Published:Updated:

பிள்ளை வரம் தரும் பிரார்த்தனை!

ஶ்ரீநிவாஸப் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநிவாஸப் பெருமாள்

கமலாபுரம் ஶ்ரீநிவாசப்பெருமாள் ஆலயம்

பிள்ளை வரம் தரும் பிரார்த்தனை!

கமலாபுரம் ஶ்ரீநிவாசப்பெருமாள் ஆலயம்

Published:Updated:
ஶ்ரீநிவாஸப் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநிவாஸப் பெருமாள்

திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கமலாபுரம். திருமகளின் அருள் சாந்நித்தியம் பொங்கிப் பெருகும் தெய்வத் தலம் இது. இங்கே வந்து ஶ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளை மனமுருகப் பிரார்த்தனை செய்து வழிபடுவோருக்கு எல்லாவிதமான நன்மைகளும் கைகூடுகின்றன. திருமணத் தடை நீங்கி விரைவில் மணப்பேறு வாய்க்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

பிள்ளை வரம் தரும் பிரார்த்தனை!

லகின் நாயகனாக திருமாலை எவ்விதம் போற்றுகிறோமோ, அப்படித்தான் மகா லட்சுமியும் சர்வலோக நாயகியாகத் திகழ் கிறாள். `திரு’வாகிய அலைமகள் இல்லையென்றால் திருமாலே இல்லை எனலாம் என்பார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.
`அண்டபகிரண்டத்தையும் காத்து ரட்சிக்கும் சாட்சாத் திருமாலுக்கே மகா லட்சுமிதான் சர்வமங்கலங்களையும் அளிக்கிறாள்; அவள் சொல் எனில், பெருமாள் பொருளாகத் திகழ்கிறார்’ என்றெல்லாம் பலவாறுப் போற்றிப் பரவுகின்றன ஞான நூல்கள். உயிர்களுக்கெல்லாம் மாலவனின் திருவருள் கடாட்சம் கிடைக்கிறது எனில், அது அந்த அன்னையின் பரிந்துரையால்தான் என்கின்றன புராணங்கள்.

இவ்வுலகின் நன்மைக்காக, ஶ்ரீமந் நாராயணன் என்னென்ன அவதாரங்கள் நிகழ்த்தினாலும் அன்னை மகாலட்சுமியும் உடன் அவதரிக்கிறாள். சில தருணங்களில், சில காரணங்கள் தொட்டு, பிராட்டி தனியே பூவுலகம் வந்து தவமிருந்தும் முனிவர்களுக்கு மகவாகப் பிறந்து வளர்ந்தும் அருள்பாலித்திருக்கிறாள். அதனால் புண்ணியம் பெற்ற தலங்கள் பல. அவற்றில் ஒன்றுதான் கமலாபுரம். திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம்.

பிள்ளை வரம் தரும் பிரார்த்தனை!

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெறாவிட்டாலும், திருமகளின் அருள் சாந்நித்தியம் பொங்கிப் பெருகும் தெய்வத் தலம் இது. இங்கே ஶ்ரீதேவி-நீளாதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஶ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். ஶ்ரீதேவி - பூதேவி சமேதராக அருள்மிகு ஶ்ரீநிவாஸ வரதரும் கருவறையிலேயே அருள்பாலிக்கிறார்.

அன்னை மகாலட்சுமி இந்தத் தலத்தில் தவமியற்றிப் பெருமாளைச் சேர்ந்ததால், இந்தத் திருத்தலத்துக்குக் கமலாயபுரம் என்று பெயர் வந்ததாம். அதுவே பிற்காலத்தில் கமலாபுரம் என்று மருவியது என்கிறார்கள் பக்தர்கள். வேறோரு தகவலும் உண்டு. பங்கஜ மகரிஷி எனப்படும் கமல முனிவர் வாசம் செய்து பெருமை பெற்ற தலம் ஆதலால், கமலாபுரம் எனப் பெயர்பெற்றது எனும் தகவலும் கூறப்படுகிறது.

சைவ சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரரின் தாயார் இசைஞானியார் இவ்வூரில் பிறந்து வாழ்ந்தவர்; பின்னரே அவர் திருப் பூவனூர் சென்று அங்கே முக்தி அடைந் தார் என்றும் தகவல்கள் உண்டு.

மட்டுமன்றி துவாபர யுகத்தில் பாண்ட வர்கள் இந்தப் பகுதிக்கு வந்தார்கள். இங்கே அருகிலுள்ள நதிக்கரையில் தங்கியிருந்து, நித்ய அனுஷ்டானங்களைச் செய்து பெருமாளை வழிபட்டார்கள். இதையொட்டி அந்த நதிக்குப் பாண்டவர் நதி என்றே பெயர் அமைந்ததாம்.

பிள்ளை வரம் தரும் பிரார்த்தனை!

அமைதியான சூழலில் அழகுற அமைந்திருக்கிறது, 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு லட்சுமி நாராயணர் ஆலயம். கருவறையில், ஶ்ரீதேவி-நீளாதேவி சமேதராக மூலவர் லட்சுமி நாராயண பெருமாளும், ஶ்ரீதேவி-பூதேவியுடன் ஶ்ரீநிவாஸ வரதரும் கருணைபொழியும் மூர்த்தியராய் அருள் கிறார்கள்.

கருவறைக்கு வெளியே அஞ்சலி ஹஸ்தத்துடன் அனுமனின் தரிசனம் சிலிர்க்கவைக்கிறது. கருடாழ்வார், விஷ்வக்சேனர், ஶ்ரீலட்சுமி நரசிம்மர், ஶ்ரீவிஷ்ணு துர்கை, ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஆகியோரையும் தரிசிக்க முடிகிறது.

ஶ்ரீலட்சுமிநாராயணரின் தீவிர பக்தையான மாலா, இந்தப் பெருமாளின் மகிமையைப் பகிர்ந்துகொண்டார்.

“இங்குள்ள எல்லோருக்கும் கண்கண்ட தெய்வம் இந்தப் பெருமாள்தான். பெருமாள் காரியம் எதுவாயினும் நாங்கள் எல்லோருமே ஒன்றுசேர்ந்து செய்கிறோம். ராமநவமி, அனுமன் ஜயந்தி, திருவிளக்கு பூஜை என்று எல்லா வழிபாடுகளிலும் தவறாமல் பங்கேற்போம். இங்கே என்ன பிரார்த்தனையை முன் வைத்தாலும் விரைவில் அதை நிறைவேற்றித் தந்திடுவார் இந்தப் பெருமாள்.

ஒருகாலத்தில் இந்த அக்ரஹாரத்தில் எல்லா வீடுகளுமே ஓட்டு வீடுகள்தான். இப்போது மாடிவீடுகளாகிவிட்டன. பிள்ளைகள் எல்லோரும் படித்து நல்ல நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். பெருமாள் அருளால் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை’’ உள்ளம் நெகிழ விவரித்தார் மாலா.

ஆலயத்தில் நித்ய திருமஞ்சன ஆராதனை, அலங்கார-அர்ச்சனைகளைச் செய்து வரும் ரெங்கராஜன் விழா வழிபாட்டுச் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

“சித்திரை வருஷப்பிறப்பு, நரசிம்ம ஜயந்தி, ராமநவமி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற புனித தினங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அதேபோல், மார்கழி 30 தினங்களும் ஶ்ரீஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் முழங்க திருப்பள்ளியெழுச்சி ஆராதனைகளும், தை மாதத்தில் பொங்கல் விழா மூன்று தினங்களும் கோலாகலமாக நடைபெறும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் விசேஷ திருமஞ்சனம், ஆராதனைகளோடு வழிபாடுகள் நடக்கும்.

இங்கே வந்து ஶ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளை மனமுருகப் பிரார்த்தனை செய்து வழிபடுவோருக்கு எல்லாவிதமான நன்மைகளும் கைகூடுகின்றன. திருமணத் தடை நீங்கி விரைவில் மணப்பேறு வாய்க்கும்; வேலை வாய்ப்புகள், புத்திரப்பேறு, நோய் நிவர்த்தி என பக்தர்கள் வேண்டுவதை வேண்டியபடி அருள்கிறார் எங்கள் பெருமாள்.

