Published:Updated:

அத்திவரதரை நிரந்தரமாக ஆலயத்தில் வைத்துவழிபடலாமா - என்ன சொல்கிறது ஆகமம்? #Video

அத்திவரதரை நிரந்தரமாக வெளியிலேயே வைத்து வழிபடலாம் என்று ஶ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத் தலைவர் சடகோபன் ராமாநுஜ ஜீயர் தெரிவித்த கருத்து சாத்தியமா என்பது குறித்து ஆன்மிகச் சொற்பொழிவாளர் அனந்த பத்மநாபச்சார்யார் தன் கருத்துகளை முன்வைக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காஞ்சிபுரம் கடந்த 23 நாள்களாகத் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. காரணம், அத்திவரதர். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள அனந்தசரஸ் தீர்த்தக் குளத்தில் மூழ்கியிருந்த ஆதி மூர்த்தியான அத்திவரதரை வெளியே எடுத்து 48 நாள்கள் மக்களின் தரிசனத்துக்கு வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு 1937-ம் ஆண்டிலும் 1979-ம் ஆண்டிலும் அத்திவரதரை எழுந்தருளச்செய்து ஆராதனைகள் செய்தனர். 40 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் தரிசனம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதுவரை சுமார் 30 லட்சம் மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

அத்தி வரதர்
அத்தி வரதர்

இந்நிலையில் நேற்று ஶ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் தலைவர், ஶ்ரீ சடகோபன் ராமாநுஜ ஜீயர் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். '48 நாள்கள் வைபவம் முடிந்தபின் மீண்டும் அத்திவரதரை நீருக்குள் எழுந்தருளப்பண்ண வேண்டியதில்லை... நிரந்தரமாக ஆலயத்திலேயே வைத்து வழிபடலாம்' என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறும்போது, 'திருடர் பயம் மற்றும் படையெடுப்புகளின் காரணமாகவே அந்தக் காலத்தில் அத்திவரதரை நீருக்குள் மறைத்து வைத்தனர். தற்போது அந்த நிலையில்லை. தேவையில்லாமல் பெருமாளை காற்றுகூடப் புகமுடியாத இடத்தில் அமிழ்த்திவைப்பது சரியல்ல. எனவே, அத்திவரதரை ஆலயத்திலேயே நிரந்தரமாக வைத்து வழிபடலாம்' என்கிறார் அவர்.

அனந்த சரஸ்
அனந்த சரஸ்

மேலும், இவ்வாறு செய்வதன் மூலம், திருப்பதியைப்போல காஞ்சிபுரமும் சிறப்பு பெறும். இதுகுறித்து மடாதிபதிகளுடன் கலந்து பேசிவருகிறேன். பின்பு முடிவெடுத்து, அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர், 'அத்திவரதரை வெளியில் வைப்பதுதொடர்பாக இந்து அறநிலையத்துறையே முடிவு செய்யும்' என்று தெரிவித்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'அத்திவரதரை நிரந்தரமாக வெளியிலேயே வைப்பது தொடர்பாக ஆகம விதிகளை முன்வைத்தே முடிவு செய்யப்படும்' என்றார். இந்நிலையில், இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமடைந்துள்ளன. "அத்திவரதரை நிரந்தரமாகக் கோயிலில் வைத்திருப்பது சாத்தியமான ஒன்றுதானா?"

வரதராஜ பெருமாள்
வரதராஜ பெருமாள்

ஆன்மிகச் சொற்பொழிவாளரும் செயற்பாட்டாளருமான அனந்த பத்மநாபாச்சார்யாரிடம் கேட்டோம். "அத்திவரதரை, நிரந்தரமாக வெளியே வைத்து வழிபடுவதில் எந்தத் தவறும் இல்லை. கோயிலுக்கு உள்ளேயே ஓரிடம் ஒதுக்கி நம்மால் அவரை வைத்து ஆராதனை செய்ய முடிந்தால் அதில் தவறேதும் இல்லை. அதேநேரம், இது உடனடியாக விடை கண்டுபிடிக்க வேண்டிய விஷயம் இல்லை. இதுகுறித்து மடாதிபதிகள், ஆகம வல்லுநர்கள், கோயில் பட்டாச்சார்யார்கள், செயற்பாட்டாளர்கள், நிர்வாக ஊழியர்கள், ஊர்மக்கள் என அனைவரிடமும் கலந்து பல பிரச்னைகளைப் பேசி முடிவெடுத்துப் பின் தெரிவிக்க வேண்டிய கருத்து.

அத்திவரதரை ஆலயத்துக்குள்ளாகவே நிரந்தரமாக எழுந்தருளப்பண்ணுவதால், எதிர்காலத்தில், பெருமாளின் நித்திய உற்சவங்களில் எந்தக் குறையும் ஏற்பட்டுவிடக் கூடாது.

அத்தி வரதர்
அத்தி வரதர்

அத்திவரதர் உற்சவம் காரணமாகக் கடந்த நான்கு நாள்களாக கோயிலின் மூலவருக்கு ஆராதனைகள் செய்து பின் கருவறையை மூடிவிடுகிறார்கள். பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியவில்லை.

மூலவரின் கருவறையை மூடிவைப்பதென்பது அவ்வளவு நல்ல விஷயமல்ல. இதேபோன்ற அசௌகரியங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்வாமிக்கு நடைபெறும் உற்சவங்களிலும் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது.

அத்தி வரதர்
அத்தி வரதர்
விகடன்

பிற்காலங்களில் நடக்கும் உற்சவங்களில் அத்திவரதருக்கு என்ன மாதிரியான சேவைகள் நடைபெறும்? குறிப்பாக, தூப்புல் வேதாந்த தேசிகரின் மங்களாசாசன உற்சவத்தின்போது, எந்ததெந்த இடங்களில் உற்சவங்கள் நடைபெறும் என்பதெல்லாம் முடிவெடுத்த பிறகு, இதுபற்றி முடிவுசெய்ய வேண்டும். இல்லையென்றால் உற்சவ காலங்களில் தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமாகிவிடும்..." என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு