Published:Updated:

தலையெழுத்து மாறும்... திருப்பட்டூர் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு பிரார்த்தனை ஏன், எதற்கு, எப்படி?

திருப்பட்டூர் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு
திருப்பட்டூர் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு

மஞ்சள் என்றாலே அது மங்களம் என்றுதானே பொருள். மங்களகரமாக அனைவருக்கும் அருளும் இறைவனுக்கு மஞ்சள் சாத்துவது பொருத்தம்தானே... அதே வேளையில் நவகிரகங்களில் குருபகவானின் அதிபதி பிரம்மா. குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள்.

இறைவன் கருணைவடிவானவன். ஆனால் அவன் உருவாக்கிய இந்தப் பிரபஞ்சமோ ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு இயங்குவது. அதிலும் மானுட வாழ்க்கை பிரம்மன் எழுதிய விதியின் படியே நிகழ்கிறது. பிரம்மனோ முற்பிறவியின் வினைகளைக் கணக்கில் கொண்டு இப்பிறவியைப் படைக்கிறான். விதியை பிரம்மன் படைக்க அந்தப் பரமேஸ்வரனோ மக்கள் மேல் கொண்ட கருணையால் விதிவிலக்கை உருவாக்குகிறான்.

பிரம்மபுரீஸ்வரர்
பிரம்மபுரீஸ்வரர்

பிரம்மன் தன் அகந்தையால் தன் படைப்புத் தொழிலை இழந்தான். மீண்டும் அதைப் பெற பூலோகத்தில் வந்து 12 லிங்கங்களை உருவாக்கி வழிபட்டான். இதனால் மகிழ்ந்த ஈசன் மீண்டும் பிரம்மனுக்கு அந்தப் பதவியை அருளினார். மேலும், பிரம்மனின் துயர் தீர்த்த அந்தத் தலத்திற்கு வந்து பிரம்மனை வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் விதியை மாற்றி நல் அருளை வழங்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார். சிவனருளால் நாடிவரும் பக்தர்களின் தோஷங்களை நீக்கி அருளும் அனுக்கிரக மூர்த்தியாக மங்கள பிரம்மாவாக பிரம்மன் வீற்றிருக்கும் தலம் திருப்பட்டூர். இந்தத் தலத்தில் பிரம்மாவை மஞ்சள் காப்பு சாத்தி வழிபட்டு அவர் திருவடியில் நம் ஜாதகத்தை வைத்து வழிபட்டால் நம் விதி மாறும் என்பது நம்பிக்கை.

பிரம்மாவுக்கு ஏன் மஞ்சள் காப்பு?

மஞ்சள் என்றாலே அது மங்களம் என்றுதானே பொருள். மங்களகரமாக அனைவருக்கும் அருளும் இறைவனுக்கு மஞ்சள் சாத்துவது பொருத்தம்தானே... அதே வேளையில் நவகிரகங்களில் குருபகவானின் அதிபதி பிரம்மா. குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள். எனவே மஞ்சள் கொண்டு பிரம்மனுக்குக் காப்பிட்டு வணங்கினால், மனம் குளிர்ந்து குருபகவான் அருள்புரிவார் என்பது ஐதிகம். அதனால்தான் இங்கு பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு விசேஷமாகச் செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு முந்திய காலங்களில் பெரும்பாலும் எல்லா நாள்களிலும் மஞ்சள்காப்பு சாத்தப்படும். அதிலும் குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் இந்தத் தலத்தில் கூட்டம் அலைமோதும். மக்கள் அன்று மஞ்சள்காப்பில் பிரம்மாவை தரிசித்து அருள்பெறுவார்கள்.

திருப்பட்டூர் பிரம்மா
திருப்பட்டூர் பிரம்மா

யாரெல்லாம் மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள்?

