Published:Updated:

மீசையில்லாமல் சாந்தமாக அருளும் பார்த்தசாரதிப் பெருமாள்... என்றைக்கு தரிசிக்கலாம்?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
News
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்

எப்போதும் மீசையோடும், கவசம், இடை வாள், உடை வாள், பட்டு பீதாம்பரங்களுடனும் தரிசனம் கொடுக்கும் பார்த்தசாரதிப் பெருமாள், ஐந்து நாள்கள் மட்டும் மீசை இன்றிக் காட்சி கொடுப்பார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோயில். பெருமாளின் திருநாமங்களில் ஒன்று பார்த்தசாரதி என்பது. மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்குத் தேரோட்டியதால் அவருக்குப் பார்த்த சாரதி என்னும் திருநாமம் ஏற்பட்டது.

இந்தத் தலத்தில், வருடம் முழுவதுமே விழாக்கள் களைகட்டும். தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தவண்ணம் இருப்பார்கள். கருவறையில், நின்ற திருக்கோலத்தில் பெருமாள் மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தரும் திருத்தலம் இது.

அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள்
சென்னை - திருவல்லிக்கேணி
அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் சென்னை - திருவல்லிக்கேணி

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், ராமாநுஜர் போன்றவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் திருத்தலத்தில் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் அந்த நாளில் வந்து பெருமாளை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஜனவரி 4-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதையொட்டி முதல் பத்து நாள்கள் பகல் பத்து உற்சவம் நடைபெறும். அதை அடுத்துவரும் ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு என்று பெரும் சிறப்புடன் கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசியைத் தொடர்ந்து அடுத்த பத்து நாள்கள் ராப்பத்து உற்சவம் நடைபெறும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த உற்சவங்களுக்குப் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் அவற்றில் ஒன்று மீசை. எப்போதும் மீசையோடும், கவசம், இடை வாள், உடை வாள், பட்டு பீதாம்பரங்களுடனும் தரிசனம் கொடுக்கும் பார்த்தசாரதிப் பெருமாள், ஐந்து நாள்கள் மட்டும் மீசை இன்றிக் காட்சி கொடுப்பார்.

பொதுவாக, சாரதிக்கு உரிய அங்கலட்சணத்தின் படி திருவல்லிக்கேணி மூலவருக்கு மீசை உண்டு. ஆனால் கார்த்திகை தீபம் முடிந்து அன்றைய ராத்திரி முதல் மூலவர் தைலகாப்பில் (சாம்பிராணி தைலம்) எகாந்தமாக இருப்பார். இந்த நாள்களில் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. பகல் பத்து ஐந்தாம் நாள் முதல் திருவல்லிக்கேணி பாசுர தொடக்கம் (திருமொழி). அன்று மாலை மூலவர் திரை திறக்கப்படும்.

அன்றிலிருந்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்றுமுதல் பகல் பத்து சாற்றுமுறை முடியும் வரை பெருமாள் மீசை இல்லாமல் மிகவும் எளிமையாக சாந்தமாகக் குழந்தை போன்று காட்சி அருள்வார். இந்தக் கோலத்தில் பெருமாளை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு என்பார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்

வைகுண்ட ஏகாதசி முதல் சாரதிக்கான அனைத்து அங்க லட்சணங்களுடன் (கவசம், இடை வாள், உடை வாள், மீசை, பட்டு பீதாம்பரங்களுடன்) மீண்டும் வருடம் முழுவதும் காட்சியளிப்பார். வைகுண்ட ஏகாதசி முடிந்து இராபத்து முடியும் வரை தினமும் ஓவ்வொரு நாளும் விதவிதமான வெல்வெட் கோட்டுகள் அணிவிக்கப்பட்டுப் பெருமாள் கண்கவரும் தோற்றத்தில் கொடுப்பார்.

இந்த ஆண்டு பெருமாள் மீசை இல்லாமல் காட்சி கொடுக்கும் வைபவம் ஜனவரி 8 - ம் தேதி முதல் 12 - ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் நிறைவாக ஜனவரி 13 - ம் தேதி வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெற இருக்கிறது. இந்த நாள்களில் வாய்ப்பிருக்கும் பக்தர்கள் பெருமாளை சென்று சேவித்து அவரின் அருளுக்குப் பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கிறார்கள் திருக்கோயில் நிர்வாகத்தினர்.