Published:Updated:

தாண்டவம் ஆடிய திருநாள்!

தைப்பூச தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பூச தரிசனம்

தைப்பூச தரிசனம்

சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் தைப்பூசம். தைப்பூசம், வியாழக்கிழமை, மத்தியான வேளை... ஆயிரம் முகங்களை உடைய பானுகம்பர், ஆயிரம் சங்குகளை ஊதினார். ஆயிரம் தோள்களை உடைய வாணாசுரன் குடமுழவு என்னும் வாத்தியத்தை இசைத்தான். மேலும், ஐந்து வகையான துந்துபி வாத்தியங்கள் ஒலிக்க, கந்தர்வர்கள் கீத ஒலி எழுப்ப, வேத ஒலி முழங்கிட சிவபெருமான் அம்பிகையோடு ஆனந்தத் தாண்டவம் ஆடியருளினார்.

வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, திருவுடை அந்தணர் மூவாயிரம் பேர் என எல்லோரும் அந்த ஆனந்த நடனத்தை தரிசித்தார் கள். மெய் சிலிர்த்தது. உள்ளம் உருகியது, ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

தைப்பூச தரிசனம்
தைப்பூச தரிசனம்

‘‘பரம்பொருளே! இங்கேயே உமாதேவியருடன் இன்று முதல் எப்போதும் இந்த ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் தரிசிக்கும்படியாக அருள் புரிய வேண்டும்’’ என வேண்டினார் பதஞ்சலி முனிவர்.

சிவபெருமான் உடன்பட்டார். அதன் பின் சிவபெருமானின் உத்தரவுப்படி அங்கேயே பொன்னாலான ஒரு சபை உண்டாக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் கனக சபையில் (சிதம்பரத்தில்) வியாக்ரபாதர், பதஞ்சலி முதலான எல்லோரும் வணங்க, அம்பிகையுடன் தன் திருநடனக் காட்சியை எப்போதும் தரிசிக்கும்படி தந்தருளிக் கொண்டு இருக்கிறார் சிவன்.

சரி, தைப்பூசம் முருக பக்தர்களும் கொண்டாடும் விழாவாக உள்ளதே. அது ஏன்?

சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத்தில் துடித்தார்கள். அவர்களின் துயரங் களை தேவ குருவான வியாழ பகவான், முருகப் பெருமானிடம் காரண - காரியங்களுடன் விவரித்துச் சொன்னார். குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களைத் தீர்த்தார்.

தேவகுருவான வியாழ பகவான், இப்படி தன் சீடர்களின் துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகப் பெருமானிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.

பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். ஞான வடிவம் இவர். பூச நட்சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். அதுவும் புண்ணிய காலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம்.

இந்த தேவ குருவுக்கும் குருவாக இருப்பவர் குமர குருபரனான முருகப்பெருமான். அதனால்தான் உத்தராயனம் பிறந்ததும் புண்ணிய காலமான தை மாதத்திய பூச நட்சத்திரத்தன்று முருகனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

- என்.கண்ணன், சாத்தூர்.