
மன அமைதிக்காக 11 பௌர்ணமிக்கு சித்தர்கள் வழிபாடு செய்யலாம் என்று இருக்கிறேன். சென்னையில் சித்தர்கள் சமாதிக் கோயில்கள் எங்கெங்கு உள்ளன
அன்பார்ந்த வாசகர்களே...
ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.
இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
கேள்விகள், தகவல் பகிர்வுகளை: அனுப்ப வேண்டிய முகவரி:
`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன்,
757, அண்ணாசாலை, சென்ன-600 002 Email: sakthi@vikatan.com
வீட்டுப் பூஜையில் சுவாமிக்கு சோடஷ உபசாரம் செய்யலாமா? சாமரம், விசிறி, ஆலவட்டம், கொடி, கண்ணாடி போன்ற சோடஷ உபசாரப் பொருள்கள் எங்கு கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.
- கே.கமலா, கோவில்பட்டி
பலவிதமான பஞ்சாங்கங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பின்பற்றி வருகின்றனர். சரியான பஞ்சாங்கம் எது? அதேபோல் பழைய நாள் குறிப்புகளை அறியும் விதம் பழைய வருடத்துப் பஞ்சாங்கங்கள் அடங்கிய தொகுப்பு எங்கு கிடைக்கும்?
-சி.ஆனந்தராமன், தூத்துக்குடி
ஜாதகப்படி தோஷங்கள் தீரும் வகையில், வடக்கு நோக்கிய காளிதேவியை வணங்கச் சொல்லி ஜோதிடர் பரிகாரம் கூறி யுள்ளார். திருச்சி அருகே காளிதேவி இந்த அமைப்பில் இருக்கும் கோயில் ஏதேனும் உள்ளதா?
-வி.ரமணி, திருச்சி-4
கோமதிச் சக்கரத்தின் மகிமை குறித்து நண்பர்கள் சிலர் கூறினார்கள். பூஜையில் வைத்து வழிபட வேண்டிய கோமதி சக்கரம் எங்கு கிடைக்கும், அதன் மகிமைகள், வழிபாட்டு நியதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம் ஏதேனும் உண்டா? இதுபற்றி அறிந்தவர்கள் எவரேனும் விவரம் பகிர்ந்தால், பயனுள்ளதாக இருக்கும்.
-ஆர்.மகேஸ்வரன், வள்ளியூர்
மன அமைதிக்காக 11 பௌர்ணமிக்கு சித்தர்கள் வழிபாடு செய்யலாம் என்று இருக்கிறேன். சென்னையில் சித்தர்கள் சமாதிக் கோயில்கள் எங்கெங்கு உள்ளன. அங்கு எந்தவிதமான வழிபாடுகள் செய்ய வேண்டும். இதுகுறித்து வழிகாட்டுங்களேன்.
-கே.முத்து, சென்னை-66
எங்கள் பகுதியில் உள்ள ஈசனுக்கு 108 மூலிகைகள் கலந்த அபிஷேகம் செய்ய விரும்புகிறேன். எனக்கு ராணிப்பேட்டை அருகே என்பதால், அந்தப் பகுதியில் தரமான மூலிகைகள் எங்கு கிடைக்கும் அல்லது வேறு எங்கு சென்று பறிக்கலாம்? விவரம் பகிருங்களேன்!
- எல்.ராஜா, காவேரிப்பாக்கம்

உதவிக் கரம் நீட்டியோர்
சக்தி விகடன் 21.3.23 தேதியிட்ட இதழில் `தமிழ் இசை மட்டுமின்றி, கர்நாடக இசையிலும் முத்திரை பதித்தவர் வேங்கடகவி. இவரின் சரிதம், கீர்த்தனைகள் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் வெளிவந்துள்ளனவா; எங்கு கிடைக் கும்?’ என்று சென்னை வாசகர், வே.கண்ணன் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார், கடலூர் வாசகர் முத்துக்குமார்.
புராணச் சிறப்பு மிக்கது ஊத்துக்காடு. கண்ணனின் அருள் சாந்நித்தியம் நிறைந்த ஊர். தமிழிசைப் பாடல்களுக்குப் புத்துயிர் அளித்த ஊத்துக்காடு வேங்கடகவி வாழ்ந்த ஊர் இது. இவரது இயற்பெயர் வேங்கடசுப்பு. மன்னார்குடியில் பிறந்த இவர், சிறு வயதி லேயே பெற்றோரை இழந்தார். இதன் காரணமாக அவர், ஊத்துக்காடுக்கு வந்து சிற்றன்னையின் பராமரிப்பில் வளர நேர்ந்தது.
இசையில் ஈடுபாடு கொண்டிருந்த வேங்கட சுப்பு சிறு வயதிலேயே சங்கீதம் கற்றார். ஒரு கட்டத்தில் அவரின் குரு, ‘`சங்கீதத்தில் எனக்குத் தெரிந்ததை எல்லாம் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி, வேறொருவரிடம் கற்றுக் கொள்!’’ என்று கூறி விட்டார். இவரின் மாமா மிகச் சிறந்த சங்கீத வித்வான். எனினும், வேங்கடசுப்புவை சிஷ்யனாக ஏற்க ஏனோ மறுத்து விட்டார்.
இசை தாகத்துடன் இறை தாகமும் கொண்ட வேங்கட சுப்பு, கிருஷ்ணரிடம் பெரும் பக்தி கொண்டிருந்தார். இதைக் கண்ட அவரின் சிற்றன்னை, ‘`கோயிலுக்குச் சென்று, நல்ல இசைப் புலமை வாய்க்குமாறு பகவானை வேண்டிக் கொள்!’’ என்றாள். அதன்படி தினமும் கோயிலுக்குச் செல்லும் வேங்கடசுப்பு, கண்ணனிடம் மனமுருகிப் பிரார்த்தித்து வந்தார்.
ஒரு நாள் இவர் தியானித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று சலங்கை ஒலி கேட்டது. கண் விழித்தவர், அந்த சத்தத்தைக் கூர்ந்து கவனித்தார். அது, கோயிலின் துளசி மாடத்தின் அருகில் வருமாறு அழைப் பது போலவும், அந்த இடத்தில் உன் வேண்டுதல் நிறைவேறும் என்று தெய்வமே உணர்த்துவதாகவும் தோன்றியது. அதன் பிறகு, அந்த துளசி மாடத்தின் அருகில் அமர்ந்து பிரார்த்திக்கத் தொடங்க, ஒருநாள் கண்ணனின் தரிசனமும் திருவருளும் வாய்த்தது அவருக்கு.
கண்ணனின் திவ்ய தரிசனத்தால் ஞானத் தெளிவு ஏற்பட, அவரது வேண்டுதல் நிறைவேறியது. அப்போதே உள்ளம் உருக மூன்று கீர்த்தனைகள் பாடினார். ஆம்... வேங்கடசுப்பு, வேங்கடகவி ஆனார். இவரது பாடலைக் கேட்டு, ஊத்துக்காடு நாராயண பெருமாள் கோயிலில் உள்ள காளிங்க நர்த்தன மூர்த்தமே நடனமாடியதாகச் சொல்வர்!