நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வந்து வழிபட்டுச் செல்லும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டிப் பல மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள். இங்கு ஆண்டுதோறும் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பேராலயம் சாா்பில் அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வேளாங்கண்ணிப் பேராலய வளாகம் முழுவதும் பிரமாண்ட மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வண்ண மின் விளக்கு அலங்காரங்கள் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சுற்றுலா வரும் பயணிகள் மின்விளக்கு அலங்காரத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வேளாங்கண்ணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.