Published:Updated:

`உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்’ - திருமூலரின் வாக்கை உபதேசித்த குரு

Representational Image
Representational Image

பெரும் பொருள்செலவில் எழுப்பிய கோயிலைவிட மனக்கோயிலுக்கு அல்லவா ஈசன் முக்கியத்துவம் கொடுத்தார். இறைவன் மனதுள் குடியேறிவிட்டால் அனைத்து உற்சவங்களையும் நாம் அங்கு நிகழ்த்திவிடலாமே...

அந்த அன்பர் ஆலய தரிசனத்தில் அலாதியான ஆவல் கொண்டவர். நாள் தவறாமல் ஆலயம் சென்று தரிசனம் செய்வார். புதிய புதிய ஆலயங்களைத் தேடிச் சென்று தரிசனம் செய்வார். ஏதாவது ஒரு கோயில் குறித்த சந்தேகம் கேட்க வேண்டும் என்றால்கூட அவரைக் கேட்டால் போதுமே என்கிற அளவுக்கு அவரின் ஆலய தரிசனம் புகழ்பெற்றது. ஆனால், சமீப நாள்களாக ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை உருவாக்கியது. தெய்வ தரிசனம் இல்லாத நாள்கள் எல்லாம் வீண் நாள்களே என்று கருதினார். வாழ்க்கையில் பொருளே இல்லாததுபோலத் தோன்றியது.

கோயில்கள்
கோயில்கள்

ஒருநாள் அவருக்கு தூரத்து உறவினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். அவர் வயதில் பெரியவர். அவரைத் தன் குருவாகவே அன்பர் கருதுவதுண்டு. எனவே, அவரிடமும் தன் மன வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார் அன்பர். உடனே அந்த உறவினர் சிரித்துவிட்டார்.

``ஏன் சிரிக்கிறீர்கள்..?” என்று கேட்டார்.

``தம்பி, தவறாக நினைக்காதே. இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதனா என்று நினைத்தேன். பொருள் தேடும் உலகில் அருள் தேடும் உன்னை எண்ணி மகிழ்வோடும் பெருமையோடும் சிரித்தேன்” என்றார்.

``என்ன செய்வது...”

``சரி தம்பி வருத்தப்படாதே, நான் உனக்கு ஓர் உபாயம் சொல்கிறேன். நீ இதுவரை தரிசிக்காத கோயில் ஒன்று உள்ளது. அதைச் சென்று தரிசிக்கிறாயா...” என்று கேட்டார்.

இதைக்கேட்ட அன்பர் பரபரப்பானார்.

``என்ன, ஒரு கோயிலை நான் தரிசிக்க முடியுமா... அதுவும் நான் தரிசித்திராததா...”

``ஆம் தம்பி. நீ தரிசித்திராதது...”

``அப்படியா அதைத் தரிசிக்க வழிகாட்டுங்கள்” என்றார் அன்பர்.

கோயில்
கோயில்

சில நொடி மௌனத்துக்குப் பிறகு,

``தம்பி, கண்களை மூடிக்கொள். மனதை ஒருமுகப் படுத்து. உன் உள்ளத்துள் ஒரு கோயில் இருக்கிறது. அதைத் தரிசி. உன் நினைவைக் கடந்து உள்ளே போ. அங்கு நீ தரிசித்திராத பெருங்கோயிலை தரிசி” என்று சொல்லித் தன் தொலைபேசியை வைத்துவிட்டார்.

அன்பருக்குப் பெரும் கதவு திறந்ததுபோன்ற வெளிச்சம் மனதில் உண்டானது. தான் அதுநாள்வரை கற்ற அனைத்தையும் நினைவு கூர்ந்தார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே

- என்னும் திருமூலரின் வாக்கு நினைவுக்கு வந்தது.

திருமூலர் மட்டுமா... சகல ஞானிகளும் காட்டிய பாதையல்லவா அது. அன்பருக்குப் பூசலார் நாயனாரின் திருக்கதை நினைவுக்கு வந்தது.

மன்னன் கட்டிய கற்கோயிலில் குடிபுகுமுன்னர் பூசலார் கட்டிய மனக்கோயிலில் அல்லவா இறைவன் எழுந்தருளினார். அன்று மன்னரும் மற்றவரும் வியந்து அல்லவா போயினர். பெரும் பொருள்செலவில் எழுப்பிய கோயிலைவிட மனக்கோயிலுக்கு அல்லவா ஈசன் முக்கியத்துவம் கொடுத்தார். இறைவன் மனதுள் குடியேறிவிட்டால் அனைத்து உற்சவங்களையும் நாம் அங்கு நிகழ்த்திவிடலாமே...

கோயில்
கோயில்

இறைவன் பிரபஞ்ச வடிவானவன். பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது. பஞ்சபூதங்களும் நம் உடலிலும் மனதிலும் அடக்கம்.

`கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே,

கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே' என்ற சிவவாக்கியரின் வாக்கு எவ்வளவு சத்தியம்.

மனதுள் எழுந்தருளும் இறைவன் பிரமாண்டமானவன். அவனுக்கு நித்திய ஆராதனைகளை இந்த இயற்கை செய்துவருகிறது. அதைத்தான் பொய்கையாழ்வார்

`வையந் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை

இடராழி நீங்குவவே என்று' என்று பாடினார்.

இந்த உலகமே அகல். உலகில் மூன்றில் ஒரு பங்கான கடலே நெய். அதில் ஏற்றப்பட்ட சுடரே கதிரவன். இவ்வளவு பெரிய விளக்கில் ஆரத்தியை தினமும் இயற்கை பிரபஞ்ச வடிவான பரமனுக்குக் காட்டிவருகிறது. இதில் ஒரு நாளும் குறை தோன்றப் போவதேயில்லை. அப்படியிருக்கக் காணும் பொருளில் எல்லாம் கடவுளைக் காணக் கற்றுக்கொண்டுவிட்டால் என்ன குறை.

Representational Image
Representational Image

எல்லாம் சில காலம் என்று சொல்லியிருக்கிறார்கள் நம் ஞானிகள். அப்படி இந்தக் காலமும் விரைவில் கடந்துபோகும். மீண்டும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் காலம் வரும். அதுவரை மனக்கோயிலிலேயே நித்திய உற்சவங்கள் நடத்திட முடிவு செய்துவிட்டார் அன்பர். வழிகாட்டிய தன் குருவுக்கு மனதார நன்றி சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு