படும் மரியாதை. மகாதுவாரம் அருகே மடாதிபதி வந்ததும் பெருமாள் சடாரியை எழுந்தருளச் செய்து அங்கே அவர்களுக்கு சடாரி முதலிய மரியாதைகள் செய்து உள்ளே அழைத்துச் செல்வர்.

சின்ன மரியாதை என்பதுவே இஸ்திகபல். பெருமாள் பாதத்தில் இருந்து சந்தனம், பச்சைக்கற்பூரம், லட்டுப் பிரசாதம் ஆகியவற்றை மகாதுவாரத்துக்கே கொண்டு வந்து அவர்களுக்கு வழங்கி கௌரவித்து உள்ளே அழைத்துச் செல்வர். இந்த இரண்டு மரியாதைகளின் தாத்பர்யம் என்னவென்றால் பெருமாள் மனமுவந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதேயாகும்.
குடியரசுத் தலைவர் இந்தப் பயணத்தின் போது அலிபிரியில் இருக்கும் சப்தகிரி கோபிரதட்சண மந்திரம் எனப்படும் கோசாலைக்குச் சென்று பார்வையிட்டார். அங்குள்ள பசுக்களுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டார். திங்கட்கிழமை மதியம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவருக்குப் பூர்ண கும்ப மரியாதையும், சேஷ வஸ்திரமும் வழங்கப்பட்டது.