Published:Updated:

`கோகுலாஷ்டமி எப்போது?’ - விளக்குகிறார் பிரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி

இப்போது பெரும்பாலானவர்கள் நாள்காட்டி பார்த்தே தேதிகளைப் பண்டிகைகளை அறிந்துகொள்கிறார்கள். நாள்காட்டி வெளியிடுகிறவர் யாரிடம் அந்தத் தகவல்களைப் பெறுகிறார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், காலம் காலமாக நாம் பயன்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துவதே உத்தமமானது.

சில நாள்களாக சமூக வலைதளங்களில் கோகுலாஷ்டமி பற்றிய பதிவு ஒன்று பரவி வருகிறது. அந்தப் பதிவின் சாரம் இந்த ஆண்டு கோகுலாஷ்டமி என்றைக்கு என்பதுதான். நாள்காட்டிகளில் வரும் 11.8.2020 அன்று கோகுலாஷ்டமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று வாக்கியப் பஞ்சாங்கத்திலும் 11-ம் தேதியே கோகுலாஷ்டமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது தவறு என்றும் அடுத்தமாதம் 10-ம் தேதிதான் கோகுலாஷ்டமி வருகிறது என்கிறது அந்தப் பதிவு. இதனால், கோகுலாஷ்டமி என்றைக்குக் கொண்டாடுவது என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது. எனவே, கோகுலாஷ்டமி என்றைக்கு கொண்டாட வேண்டும் என்பதுகுறித்து அறிந்துகொள்ள பிரம்மஸ்ரீ சேஷாத்ரி நாத சாஸ்திரிகளிடம் கேட்டோம்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

``பொதுவாக கோகுலாஷ்டமி என்று நாம் கொண்டாடுவோம். அதேபோன்று அடுத்த ஆவணி மாதம் வைணவர்கள் தங்களின் பாஞ்சராத்ர ஆகமப்படி ஸ்ரீ ஜயந்தி கொண்டாடுகிறார்கள். அது செப்டம்பர் 10-ம் தேதி வருகிறது. இது அவர்களுக்கென்று இருக்கும் ஆகமங்களின் அடிப்படையில் காலம் காலமாக அவர்கள் கொண்டாடி வருவது. ஆனால், பொதுவாக நாம் அனைவரும் கொண்டாடும் கோகுலாஷ்டமி என்பது பஞ்சாங்கத்தின் படி 11.8.2020 அன்றே வருகிறது.

இப்போது பெரும்பாலானவர்கள் நாள்காட்டி பார்த்தே தேதிகளைப் பண்டிகைகளை அறிந்துகொள்கிறார்கள். நாள்காட்டி வெளியிடுகிறவர் யாரிடம் அந்தத் தகவல்களைப் பெறுகிறார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், காலம் காலமாக நாம் பயன்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துவதே உத்தமமானது. அப்படிப் பார்த்தால் பஞ்சாங்கப்படி 11-ம் தேதியே கோகுலாஷ்டமி.

ஆவணி மாதம் வரும் அஷ்டமியில் இதே கோகுலாஷ்டமியைக் கொண்டாடுவதில் ஒரு சிறு பிரச்னை உள்ளது. அப்போது பித்ருக்களை வழிபடும் மகாளயபட்சம் தொடங்கிவிடுகிறது. மகாளய பட்சம் என்பது அனைவரும் முன்னோர் வழிபாடு செய்யும் காலம். மகாளய பட்சத்தின் 15 நாள்களும் பித்ரு ஆராதனைக்கே முன்னுரிமை வழங்குவது வழக்கம். ஆவணியில் வரும் ரோகிணி, அஷ்டமியைக் கணக்கிட்டால் அதனிடையே மத்யாஷ்டமி எனப்படும் பித்ரு வழிபாட்டுக்குரிய முக்கியமான நாள் வருகிறது. பித்ரு வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நாளில் நாம் இந்தக் கோகுலாஷ்டமியைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம்... ஆவணி மாத விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoCards

அது பித்ரு வழிபாட்டுக்கு இடையூறாகிவிடக் கூடாது என்பதன் காரணமாகவே நாம் அன்றைய நாளில் கோகுலாஷ்டமி வழிபாடு செய்வதைத் தவிர்க்கிறோம். பெரியவர்கள் வகுத்திருக்கும் காலங்காலமான சாஸ்திரப்படியே நாம் பண்டிகைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். வழக்கமாக ஆவணி அவிட்டம் முடிந்த 8-ம் நாள் கோகுலாஷ்டமி என்பது பல நூறு ஆண்டுக்கால வழக்கம். அப்படிப் பார்த்தாலும் ஆகஸ்ட் 11-ம் தேதியே கோகுலாஷ்டமி.

கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி

இவற்றை எல்லாம் ஆலோசித்து நீங்களே முடிவு செய்து கோகுலாஷ்டமி கொண்டாடுங்கள். ஆனால், கொண்டாடாமல் மட்டும் விட்டுவிட வேண்டாம். எதையும் பிரித்துப் பார்ப்பதை விட்டுவிட்டு அவரவர்களுக்கு எது சாஸ்திரமோ அதைப் பின்பற்றுங்கள்” என்று விளக்கமளித்தார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று காலை 7.35 வரை மட்டுமே சப்தமி திதி. பிறகு நாள் முழுவதும் அஷ்டமி திதியே உள்ளது. எனவே, அன்று கோகுலாஷ்டமி கொண்டாடுவது சாலப் பொருத்தமானது என்பது சாஸ்திரம் அறிந்தவர்களின் கருத்து.

அடுத்த கட்டுரைக்கு