Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

அண்ணாமலையார்
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலையார்

வாசகர்களின் ஆன்மிகப் பகிர்வுகள்!

உதவலாம் வாருங்கள்!

வாசகர்களின் ஆன்மிகப் பகிர்வுகள்!

Published:Updated:
அண்ணாமலையார்
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலையார்

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெற்றுத் தரும் பகுதி இது!

அண்ணாமலையார்
அண்ணாமலையார்

உதவலாம் வாருங்கள் - வாசகர் கேள்விகள்...

சுபதி விருத்தம் அருமையான தெய்வத் துதிப் பாடல் என்று அறிகிறேன். இந்தப் பாடல் பொருள் விளக்கத்துடன் எனக்குத் தேவை. அதேபோல் லிங்க புராணக் குறுந்தொகை பாடலும் பொருள் விளக்கத்துடன் வேண்டும். இவை அடங்கிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் விவரம் அறிந்த அன்பர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- வி.ராமசாமி, கோவில்பட்டி

காமதேனு, நந்தினி ஆகிய தெய்வப் பசுக்கள் குறித்து புராணக் கதைகளில் படித்து அறிந்துள்ளோம். இதேபோல் வேறுபல தெய்வப் பசுக்கள் தோன்றியதாகவும், அவற்றை திக்பாலகர்கள் பெற்றுப் பராமரித்தனர் என்றும் இந்தத் தெய்விக பசுக்கள் வழிபட்ட தலங்கள் பசுபதீஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன என்றும் அறிந்தேன். அந்தத் தலங்கள் குறித்த விவரம் தேவை.

- கு.வெங்கடேசன், ஆத்தூர்

ந்திரமாவது நீறு என்பார்கள் பெரியோர்கள். சகல விதமான துன்பங்களையும் போக்கும் விபூதியில் ஐவகை உண்டு என்கிறார்களே... அவை என்னென்ன? அவற்றைத் தரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன? விவரம் அறிந்தவர்கள் பகிருங்களேன்.

- வே. குழந்தையப்பன், ஶ்ரீவைகுண்டம்

வீட்டில் ஐஸ்வர்ய லட்சுமி வைத்து வழிபட விரும்புகிறேன். பாற்கடல் பொக்கிஷங்களான காமதேனு, கற்பகவிருட்சம் முதலானவற்றுடன் மகாலட்சுமி அருள்வது போன்று அன்னையின் திருப்படம் தேவை. ஐஸ்வர்ய லட்சுமி வழிபாடு குறித்த நியதிகள் அறிந்தவர்கள் அதுகுறித்தும் விவரம் பகிருங்களேன்.

-எம்.காந்திமதி, திருப்பூர்

ங்காதேவியைப் போற்றி ஶ்ரீதர ஐயாவாள் இயற்றிய கங்காஷ்டகம் நூல் உரிய விளக்கங்களுடன் தேவை. இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும். எவரிடமேனும் இந்தத் துதிப்பாடல் குறித்த புத்தகம் இருந்தால் நகல் எடுத்து அனுப்பினாலும் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.ராமமூர்த்தி, தூத்துக்குடி

காஞ்சி கச்சபேசுவரர் ஆலயத்தில் நான்முக லிங்கம் உண்டு என அறிந்தேன். அதேபோல், பஞ்சமுக லிங்கம் அருளும் திருத்தலம் தமிழகத்தில் எங்குள்ளது?

- சி.சிதம்பரம், ஓசூர்

உதவிக்கரம் நீட்டியோர்...

சக்தி விகடன் சென்ற இதழில், `குற்றாலத்தில் அருளும் அம்பிகை செண்பகக் குழல்வாய்மொழி. அதேபோல், ஈசன் செண்பகப் பூவின் பெயரை ஏற்று செண்பகபிச்சாலீசர் எனும் திருப்பெயருடன் அருளும் தலம் எது, எப்படிச் செல்ல வேண்டும்' என்று கள்ளிடைக்குறிச்சி வாசகர் அருணாசலம் கேட்டிருந்தார். அவருக்குக் காஞ்சிபுரம் வாசகர் முருகன் கீழ்க்காணும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

குற்றாலத்தில் மட்டுமல்ல வேறுதலங்களிலும் அம்பாள் மலர்களின் பெயர்களை ஏற்று அருள்கிறாள். மலர்க்குழலி, வண்டார்குழலி, பூங்குழலி, குரவம் கமழ்குழலி ஆகிய பெயர்களில் போற்றப்படுகிறாள்.

அபிராமி அந்தாதியில் தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சூட்டும் தில்லை ஊரர் என்று சிவபெருமானையும், பிச்சி மொய்த்த கன்னிங்கரிய குழலி என்று அன்னையையும் பாடுகிறார் அபிராம்பிப் பட்டர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆரணியில் கோயில்கொண்டிருக்கும் சிவ பெருமான் செண்பக பிச்சாலீசுவரர் என்று அழைக்கப் படுகிறார்.

சென்ற இதழில், `திருவூடல் விழா குறித்த தகவல்கள் தேவை' என்று விழுப்புரம் வாசகி சங்கரி மனோகரி கேட்டிருந்தார். அவருக்கு கீழ்க்காணும் விவரங்களை திருக் கோவிலூர் வாசகர் ராமு பகிர்ந்துள்ளார். அந்த விவரம்...

திருவூடல் விழா குறித்து இலக்கியங்கள் வெகுவாக சிறப்பிக்கின்றன. பிட்சாடனராக தாருகாவனம் சென்றதன் பொருட்டும், மேலும் பல காரணங்களை ஒட்டியும் பார்வதிதேவி சிவனார் மீது கோபம் கொள்கிறாள். ஆகவே, சுவாமியை கோயிலுக்குள் நுழையவிடாமல் திருக்கதவுகளை மூடிக் கொள்கிறாள்.

சுவாமி பூதகணங்களை தூது அனுப்பியும் பயன் இல்லை. நிறைவில் சுந்தரர் தூது சென்று அம்பிகையின் கோபத்தைத் தணித்து இறைவனோடு சேர்த்து வைக்கிறார்.

இப்படியான திருக்கதை தாத்பரியத்துடன் சிவாலயங்களில் திருவூடல் விழா நடைபெறும். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மீது உண்ணாமுலை அம்மை ஊடல் கொள்வது, பெருமான் நடனமாடி மகிழ்வித்து ஊடல் தீர்க்க முனைவது, அது இயலாமல் போகவே சுந்தரரை தூது அனுப்புவது ஆகிய வைபவங்கள் மாட்டுப் பொங்கலன்று பெரும் விழாவாகவே நடத்தப்படுகிறது. விழாவின் போது திரு ஊடற்புராணமும் படிக்கப்படும்.