Vikatan
Sai Baba Facts

சத்குரு சாய்நாதர் சரிதம்

● கனவில் வந்தார்!

Sai Baba Facts

மும்பையைச் சேர்ந்தவர் ராம்லால். பக்தியும் பண்பும் நிறைந்தவர். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாபா, தன்னை வந்து பார்க்கும்படி ராம்லாலைப் பணித்தார்.

கனவில் தோன்றிய மகான் யார் என்பதும், அவர் எங்கு இருக்கிறார் என்பதும் ராம்லாலுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவரைப் பார்த்தே தீருவது என்று முடிவு செய்தார். என்ன செய்வது, எங்கு செல்வது, எப்படி அறிவது என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தார் ராம்லால்.

அன்று மாலை, அவர் கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு கடையில் காணப்பட்ட படத்தைப் பார்த்தவுடன் பரவசமானார். அது அவரது கனவில் வந்து அழைத்த மகானின் படம். உடனே, கடைக் காரரிடம் சென்று விசாரித்தார். படத்தில் இருந்தவர், ஷீர்டியைச் சேர்ந்த மகானான சாயிபாபா என்பதைத் தெரிந்துகொண்டார்.

தன்னைத் தேர்ந்தெடுத்து அழைத்ததோடு நில்லாமல், வந்து சேரும் வழியையும் காட்டிய பாபாவின் லீலையை எண்ணி உள்ளம் உருகினார் ராம்லால்.உடனே ஷீர்டிக்குப் பயணமானார். அதன்பின் வாழ்நாள் இறுதிவரை பாபாவின் அருகிலேயே இருக்கும் பெரும் பேறு பெற்றார்.

● பாபா கேட்டது பணம் அல்ல..!

அடியவர்களுக்கு தான - தர்மத்தைப் பற்றிப் புரிய வைக்கவும், பணத்தின் மீது உள்ள பற்று குறைவதற்கும், அவர்கள் மனம் தூய்மை அடைவதற்கும் பாபா தட்சணையைக் கட்டாயமாகக் கேட்டுப் பெற்றார்.

பாபா, தான் பெற்ற தட்சணையைப் பல மடங்காகத் திருப்பிக் கொடுப்பது என்ற ஒரு விசித்திரமான நியதியைக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் கிடைத்த தட்சணை ரூபாய் இருபத்தைந்து என்றால், அன்று அவர் விநியோகம் செய்தது ரூபாய் முந்நூறுக்கு மேல் இருக்கும். நாள்தோறும் பாபாவிடம் தானம் பெற மசூதிக்கு இரவு 8 மணியளவில் ஒரு பெரிய கூட்டமே வருவது வழக்கம். வந்தவர் அனைவருக்கும் அவரவர்களின் தேவைக்கேற்ப பாபா மிகச் சரியான தொகையை எப்படி அளித்தார் என்பது, யாராலும் புரிந்துகொள்ள முடியாத அதிசயமாகும்.

பல சந்தர்ப்பங்களில் அவர் மறைபொருளாகவும், குறியீடாகவும் தட்சணை கேட்பதுண்டு.

பேராசிரியர் ஜி.ஜி.நார்கே என்பவர் பல மாதங்கள் பாபாவுடன் தங்கியிருந்து அவரது அன்புக்குரியவராக ஆனார்.

ஒருமுறை பாபாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று சற்றும் எதிர்பாராத விதத்தில் பாபா அவரிடம் பதினைந்து ரூபாய் தட்சணை கேட்டார்.

திடுக்கிட்டுப் போனார் நரகே. காரணம், அவரிடம் அப்போது ஒரு பைசாகூட இல்லை. அவரிடம் பணம் எதுவும் இல்லை என்பது பாபாவுக்கு நன்றாகவே தெரியும்.

நரகேயின் முகவாட்டத்தைக் கண்ட அவர், “உன்னிடம் பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு அது தேவையும் இல்லை. ‘பணம்’ என்று நான் குறிப்பிட்டது விலை மதிப்பில்லாத பண்பு நலத்தையே. நீ ‘யோக வாசிஷ்டம்’ படித்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா? அந்த உயர்ந்த நீதி நூலின் நெறிகளை உணர்ந்து உன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டால், அதுவே உன் மனத்தில் வாசம் செய்யும் எனக்குத் தரும் தட்சணையாகும். இதையேதான் நான் கேட்டேன்!” என்று, தான் தட்சணை கேட்டதன் உட்பொருளை உரைத்தார் பாபா.

Sai Baba Facts

அளவில்லா ஆனந்தம் அடைந்த நரகே அவ்வாறே செய்ய உறுதி பூண்டார். மதிப்பே பெறாத சாதாரண உலோகக் காசுகளை பாபா விரும்பி தட்சணையாகக் கேட்டுப் பெற்றார் என்று நாம் நம்பினால், அது நமது அறியாமையைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்?

விரக்தி: இந்த உலகப் பொருள்கள், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது. அவற்றுக்காக ஏங்கக் கூடாது.

அந்தர்முகதா: உள்முகச் சிந்தனை. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது தியானம் செய்ய வேண்டும்.

தீவினைகள் கசடறக் கழிபடுதல்: கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது போன்ற கொடுஞ்செயல்களைச் செய்யக் கூடாது.

ஒழுங்கான நடத்தை: உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது ஆகியவை.

ப்ரியாக்களை விலக்கி ச்ரியாக்களை நாடுதல்: புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி தியானம், கோயில், தெய்வம் போன்றவற்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.

● அடக்கி ஆளுதல்: மனதையும் உணர்வையும் அடக்கி ஆள வேண்டும்.

● தூய்மை: மனத் தூய்மை வேண்டும்.

● குருவின் இன்றியமையாமை: நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காண வேண்டும் எனில் ஒரு குருவை நாட வேண்டும்.

● கடவுளின் அனுக்கிரகம்: முதல் ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றினால், கடவுளின் அருள் தானாகக் கிட்டும். ஒன்பது கட்டளைகளையும் ஒழுங்காக நிறைவேற்றுபவரிடம் கடவுள் மகிழ்ச்சியுற்று விவேகம்,

வைராக்கியம் ஆகியவற்றை அளித்து, தன்னை அடைய வழி காட்டுவார்.