ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம்-23

உப்பிலி அப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
உப்பிலி அப்பன்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

வாழ்க்கையில் பல நாள்களை விரதம் இருந்தே கழித்த மனோரமா ஆச்சியைப் போல கடும் விரதங்களை அனுசரிக்க முடியாவிட்டாலும், ஒரு சில விரதங்களை நானும் கடைப்பிடிப்பது உண்டு. அதில் முக்கியமானது ஏகாதசி விரதம்.

இப்போதுதான் சில வருடங்களாக விரதங்கள் இருப்பதில்லை. ‘உப்பிலி அப்பன்’ என மருவிப்போன ‘ஒப்பிலா அப்பன்’ கோயிலுக்குப் போனபோது, நானும் வேண்டிக்கொண்டு விரதங்கள் இருந்திருக்கிறேன். அதன் பிறகுதான் ஏகாதசியில் விரதம் இருக்கத் தொடங்கினேன்.

எந்த ஷூட்டிங் என்றாலும் சாப்பிட மாட்டேன். தண்ணீர் மட்டும் அருந்துவேன். மிக அதிகமாகப் பசித்தால் இளநீர்... அதோடு சரி. ஆனால் பாருங்கள்... விரதக்காலங்களில் உடல் சோர்வா னாலும் பசிக்காது; உடல் அதற்குப் பழகிவிடும்.

நான் பல வருடங்கள் ஏகாதசி விரதத்தை விடாமல் அனுசரித்து வந்தேன். இடையில் பித்தப்பையில் ஒரு சிறிய அறுவைசிகிச்சை மேற்கொண்டதால், அதன் பிறகு உடல் லேசாகக் களைப்படையத் தொடங்கியது.

லட்சுமி கடாட்சம்-23

ஏகாதசி விரதம் இருந்துவந்த காலகட்டத்தில் ‘ஜன்னல்’ என்ற தொலைக்காட்சித் தொடர். நானும் பாலு சாரும் நடித்தது. ஒருநாள் மதிய உணவு இடைவேளை.

“ஏன் ரொம்ப டயர்டா தெரியற இன்னிக்கு?” என்று கேட்ட பாலு சார், “ஓ ஏகாதசியா... இவ சாப்பிட மாட்டாளே. தண்ணிய மட்டும்தானே குடிச்சிட்டிருப்பா!” என்றார்.

நான் ‘ஆமா’ என்றதும், “அதெல்லாம் இல்ல... சாமிக்கு எல்லாம் தெரியும். இந்த விரதத்தை எல்லாம் விட்டுட்டுச் சாப்பிடு. ஏம்ப்பா தம்பி... பால் இல்லேன்னா மோர் கொண்டு வாப்பா” என்று ஆரம்பித்துவிட்டார்.

“இல்ல சார்... வேணாம். பெருமாளுக்கான விரதம். நான் பால், மோர் எல்லாம் சாப்பிடமாட்டேன். சமைத்த எதையுமே சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடணும்னா பழங்கள்தான் சாப்பிடணும்” என்றேன்.

உடனே, “ஓரு கப் கட் ஃப்ரூட்ஸ் கொண்டாங்கப்பா” என்று அவர் கட்டளையிட்டதும் ஒரு தட்டு நிறைய நறுக்கிய பழத்துண்டுகள் வந்தன. அன்று மதியத்துடன் என் ஏகாதசி விரதம் நிறைவடைந்தது. பழத்தைச் சாப்பிட்டு விரதத்தை முடித்துவிட்டேன்.

அதன் பிறகு என் கணவர், எஸ்.பி.பி.யிடம் “சார்! இவ யார் சொன்னாலும் கேக்க மாட்டா. நான் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்துட்டேன் கேட்கலை. நீங்க சொல்லி விரதத்தை விட்டுட்டா” என்று கூறி நன்றி சொன்னார்.

என் கணவர் அடிக்கடி என்னிடம் கேட்பார்...

“நீ எதுக்காக விரதம் இருக்கிற?”