மாதம் தோறும் சுவாதி நட்சத்திர நாளன்று நரசிம்மருக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடு செய்கிறோம். அதேபோல், நரசிம்ம ஜயந்தியும் 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். அப்போது, கோயிலுக்கு வந்து ஶ்ரீநரசிம்மரை வழிபடுவோருக்குப் பில்லி-சூனியம், ஏவல் முதலான துஷ்டதேவதைகளால் ஏற்படும் பாதிப்புகள் யாவும் விலகும், தீராத வியாதிகள் தீரும். ஶ்ரீஹயக்ரீவருக்கும் 10 நாள்கள் விசேஷ வழிபாடுகள் நடக்கும். அவரை வழிபட் டால், கல்வி - தொழிலில் மேன்மை, நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் கன்னிப்பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து ஶ்ரீவிஷ்ணு துர்கையை வழிபட்டு, தாலிப் பாக்கியம் பெறுகிறார்கள்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலத்தை அருள்கிறாள் ஶ்ரீவிஷ்ணுதுர்கை. வைகுண்ட ஏகாதேசி மற்றும் சித்ரா பௌர்ணமி நாட்களில் சிறப்பு ஹோம வழிபாடு களுடன் ஸ்வாமி வீதியுலாவும் நடைபெறும்.

காரிய சக்தி ஆஞ்சநேயருக்கு அமாவாசை மற்றும் சனிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அப்போது அவருக்குத் தயிர்சாதம் படையிலிட்டு, அந்த அன்னத்தை அவரின் மேனியில் கட்டி வழிபடும் வழக்கம் இக்கோயிலின் சிறப்பு. இதனால், வேண்டிய காரியம் வெகுசீக்கிரம் நிறைவேறும். வியாழன், சனி மற்றும் அமாவாசை நாள்களில் இந்த வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. மற்ற நாள்களில் தினம் ஒருவருக்கு இந்த வாய்ப்பு தரப்படுகிறது.

குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், லட்சுமி நாராயணப் பெருமாளைத் தரிசித்து வழிபடுவதுடன், சந்நிதியில் ஶ்ரீசந்தான கிருஷ்ணன் விக்கிரகத்தை மடியில் வைத்து சுலோகம் பாடி வழிபடுவார்கள். இதனால் விரைவில் அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை’’ என்று சிலிர்ப்புடன் கூறுகிறார் ரெங்கராஜன்.

அற்புதமான இந்தப் புரட்டாசி மாதத்தில் நீங்களும் குடும்பத் துடன் சென்று ஶ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; அவரின் அருளால் நீங்கள் நினைத்தது நடக்கும்; வேண்டியது கிடைக்கும்!

எப்படிச் செல்வது?: திருவாரூர்-மன்னார்குடி பேரூந்து மார்க்கத்தில், திருவாரூரில் இருந்து சுமார் 15. கி.மீ. தொலைவில் உள்ளது கமலாபுரம். திருவாரூர், மன்னார்குடி இரண்டு ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உண்டு.

ஶ்ரீமத் பாகவதம் பிறந்தது இப்படித்தான்!

வேதங்களைத் தொகுத்து வகைப்படுத்தியவர் வேத வியாசர். மேலும் அவர், பைல முனிவர் மூலம் ரிக், வைசம்பாயனர் மூலம் யஜுர், ஜைமினி முனிவர் மூலம் சாமம், சுமந்து என்பவர் மூலம் அதர்வணம்- என சிஷ்ய பரம்பரை முறையில் வேதங்களைக் கற்பிக்க வழி செய்தார்.

வேதங்களின் உட்கருத்துகளை உணர்ந்துகொள்ள 18 புராணங் களையும் இயற்றினார். எனினும், வேத வியாசரின் மனதில் அமைதி இல்லை. இதை நாரதரிடம் கூறினார்.

உடனே அவர், ‘‘முனிவரே... புராணங்களையும், சாஸ்திரங்களையும் மட்டுமல்லாது பகவானுடைய பூரண குணங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். எனவே, பகவானின் கல்யாண குணங்களைப் பேசும் ஒரு நூலை நீர் இயற்றும்’’ என்றார். அதன்படியே `மத் பாகவதம்’ எனும் நூலை இயற்றினார் வியாசர்.

-கே.ஜெய்ராம், சென்னை-5