Election bannerElection banner
Published:Updated:

திருநள்ளாறு தலத்தில் எப்படி வழிபட வேண்டும்?

சனிபகவான்
சனிபகவான்

சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறு வழிபாட்டு நியதிகள்

திருநள்ளாறு தலத்தில் எப்படி வழிபடவேண்டும்?

சனீஸ்வரனுக்கு உரிய பரிகாரத் தலங்கள் பல இருந்தபோதும் அவற்றில் முதன்மையானது, திருநள்ளாறு திருத்தலம். இந்தத் தலத்தில் இறைவன் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் என்றும் இறைவி அருள்மிகு பிராணேஸ்வரி என்றும் திருப்பெயர் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். இந்தத் தலத்தின் பெருமைகளைப் புராணங்கள் பலவாறு போற்றுகின்றன. அவை:

சப்தவிடங்க தாண்டவத் தலங்களுள் ஒன்றான திருநள்ளாறு, இறைவன் ‘உன்மத்த நடனம்’ ஆடிய தலம். ஆலகால விஷத்தை உண்ட ஈசன் இந்தத் தலத்தில் பித்துப் பிடித்தவன் போல நடனம் ஆடியதால் அந்த நடனம், ‘உன்மத்த நடனம்’ எனப்பட்டது.

மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்புவாக தர்ப்பை வனத் தில் தோன்றியவர். சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார்.

விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர்.

இந்தத் தலத்தின் உற்சவர் செண்பக தியாகராஜர். இந்திரன் வழிபட்டு வந்த செண்பகத் தியாகராஜர் திருமேனி, திருநள்ளாறு வந்ததை விளக்கும் புராண நிகழ்வு சுவாரஸ்யமானது.

இந்திரனுக்கு உதவியாக வாலாசுரன் என்ற அசுரனை அழித்தார் முசுகுந்த சக்கரவர்த்தி. உதவிக்குப் பரிசளிக்க விரும்பினான் இந்திரன். முசுகுந்தன் இந்திரன் வழிபடும் விடங்கமூர்த்தியைத் தரும்படி கேட்டார். அந்த மூர்த்தியைத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.

ஆகவே அந்த மூர்த்தத்தைப் போன்று வேறு ஆறு மூர்த்தங்களைச் செய்துவைத்து, அதில் உண்மையான விடங்கமூர்த்தியைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். முசுகுந்தன் ஈசனின் அருளால் சரியான விடங்கமூர்த்தியைத் தேர்வு செய்தார். அவரின் பக்தியின் மேன்மையை அறிந்த இந்திரன், ஏழு மூர்த்தங்களையும் அவரிடம் ஒப்படைத்தான். இந்திரன் வழிபட்ட மூர்த்தத்தை திருவாரூரில் பிரதிஷ்டை செய்த முசுகுந்தன், மற்றவற்றை திருநள்ளாறு உட்பட பிற தலங்களுள் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சனி பகவான்
சனி பகவான்

விடங்க என்றால் ‘செதுக்கப்படாத மூர்த்தி’ என்று பொருள். ஏழு சுயம்புத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.

தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்க புரம் என்றும் பெயர் பெற்றது. தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.

நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது.

நளச் சக்கரவர்த்தி, இந்தத் தலத்தில் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி வழிபட்டு, சனி பகவானின் கோரப் பிடியிலிருந்து விடுபட்டார். சனிபகவான் நளனுக்குக் காட்சி கொடுத்து அவர் இழந்த செல்வங்கள், புகழ் ஆகிய அனைத்தையும் அவருக்கு வழங்கினார்.

நளன் அவரிடம் ‘அந்தத் தலத்தில் தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபடுபவர்களுக்குச் சனி பகவான் தீங்கு செய்யக் கூடாது’ என்று வேண்டிக்கொண்டான். அதை ஏற்று, சனிபகவானும் அங்கு அனுக் கிரக மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. சனிதோஷம் விலகவேண்டும் எனும் விரும்பும் அன்பர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபடும் முறையை ஞானநூல்கள் விளக்கியுள்ளன.

சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய “போகமார்த்த பூண்முலையாள்” என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது. சமணர்களுக்கு எதிரான சம்பந்தரின் அனல் வாதத்தில், இந்தப் பதிகம் எழுதப்பட்டிருந்த சுவடிகள் மட்டும் கருகாமல் இருந்ததால் “பச்சைப் பதிகம்” என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறது.

இந்தத் தலத்தில் நளன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. ஜன்மச் சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, மத்திய சனி, ஆத்ய சனி, ஏழரை சனி என்று சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம். நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்தத் துயரமும் தீரும்.

திருநள்ளாறு
திருநள்ளாறு
நள தீர்த்தம்
நள தீர்த்தம்

திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும்.

குளித்து துவட்டி வேறு ஆடை அணிந்தபிறகு, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனித நீரை தெளித்துக்கொள்ள வேண்டும் (எக்காரணம் கொண்டும் பழைய துணிகளை குளத்து நீரில் சேர்க்கக் கூடாது).

திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதிகம்.

எள் தீபம் ஏற்றுவது தொடங்கி அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜை களைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் எல்லா நாள்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன் கிட்டும்.

திருநள்ளாறு வர இயலாத நிலையில் உள்ள அன்பர்கள் அதற்காகக் கவலைகொள்ள தேவையில்லை. சனி பகவானை மனத்தில் பிரார்த்தனை செய்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம்.

எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப்பெறுபவர். நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி வாழலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு