'இறைவனிடம் கை ஏந்துங்கள்'
நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் பாடலிது.
இசையைத் தாண்டியும் எல்லா மதத்தவருக்கும் பிடித்த பாடல் இது. அதற்குக் காரணம் இப்பாடலில் வழியும் தொனி. இறைவனின் பொது குணங்களை வியந்து, அவனிடம் இறைஞ்சும் ஒரு பக்தன் தன்னுள் உருகும்போது அவனை அறியாமலேயே மதங்களை கடந்துவிடுகிறான். இதனால்தான் இந்தப் பாடலை நாம சங்கீர்த்தனம் இசைக்கும் வைணவப் பெரியவரால், மக்களின் தன்னியல்பான தாள ஒலிக்கிடையே மிகப்பெரிய மேடையில் பாட முடிகிறது. தாங்கள் நம்பும் நம்பிக்கைகளின்மேல் கால்பதித்து நின்றுகொண்டே, பிற நம்பிக்கைகளின் மீது வெறுப்புற்று பார்க்காமல் புரிந்துகொள்ளும் தன்மையோடு அணுகும் தன்மைதான் ஒரு நாகரிக சமூகத்தின் வேராகும்.
இந்தப் புரிதலின் விளைச்சலே பாரதியின் அல்லா பாடல். அதில், “எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெடச் செய்பவன் அல்லா” என்கிறார் பாரதி. இந்த வேரே விருட்சமாகி, விழுது பரப்பும் ஊர்களில் திருச்சி முக்கியமானது. இது பொதுவாக தமிழ்நாட்டின் குணம்தான் என்றாலும், திருச்சி தனித்துவமானது. தமிழ்நாட்டின் பெருநகரங்கள் எங்கும் ஏதேனும் ஒரு சாதிச் சண்டையோ மதக் கலவரமோ நடந்ததற்கான வரலாறு உண்டு. ஆனால் திருச்சியில் அப்படி ஒரு சாதி மத மோதல் நடந்ததில்லை. அதற்கு அடிப்படையான பண்பாட்டுக் கூறுகள் வரலாறு நெடுக கிடைக்கின்றன.

அப்படியான ஒரு வரலாறுதான் திருச்சியில் உள்ள – 'ஹஜ்ரத் நத்ஹர் வலி தர்க்கா'. முஸ்லிம் மன்னர்களின் படை எடுப்புகளுக்குப் பின்னரே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கு வந்தது என்ற பொதுவான கருத்து உலவுகிறது. காரணம் வட இந்திய வரலாற்றைப் போலத்தான் தென்னிந்திய வரலாறும் என்ற பொதுக் கருத்தின் விளைவு இது.
ஆனால் அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் தோன்றி இஸ்லாம் வருவதற்கு முன்பே அரேபியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான வணிக உறவு இருந்தது. வணிகர்கள் மூலம்தான் இஸ்லாம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்றும் மன்னர்களின் வாளால் அது எடுத்து வரப்படவில்லை என்றும் இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் ராஜாமுகமது கூறுவதை நாம் கவனிக்கலாம். அமைதியான வழியிலேயே இஸ்லாம் பரவியதை ஜவகர்லால் நேரு தன் டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தில், ”ஒரு அரசியல் சக்தியாக இஸ்லாம் பாரதத்துக்குள் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இஸ்லாம் ஒரு மார்க்கமாக தென்னிந்தியாவை அடைந்துவிட்டது" என்கிறார்.
நபிகள் நாயகத்தின் காலத்திலேயே இஸ்லாம் தென்னகத்துக்கு வந்துவிட்டதால், இந்தியாவின் பழைமையான இஸ்லாமியர்களில் கேரளத்தவரைப்போலவே தமிழக இஸ்லாமியர்களும் மிகப் பழைமையானவர்கள் என்பதற்கான ஆதாரம் திருச்சியில் உள்ளது. ஒன்று திருச்சி கோட்டை ரயில்வே நிலையம் எதிரில் உள்ள கல்லுப்பள்ளி. மற்றொன்று ஹஜ்ரத் நத்ஹர் வலி தர்க்கா.
