ஈசனின் ஆலோசனைப்படி, திருமகளைப் போற்றி அன்னை சக்தி விரதம் இருந்த நன்னாளே வரலட்சுமி விரதம்; அன்னை சக்தி இந்த விரதம் இருந்ததாலேயே கந்தன் அவதாரம் நிகழ்ந்தது என்கின்றன ஞான நூல்கள்.

சீதாதேவி, சித்திரநேமி என்ற தேவதை, அப்சரஸ் பெண்கள், சௌராஷ்டிர அரசி சுசந்திரா, கரசந்திரிகா, சாருமதி ஆகியோரும் அனுஷ்டித்த புனித விரதம் இது. வரலட்சுமி விரத நன்னாளில் திருமகளை விரும்பி அழைத்தால், மனம் மகிழ்ந்து நம் இல்லத்துக்கு மகாலட்சுமி வருவாள்.
முறைப்படி அலங்கார மேடை செய்து, அதில் கலசம் ஸ்தாபித்து திருமகளை அதில் எழுந்தருளச் செய்து, உரிய ஆராதனைகளுடன் நோன்புச் சரடு வைத்து வழிபடுவார்கள். அன்று சுமங்கலிப் பெண்களுக்கு பூ, பழம், மஞ்சள், மஞ்சள் சரடு, புடவை, இனிப்பு ஆகியவற்றை அளிக்க நவநிதிகளும் சேரும் என்பது ஐதீகம்.
இந்த நாளில் மேற்சொன்ன மங்கப்பொருள்களைக் கொடுப்பதால், அதற்கான பலன்கள் பன்மடங்காக நமக்குக் கிடைக்கும்; நம் வீட்டில் மங்கலமும் சுபிட்சமும் பொங்கிப் பெருகும் என்பது பெரியோர் வாக்கு.
‘வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பவர்களின் வீட்டில் நான் நிரந்தரமாக வசிப்பேன்’ என்பது, சாருமதிக்கு திருமகள் அளித்த திருவாக்கு. வரும் வரலட்சுமி விரத நாளில் (20.8.2021 வெள்ளிக்கிழமை) நீங்களும் வர லட்சுமியை வீட்டுக்கு வரவேற்று வழிபடுங்கள்.
விரிவான முறையில் வழிபாடுகள் செய்ய இயலாவிடினும், நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, கீழ்க்காணும் துதியைப் படித்து, வில்வத்தால் மகாலட்சுமி படத்துக்கு அர்ச்சனை செய்து, ஆராதியுங்கள் அவளருள் கிடைக்கும். வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.
உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
எங்களுக்குக் கின்னருள் ஈந்தருள் போற்றி
மங்கலத் திருநின் மலரடி போற்றி போற்றி!
- கே.ஆனந்தி, மதுரை