Published:Updated:

வினைகள் அகற்றும் வேல்மாறல் பாராயணம்... நாளை பெசன்ட் நகரில் நடைபெறுகிறது!

வேல்மாறல் பூஜை...

வேல்மாறல்
வேல்மாறல்

முருகக் கடவுளைப் போற்றுவதும், அவன் திருக்கை வேலாயுதத்தைப் போற்றுவதும் வேறுவேறல்ல. பக்தர்கள் கந்தா என்று கதறும்போதும் கந்தனுக்கு முந்திச் சென்று அவர்களைக் காப்பதும் அவன் கைவேல்தான். அந்த வேலின் மகிமையை அறிந்துதான், குமரகுருபரர் `அச்சம் அகற்றும் அயில் வேல்’ என்று போற்றுகிறார்.

வேல்மாறல்
வேல்மாறல்

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த நூல்கள் மொத்தம் ஒன்பது. அவற்றுள் வேல்வகுப்பும் ஒன்று. உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் மருந்தாகி, அவற்றைத் தீர்த்தருள வல்லது `வேல் வகுப்பு’ என்று வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார்.

பெருமை வாய்ந்த வேல்வகுப்பை, பக்தர்கள் எளிதில் பாராயணம் செய்து பயன்பெறும் வகையில் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் 'வேல்மாறல்' என்று ஒரு ஸ்தோத்திரமாகச் செய்து அருளித் தந்தார். வேல் வகுப்பில் உள்ள சில முக்கியமான வரிகளைத் தொகுத்து அவை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும், ஏறி இறங்கி வருவது போலவும் மாறிமாறி வர அமைத்து, 64 அடிகளில் அதை உருவாக்கினார்.

வேல்மாறல் பாராயணம்
வேல்மாறல் பாராயணம்

வேல்மாறல் பாராயணத்தின் மூலம் அனைத்துவிதமான பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டுப் பல்வேறு நன்மைகளை அடையலாம். திருமணத் தடை நீங்குதல், புத்திரபாக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம், செல்வச் செழிப்பு ஆகிய பல்வேறு நன்மைகளை வேல்மாறல் பாராயணத்தின் மூலம் அடையலாம்.

சென்னை பெசன்ட் நகர், கலாக்ஷேத்ரா காலனியில் அமைந்திருக்கும் ஆறுபடைவீடு தலத்தில் நாளை (7-7-2019) வேல்மாறல் பாராயணம் நடைபெற இருக்கிறது. 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் வளர்பிறை சஷ்டி அன்று தொடங்கி, கடந்த 20 ஆண்டுகளாக அங்கு ஒவ்வொரு சஷ்டி அன்றும் வேல்மாறல் பாராயணம் நடைபெற்றுவந்திருக்கிறது. நாளை, 21-வது ஆண்டின் தொடக்கம். இதையொட்டி நாளை மாலை 5 மணிக்குத் திருக்கோயில் கந்த சஷ்டி மண்டபத்தில் வேல்பூஜை, திருப்புகழ் இன்னிசை, வேல்மாறல் பாராயணம் ஆகியன நடைபெற உள்ளன.

முருகன்
முருகன்

பக்தர்கள் வினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயண நிகழ்வில் கலந்துகொண்டு ஆறுபடைவீடுகளையும் தரிசித்த பேற்றினையும் பெற்று துன்பம் நீங்கி சகல வளங்கள் பல பெறலாம்.