இந்தியாவிற்கும் அரேபியாவிற்கும் ஏற்பட்ட வணிக உறவு மூலமே மிளகும் இஞ்சியும் கிராம்பும் ஏலமும் லவங்கமும் மயில்பீலியும் தந்தமும் சந்தனமும் அகிலும் முத்தும் பவளமும் பட்டும் அரேபியா வழியாக ரோமுக்கும் ஐரோப்பாவரைகூட சென்றதாக அறிகிறோம். இந்த வணிக உறவுதான் மனித உறவுக்கும் கலப்புக்கும் அடிப்படை. உலகம் முழுவதும் இனங்கள் கலப்பதும் அதன் வழியாய் ஒரு புதிய இனம் பிறப்பதும்தான் உலக வரலாறு. கடல் வாணிகத்தால் உருவான இந்த ‘இந்திய அரேபியர்கள்’ கடற்கரை ஓரங்களில் வாழ்ந்தனர். கி.பி ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய இவர்கள் ராவுத்தர் மரைக்காயர் லப்பைகள் நயினார்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். தமிழ் இலக்கியங்களும் இவர்களை ஏற்று பாடியுள்ளன. குதிரைமேல் ஏறி வந்த சிவனை, "கோட்டமிலா மாணிக்கவாசகன் முன் குதிரை ராவுத்தனாக நின்று" என திருப்பெருந்துறை புராணம் பாடுகிறது.

தென்கிழக்கு - வடமேற்கு பருவக்காற்றை பயன்படுத்தி பாய்மரக் கப்பலில் வணிகம் அரேபியாவிலிருந்து தென்னிந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரையைத் தொட்டு, இலங்கை மலேசியா இந்தோனேஷியாவரை விரிந்தது. பல வரலாற்று அறிஞர்கள் கி.பி 671-ல் இஸ்லாம் மலேஷியாவை எட்டிவிட்டது என்கின்றனர். ஒன்று மட்டும் உண்மை - தமிழகத்தின் கடற்கரையைத் தொடாமல் மலேஷியாவை இஸ்லாம் தொட்டிருக்க முடியாது. இந்தியாவில் கி.பி 642-ல் முதல் பள்ளிவாசல் கேரளத்தின் கொடுங்கொளூரில் கட்டப்பட்டதற்கான குறிப்புகள் உண்டு. ஆனால், வலுவான ஆதாரங்கள் இல்லை.
இஸ்லாத்துக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பை வலிமையாகச் சொல்ல கிடைத்த ஆதாரமும் திருச்சியில்தான் உள்ளது. அதுதான் கல்லுப்பள்ளி. அதாவது கல்லால் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்பது பொருள். இந்தஜ் கல்லுப்பள்ளிதான் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல். இதற்கு சான்றாக கல்வெட்டு ஒன்று அரேபிய லிபியில் அந்த பள்ளிவாசல் முகப்பில் பெருங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதன் காலம் கி.பி 7-ம் நூற்றாண்டாகும். 1300 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கும் குறிப்பாக திருச்சிக்கும் வந்துவிட்டதன் அடையாளமாக இந்தக் கல்வெட்டு பார்க்கப்படுகிறது. இது இன்றும் கோட்டை ரயில் நிலையம் எதிரில் உள்ளது. சமண புத்த விகாரங்களைப்போல அவற்றின் தாக்கத்தோடு கல்லால், சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. 30 பேர் நின்று தொழுகை நடத்த முடிந்த அளவே உள்ளது. அக்கல்வெட்டின்படி, ஹிஜ்ரி 116-ம் ஆண்டு, அதாவது கி.பி 738-ல் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் மறைந்து 106 ஆண்டுகளில் இது கட்டப்பட்டுள்ளது என்றால் அதற்கு முன்பே இஸ்லாம் திருச்சியில் நிலைத்துவிட்டதை இப்பள்ளிவாசல் சொல்லாமல் சொல்கிறது. இப்பள்ளிவாசலை ஹாஜி அப்துல்லா கட்டியுள்ளார். இதன் மூலம் மன்னர்கள் வரும் முன்பே வணிகர்கள் வழியாகவும் மார்க்க அறிஞர்கள் மூலமாகவும் இஸ்லாம் தமிழ்நாட்டில் நிலைத்ததை திருச்சியின் கல்லுப்பள்ளி சொல்கிறது. இதன் தொன்மையை உணர்ந்து காலப் பெட்டகம்பொல் இதை நாம் காப்பாற்ற வேண்டும். வரலாற்றிலும் அதன் போக்கிலும் மிகப்பெரிய மாற்றத்தையும் விளைவையும் ஏற்படுத்திய 100 பேர்களின் பட்டியலை அமெரிக்க பேராசிரியர் மைக்கேல் ஹெச் ஹாஆர்ட் 'தி 100’ என்ற புத்தகமாக எழுதியுள்ளார். இந்த 100 பேரையும் நமது வாழ்க்கையை வடிவமைத்தவர்கள் என்கிறார் ஹார்ட்.