லட்சுமி கடாட்சம்-23

“எனக்கு இதைச் செய்து கொடுன்னு கேட்டெல்லாம் நான் விரதம் இருக்க மாட்டேன். என்னுடைய உடல், அது ஒரு பெரிய மெஷின் தானே. இந்த மெஷின் ரிப்பேர் ஆயிடாம நல்லாருக்கணும். இதில் எந்த வியாதியும் வரக்கூடாது. அதுக்காக நம்ம பெரியவங்க எல்லாம் ஏற்படுத்தியவைதானே விரதங்கள் எல்லாம். அதுக்காகத்தான் நான் விரதம் இருக்கிறேன். சாப்பிடாமல் இருக்கிறோம்... அதைச் சாமி பேரைச் சொல்லி இருந்துட்டுப் போவோமே. `எனக்கு அது பண்ணு இறைவா, இது பண்ணு இறைவா’ என்றெல்லாம் விரதம் இருக்கமாட்டேன்” என்றேன்.

ஏனெனில், என் சின்ன வயதில் அம்மா என்னிடம் சொன்னது மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

“கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கவே முடியாது நீ. உனக்கு எழுதப்பட்டது எழுதப்பட்டதுதான். அதை நீ அனுபவிச்சுத்தான் ஆகணும். ஆனால் அவர் மேல் பக்தியும் நம்பிக்கையும் உறுதியாக இருந்தால், அந்த வேதனையையும் வலியையும் தாங்கிக்கிற சக்தியை அந்த இறைவன் உனக்குக் கொடுப்பான். உன் உடலுக்குள் அந்த பகவான் இருக்கான். எல்லாமே இறை சொரூபம்தான்!”

லட்சுமி கடாட்சம்-23

அம்மாவின் இந்த வார்த்தைகள் 12, 13 வயதிலேயே எனக்கு வேதமாகிவிட்டன.

இளமையில் பல வருடங்கள் சஷ்டி விரதம் இருந்திருக்கிறேன். பள்ளிக்குச் சாப்பிடாமலேயே சென்றிருக்கிறேன். கேம்ஸ் பீரியடில் விளையாடி இருக்கிறேன். விரதக் காலத்தில் மேட்ச் கூட ஆடியிருக்கிறேன்.

‘என்னால் முடியும். எனக்குத் தலை சுற்றலோ, களைப்போ வராது. என்னை அந்த இறை சக்தி காக்கும்’ என்கிற நம்பிக்கையும் உறுதியும் நமக்குள் இருந்தால், நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நமக்கு முன் 100 அடி எடுத்து வைத்து நமக்கு உதவுவான்.

இதை நான் விரதக் காலத்தில் மட்டுமல்ல; பல காரியங்களில் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். கண்கூடாகப் பார்த்தும் இருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன் கபாலி கோயிலில் நான் நேரடியாகப் பார்த்த சம்பவமே இதற்கு அழுத்தமான ஆதாரம்.

- கடாட்சம் பெருகும்...

துளசியால் பூஜித்தால்...

உலகம் போற்றும் 108 திருப்பதிகளில், `விண்ணகரம்’ என்று சிறப்பிக்கப்படும் வைணவத் தலங்கள் - 6. அவற்றில் ஒன்றுஒப்பிலியப்பன் கோயில்.

மற்றவை:

சீராம விண்ணகரம்,

அரிமேய விண்ணகரம்,

வைகுந்த விண்ணகரம்,

நந்திபுர விண்ணகரம்,

பரமேச்சுர விண்ணகரம்.

இந்தத் தலம் ஆகாச நகரம், வைகுண்ட நகரம், ஒப்பிலியப்பன் சந்நிதி, உப்பிலியப்பன் சந்நிதி ஆகிய பெயர்களாலும் வழங்கப்படுகிறது.

இங்கு எம்பெருமானைத் துளசியால் பூஜிப்பவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நடைபயணமாக இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் எட்டுக்கும் புண்ணியம் பெறுவர்.

புளியோதரை, தயிர்சாதம், பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வடை, அதிரசம், முறுக்கு ஆகியவை பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படு கின்றன. உப்பில்லாவிட்டாலும் இந்த பிரசாதங்கள் ருசியாகவே இருக்கின்றன.

- கே.பிரபாவதி, திருச்சி-3