Published:Updated:

நமக்குள் இறைவன்!

நமக்குள்ளே இறைவன்
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே இறைவன்

ஹ.திருமலை, சேலம்

நமக்குள் இறைவன்!

ஹ.திருமலை, சேலம்

Published:Updated:
நமக்குள்ளே இறைவன்
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே இறைவன்

இறைவனுக்கான திருக்கோயில் நம் இதயம் என்பார்கள் பெரியோர்கள். அன்பு நிறைந்த நம் உள்ளத்தையே தமது விருப்பத்துக்குரிய வசிப்பிடமாக ஏற்கிறாராம் இறைவன். இதுபற்றிய சுவாரஸ்ய கதையொன்று உண்டு.

நமக்குள் இறைவன்!

லைகள், பள்ளத்தாக்குகள், வனங்கள், சமுத்திரம், நதிகள், தாவரங்கள், விலங்குகள் என இயற்கை அழகுடன் பூமியைப் படைத்த இறைவன், மனிதனையும் படைத்தார். மனிதன் வந்தபிறகு தொல்லை ஆரம்பமானது. எந்த நேரமும் மனிதர்கள் இறைவனிடம் ஏதாவது புகார் செய்தபடி இருந்தனராம். ஏதேனும் ஒருகுறை, அதை நிவர்த்தி செய்யும்படி முறையீடுகள் எனத் தொடர்ந்தன!

ஒரு பிரச்னையைத் தீர்த்தால் அடுத்த நிமிடமே இன்னொரு பிரச்னை புதிதாக முளைத்தது. ஒரு மனிதனுக்குத் தீர்வாக அமைந்தது, மற்றொரு மனிதனுக்குப் பிரச்னையாக மாறியது.

கடவுள் ஒரு முடிவுக்கு வந்தார். மனிதர்கள் தொடமுடியாத ஓர் இடத்துக்குச் செல்ல தீர்மானித்தார். தனது ஆலோசகர்களை அழைத்து அப்படியான ஓரிடத்தைச் சொல்லும்படி பணித்தார்.

‘‘பனி மூடிய இமயமலையின் உயரமான சிகரங்களுக்குச் சென்று விடுங்கள்...’’ என ஆலோசனை கூறினார் ஒருவர்.

‘‘என்றாவது ஒரு நாள் அந்த சிகரங்களின் உயரத்தை அளக்க மனிதன் அங்கு வருவான்!’’ என்று அதை நிராகரித்தார் இறைவன்.

‘‘கடலின் அடி ஆழத்தில் சென்று தங்கி விடுங்கள்!’’ என்றார் இன்னொருவர்.

அதையும் இறைவன் மறுத்தார். ‘‘மனிதர்கள் வருங்காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிப்பார்கள். அதன் உதவியோடு அவர்கள் அங்கும் வந்து விடுவார்கள்!’’ என்றார் இறைவன்.

ஆலோசகர்களும் நிலவு, பாதாளம், ஆகாயம் என்று பல்வேறு இடங்களைச் சுட்டிக்காட்டினார்கள். இறைவன் அவை அனைத்தும் மனிதன் வர வாய்ப்புள்ள இடங்களே என்று நிராகரித்துவிட்டார்.

எல்லோரும் மௌனமாக, மூத்த ஆலோசகர் எழுந்தார். ‘‘இறைவா! தனக்கு வெளியே இருக்கும் எல்லாவற்றையும் ஆராயும் குணமுள்ள மனிதன், தனக்குள் எதையும் தேட மாட்டான். அவன் இதயத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். மனிதன் தன் இதயத்துக்குள் இறைவன் குடியிருப்பதை உணரமாட்டான். எனவே, உங்களுக்குத் தொந்தரவு இருக்காது!’’ என்றார்.

அதை இறைவன் முகம் மலர ஏற்றார்; மனிதர்களின் இதயத்தில் குடியேறிவிட்டார். ஆம்! நம் ஒவ்வொருவரின் இதயத்தின் அடி ஆழத்திலும் இறைவன் குடியிருக்கும் கோயில் இருக்கிறது. தூய்மையான பேரன்பு, கருணை, கள்ளங்கபடமற்ற குணம் ஆகிய வடிவங்களில் அவர் இருக்கிறார்.

ஆனால், அந்தக் கோயிலை தற்பெருமை, சுயநலம், அகங்கார எண்ணம் போன்ற பல பூட்டுகள் மூடி வைத்திருக்கின்றன. அந்தப் பூட்டுகளை அகற்றுங்கள். இறைவனின் பல வடிவங்களை உங்கள் குணங்களில் காட்டுங்கள்! (ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி அருளுரைகளிலிருந்து...).