இதற்கு அவர் எடுத்துக்கொண்ட அளவுகோல் அவர்களின் சொந்த செல்வாக்கும், அது ஏற்படுத்திய விளைவும்தான். ஹார்ட் பயன்படுத்தும் தரங்களைக் கண்டுபிடிப்பதில்தான் இந்நூலின் இன்பம் அமைந்துள்ளதாக நியூஸ்வீக் எழுதுகிறது. நடுவு நிலையோடு ஹார்ட் தயாரித்துள்ள அந்ந 100 பேர் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளவர் கி.பி 570-632 ஆண்டுகளில் வாழ்ந்த முஹம்மது நபிகள் அவர்களே. இஸ்லாத்தின் இறையியல் அறநெறி ஒழுக்க இயல் யாவற்றையும் அல்லாஹ் இடம்பெற்று உலகுக்குச் சொன்னவர் நபிகள் நாயகமே! இதையே இஸ்லாம் என்கிறோம். இஸ்லாத்தை பரப்ப உலகம் முழுக்க தன் தோழர்களான சஹாபிக்களை அனுப்பினார்கள். அதைத் தொடர்ந்து பல இறை நேசர்கள் உலகம் முழுக்க பயணப்பட்டார்கள்.
இந்த வரலாற்று பின்னணியில்தான் ‘ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா’ என்று கொண்டாடப்பட்ட சூஃபி ஞானியான நத்ஹர் வலி கி.பி 900-ல் திருச்சிக்கு வந்தார். பொதுவாக சூஃபி என்றால் எளிமையான தூய்மையான துறவி என்று பொருள். இஸ்லாத்தின் சூஃபியான இவர் குறித்து அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கையை சொல்லும் பழைய நூல்களை பேரா.இஸ்மாயில் கொடுத்தார். இவரோடு வந்த சீடர்களை கலந்தர் என்கிறது இஸ்லாம். இவரின் அற்புதங்களும் கலந்தர்களின் பிரசாரமும் இஸ்லாம் பரவ காரணமானது. இதனால்தான் புத்தம், கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்களை Missionary Religion என்கிறோம்.
இஸ்லாம் பரவுவதற்கான காலச் சூழலும் கி.பி 7-9 நூற்றாண்டுகளில் இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். அதோடு இங்கு வந்த சூஃபிகளோடு இங்கேயே இருந்த வேதாந்திகளும் சித்தர்களும் ஒத்துப்போவதை கவனித்த மக்களுக்கு இஸ்லாம் ஈர்ப்பாக இருந்தது. மேலும் நோயை குணப்படுத்தும் சூஃபிகளின் தன்னலமற்ற பணி ஏழைகளைக் கவர்ந்தது. அதுமட்டுமல்ல இங்கிருந்த சாதிய முறைக்கும் வழிபாட்டில் இருந்த ஏற்றத்தாழ்வுக்கும் மாற்றம் தேடிய மக்கள் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டனர்.
அதுமட்டுமல்ல 7-8 ஆம் நூற்றாண்டுகளில் சைவமும் வைணவமும் சமணத்தோடும் புத்தத்தோடும் கடும் மோதலில் இருந்தன. பக்தி இயக்கம் பரவியது. மன்னர்கள் சைவத்தை ஏற்றனர். மன்னர்களின் ஆதரவை இழந்த சமணம்-புத்தம் பெரிய நெருக்கடிகளைச் சந்தித்தன.