தங்கள் தலையெழுத்து மாறவேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள் திருப்பட்டூர் வந்து தங்கள் ஜாதகத்தை பிரம்மனின் திருவடிகளில் வைத்து வழிபடுவர். திருமணத் தடை, ஆரோக்கியக் குறைபாடுகள், வேலைவாய்ப்பில் சிக்கல் என தங்களின் குறைகளை பிரம்மனின் சந்நிதியில் சொல்லி வேண்டுடிக்கொள்வர். அப்படி வேண்டிக்கொண்ட பிரச்னைகள் தீர்ந்ததும் மீண்டும் திருப்பட்டூர் வந்து சிவனை வழிபட்டுப்பின் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்தி பிராத்தனையை நிறைவேற்றுவர்.

"அபிஷேகம் மற்றும் மஞ்சள் காப்பு சாத்த 3,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்வார்கள். தங்களால் இயன்ற பக்தர்கள் மஞ்சள் காப்பு சாத்தி வழிபடலாம். இயலாதவர்கள் மஞ்சள் வாங்கி கோயிலில் சமர்ப்பித்தால் அதை மஞ்சள் காப்பில் சேர்த்துவிடுவார்கள். எனவே மஞ்சள் காப்பு சாத்த இயலவில்லையே என்ற கவலை தேவையில்லை" என்கிறார் கோயிலைச் சேர்ந்த பாஸ்கர குருக்கள்.

மஞ்சள் காப்பு சாத்த விசேஷநாள்கள்

பிரார்த்தனை நிறைவேறியதும் முன்னதாகப் பதிவு செய்துகொண்டு திருப்பட்டூர் வந்து பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்தி வழிபடலாம்.

மஞ்சள் காப்பு சாத்த உகந்த கிழமைகள்: திங்கள், வியாழன் நட்சத்திரங்கள்: திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்கள்

ஜன்ம நட்சத்திர தினத்தில் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்துவது மிகவும் விசேஷம்.

திருப்பட்டூர்
திருப்பட்டூர்

 குறைகள் தீர்க்கும் குருஹோரை தரிசனம் 

வியாழன் தவிர்த்த மற்ற நாள்களில் காலை 8.00க்குத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். வியாழக்கிழமைகளில் கோயில் நிர்வாகமே அந்தப் பொறுப்பை ஏற்பதால் காலை 5.30 மணிக்கே இந்த ஆராதனை தொடங்கிவிடும். காரணம் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே தரிசனம் செய்ய வருவார்கள். அதிலும் குருஹோரையான காலை 6.00 மணி முதல் 7.00 மணிவரை தரிசனம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

எனவே காலையிலேயே இந்த அலங்காரம் முடிவடைந்துவிடும். ஒருவேளை அலங்காரம் சாத்திவிட்டால் மறுநாளே அதை அகற்றிவிட்டு மீண்டும் புதிய அலங்காரத்தைச் செய்வோம். அகற்றப்பட்ட மஞ்சள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

திருப்பட்டூர் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு
திருப்பட்டூர் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு

பக்தர்கள் கவனத்துக்கு:

"இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டு பலன் அடைந்து மீண்டும் இங்குவந்து மஞ்சள் காப்பு சாத்துகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதன் மூலம் இந்தத் தலத்தின் மகிமையை அறிந்துகொள்ளலாம். தற்போது கொரோனா அச்சம் காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் பழம், பூ, அபிஷேகப் பொருள்கள் அனைத்தும் கொண்டுவரத் தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேண்டிக்கொண்டு மஞ்சள் காப்பு சாத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பாக வியாழக்கிழமை தவறாது மஞ்சள்காப்பு சாத்துகிறோம். இதை தரிசித்தாலே சகல நன்மைகளும் வந்துசேரும். சீக்கிரம் இயல்பு நிலைக்குத் திரும்பி பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களைச் செலுத்தும் நிலைவரவேண்டும் என்று அந்த பிரம்மபுரீஸ்வரரை வேண்டிக்கொள்கிறேன்" என்றார் பாஸ்கர குருக்கள்.

அடுத்த கட்டுரைக்கு