திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத்திருவிழா கொண்டாடப்படும்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்த உற்சவம் கொரோனா கட்டுப்பாட்டால் மக்கள் கலந்துகொள்ளாமல் கோயிலுக்குள் மட்டும் நடந்தது. இந்தாண்டு மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் தேரோட்டமும், தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளும் உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. உற்சவர் சந்நிதியில் தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமிக்குப் புதிய வஸ்திரம் சாத்தப்பட்டது. தங்கம், பவளம், வைடூரியம் உள்ளிட்ட ஆபரணங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானை அம்பாளுடன் சுப்ரமணிய சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு பால், பன்னீர், இளநீர் உட்படப் பல்வேறு வாசனைத் திரவியங்கள் மூலம் மகா அபிஷேகம் நடந்தது. தர்ப்பைப் புல், மாவிலை, பூமாலை, பட்டு வஸ்திரம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று மக்கள் முழக்கமிட கொடியேற்றப்பட்டது.
வருகிற 31-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை தங்க சப்பரத்திலும், இரவில் தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

வருகின்ற 30-ம் தேதி தெப்பமுட்டுத்தள்ளுதலும் தேராட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 31-ம் தேதி முக்கிய விழாவான தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.