சமண-புத்தர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற ஓர் இறைக் கோட்பாடும், ஏற்றத்தாழ்வை ஏற்காத இஸ்லாத்தைத் தழுவுவதை பாதுகாப்பானது என்று கருதினர். மேலும் அரபியர் வணிகம் நம் மன்னர்களுக்குத் தேவைப்பட்டது. அக்காலத்தில் சோழப் பேரரசன் ராஜேந்திரச் சோழனின் ஆட்சி நடந்தது. சோழர்கள் சைவத்தை ஆதரித்தனர். சமணமும் பௌத்தமும் நலிந்தன. சமணர்கள் பெரும்பாலும் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால்தான் இன்றும சமண பௌத்தர்கள் அதிகம் வாழ்ந்த நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்வதை நாம் கவனிக்கலாம். சமணத்தில் புழங்கிய பல அழகிய தமிழ் சொற்கள் இஸ்லாமியர்களின் நாவில் புரள்வதை இன்றும் கேட்கலாம். சமணர்கள் தங்கள் வணங்கும் இடத்தை பள்ளி என்றனர். இஸ்லாமியர்கள் அதை பள்ளிவாசல் என்கின்றனர். சமணர்கள் பயன்படுத்திய நோன்பு, தொழுகை, பெருநாள், சோறு, ஆணம் போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய மக்களின் வாழ்வோடு கலந்துவிட்டதை நாம் கவனிக்கும்போதுதான் இந்த உண்மை புலப்படும்.
அமைதிவழியில் வந்த இஸ்லாத்தை தமிழ் மன்னர்கள் வெறுக்காமல் அனுமதித்ததையும் நாம் கவனிக்கவேண்டும். அதுதான் தமிழ்நாட்டின், 'எப்பொருள் யாரயார் வாய்க் கேட்பினும்' என்ற வாழ்வியல் வெளிப்பாடு. இந்தச் சூழலில்தான், இஸ்லாத்தின் மெய்ஞானியரான அவுலியா பலர் இங்கு வந்தனர். இவர்களைப்பற்றி நபிகள் நாயகம், "எவர்களைக் கண்டால் அல்லாஹ்வின் நினைவு ஏற்படுகிறதோ அவர்களே அவுலியாக்கள்” என்றார். இவர்கள் காட்டிய ஞானப்பாதை தரிக்கா எனப்பட்டது.
இவர்களில் காலத்தால் முற்பட்ட இறைநேசர் சூஃபி நத்ஹர் வலி ஆவார். இவரின் பெயரால் திருச்சி நகரையே நத்ஹர் நகர் என்று ஆற்காடு நவாப் அழைக்கும் அளவுக்கு இவர் புகழோடு இருந்தார். தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் அரேபிய - தமிழ் இஸ்லாமியர்கள் கி.பி 916-ல் வாழ்ந்ததாக மஸ்ஊதி என்ற அரபு யாத்ரீகர் எழுதியுள்ளார். சேரமான் பெருமாள் என்ற பாஸ்கர ரவிவர்மன் இஸ்லாத்தைத் தழுவ, மேற்குக் கடற்கரையிலும் இஸ்லாம் நிலைத்தது. மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரைக்கு சென்ற வணிகர்கள் செழிப்பாக இருந்த சோழ நாட்டின் தரைவழியை பயன்படுத்தினர். இதன் அடையாளம்தான் கி.பி 738-ல் கட்டப்பட்ட திருச்சியின் கல்லுப்பள்ளி.

இப்படி ஓரளவு இஸ்லாமியர்கள் வாழ்ந்துகொண்டிருந்த திருச்சிக்கு சிரியா நாட்டில் பிறந்த ஹஜ்ரத் நத்ஹர் வலி வந்தார். இவரது காலம் கிபி 969 முதல் 1039 வரை. இவரது தந்தை இஸ்தம்பூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். நத்ஹருக்கு 7 வயது ஆகும்போது தந்தை இறக்க, இவர் மன்னர் ஆனார். 15 ஆண்டுகள் மன்னனாக இருந்து, அதிகாரம் வெறுத்து துறவியானார். ஆன்மிக நாட்டத்தோடு நத்ஹர் வலி மதினா போய் சேர்ந்தார். அங்கு ஒருநாள் இவரது கனவில் தொன்றிய நபிகள் நாயகம், ”நத்ஹரே நீர் உமது கலந்தர் பக்கீர்களுடன் கீழ்த்திசை செல்க. இஸ்லாத்தைப் பரப்புக. ஆண்டவன் துணை நிற்பான்” என்று திசை காட்டினார். இந்தக் கீழ்திசை பயணத்தின்போது நத்ஹர் சந்தித்த சோதனைகள் பல! அவற்றை அவர் சந்தித்து வென்ற கதை அமானுஷமானது. பல அற்புதங்கள் நிறைந்தது. காட்டு வழிப் பயணத்தில் 10 லட்சம் பூதங்கள் வருகின்றனர். பத்து தலை கொண்ட ‘தஸாஸிர்’ வருகிறார். இவர்களையெல்லாம் நத்ஹர் வென்ற கதை புராணம்போல உள்ளது. எல்லா தொன்மங்களிலும் வாய்மொழி மரபுகளிலும் இத்தகைய அற்புதங்கள் வழக்கமானவைதான். திர்ச்சலா என்னும் பூதங்களின் தலைவனைக் கொன்ற பின்னர் ஏழாவது நாள் திருச்சியை அடைகிறார்.
நத்ஹர் முதலில் தங்கியது திருச்சி மலையில்தான். அவருக்கு பின்னால் இருந்த பாறையை உருட்டித்தள்ளி நத்ஹரை கொல்ல பூதகனங்கள் முயல, தன் காலை ஊன்றி கையால் பாறை சாயாமல் தடுத்தார் என்றும் அதன் சுவடுதான் பாறையில் உள்ள பாதம் என்று நம்பப்படுகிறது. இந்த மலையில் உள்ள பாதம் குறித்து எல்லா மதங்களும் தங்களுக்கான நம்பிக்கை கொண்டுள்ளன. பன்னிரண்டு தலையுடைய பாம்பும் புலியும் அவருக்கு உணவு தந்ததற்கான நம்பிக்கையும் உண்டு. பெருக்கெடுத்த ஆற்று வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட, நத்ஹர் தனது பறை எடுத்து முழங்க, ஆறு பின்வாங்க மக்கள் இவரை வணங்கினர் என்றும் இதைக்கண்ட ஆதம் நத்ஹரை உலகப்பறை என்னும் பொருளில் ‘தப்லே ஆலம்’ என்றார்கள்.

இப்படி ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி மக்கள் மனங்களை வென்ற இவர், தாயின் கருவறையில் இருந்தபோதே நோன்பு காலத்தில் உண்ண மறுத்த உண்மையாளர் என்று இஸ்லாமியர்களால் வணங்கப்படுகிறார். மன்னனுக்கு மகப்பேறு கொடுத்து அதில் பிறந்த தசைப்பிண்டமான உருவுக்கு உயிர் கொடுத்தவர் இவர். அப்படி பிறந்த பெண்ணே இவரது வளர்ப்பு மகளானார். இப்பெண்ணுக்கு மின்மினிகளின் மேல இருந்த ஈர்ப்பால் ‘மாமா ஜிக்னி' என்று அழைக்கப்பட்டார்.
விஜயநகர மன்னர் விஸ்வநாத நாயக்கரின் மனைவி அரசி மீனாட்சி, நத்ஹர் வலி தர்க்காவிற்கு கி.பி 1732 ல் எழுதிக்கொடுத்த தாமிரப்பட்டயம் தப்லே ஆலம் புகழ் மதம் கடந்தும் வியாபித்திருந்ததை நமக்கு காட்டுகிறது. நத்ஹர் வலி தர்க்கா தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தும் வகையில் பல இடங்களை உரிமை தரும் பட்டயம் அது. அந்தத் தெலுங்கு பட்டயத்தை பேரா.அக்பர் தன் ஆய்வுக்காக தமிழில் தந்துள்ளார்.
இப்படி அற்புதங்கள் நிகழ்த்திய தப்லே ஆலம் ஹஜ்ரத் நத்ஹர் வலி தன் மரணத்தை முன்கூட்டியே சீடர்களிடம் அறிவித்தார். ஹஜ்ரி 417 ரமலான் பிறை 14-ல் வெள்ளிக்கிழமை இரவு (28 அக்டோபர் 1026) தொழுகை செய்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.
அவர் அடக்கமாகியுள்ள இடத்தில்தான் இந்தியாவின் முன்னோடியான தர்க்கா திருச்சியில் அமைந்துள்ளது. அவரது சமாதியின் கால்மாட்டில் அவரது வளர்ப்பு மகள் மாமா ஜிக்னியின் சமாதி உள்ளது. ஞான ஒளி ஏற்றும் மகான்களை மக்கள் மறப்பதில்லை என்பதன் அடையாளமாக நத்ஹர் வலி தர்க்கா திருச்சியில் வாழ்கிறது.