Published:Updated:

`மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்!’ - உணவு டெலிவரி பணியில் இத்தாலி சைக்கிள் பந்தய வீரர் #Lockdown

உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலிதான் கொரோனா நோய் தாக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் ஆக்கிரமித்து கடுமையான உயிர்ச் சேதங்களை விளைவித்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா, சந்தித்துள்ள உயிர்ச் சேதங்களையும் பாதிப்புகளையும் காட்டிலும் மற்ற உலக நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இந்தக் கொரோனா நோயால் பொருளாதாரத்தில் வரலாறு காணாத சரிவையும் பாதிப்புகளையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 52,000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நாடுதான் இந்த நோயால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,000-த்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் உயிர்ச் சேதங்களைக் குறைக்க அந்நாட்டு அரசு மிகவும் போராடி வருகிறது.

`மரணப்படுக்கையில் மனைவிக்கு சில வார்த்தைகள்!’ - அமெரிக்கக் கணவனின் கடைசி நிமிடங்கள்

இந்நிலையில், நோய் பரவலைத் தடுக்க இத்தாலி முழுவதையும் அந்நாட்டு அரசு முடக்கி இருக்கிறது. அதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் தொடரும் இந்த நீண்ட லாக்டௌனால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இத்தாலியில் வணிக நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைக்கான கடைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில் இத்தாலியின் பிரபல சைக்கிள் பந்தய வீரரான அம்பேர்ட்டோ மரெங்கோ, இத்தாலியில் அனைத்து விளையாட்டு துறைகளும் முடங்கிக் கிடப்பதன் காரணமாக லாக் டௌன் காலத்தில் மக்கள் பசியாற்ற உணவு டெலிவரி பணியில் களம் இறங்கி அசத்தி வருகிறார். அம்பேர்ட்டோவின் இந்தச் சமூக அக்கறை மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஊரெங்கும் அம்பேர்ட்டோவுக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கும் வேளையில் இத்தாலி சைக்கிள் கிளப் மட்டும் அம்பேர்ட்டோவின் இந்தச் செயலுக்கு தன் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது.

இளம் நட்சத்திர வீரராக உருவெடுத்து வரும் அம்பேர்ட்டோ இந்த லாக் டௌன் சமயத்தில் தன் துறை விளையாட்டில் கவனம் செலுத்தாமல் நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காத அம்பேர்ட்டோ தொடர்ந்து உணவு டெலிவரி பணியை மேற்கொள்ள இருப்பதாகவும், இத்தாலியில் லாக் டௌன் முடியும் வரையிலும் மக்களுக்கு பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

27 வயதான அம்பேர்ட்டோ இத்தாலியின் இளம் சைக்கிள் பந்தய வீரராவார். சைக்கிள் பந்தயத்தில் தன்னை முழு நேரமும் ஈடுபடுத்திக்கொண்ட அம்பேர்ட்டோ வெகு விரைவிலேயே அனைவராலும் பேசப்பட்ட வீரராக உருவெடுத்தார். தன் துறையில் சாதிக்க போராடிக்கொண்டிருக்கும் அம்பேர்ட்டோவுக்கு பக்கபலமாக இருந்து செயல்படுபவர்கள் அம்பேர்ட்டோவின் சக நண்பர்கள்தாம், நண்பர்களுடன் இணைந்து சிறு கிளப் நடத்தி வரும் அம்பேர்ட்டோ இத்தாலியில் தொடரும் லாக்டௌனைத் தொடர்ந்து அடுத்து நடைபெறவிருக்கும் பந்தயத்துக்கான பயிற்சிகளையும் தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறார்.

அம்பேர்ட்டோ
அம்பேர்ட்டோ

லாக் டௌனில் ஜிம்முக்கு கூட செல்ல முடியாமல் வீட்டுக்குள் நாள்களை செலவழித்துக்கொண்டிருந்த அம்பேர்ட்டோவுக்கு வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த அம்பேர்ட்டோவுக்குத் திடீரென முளைத்த யோசனைதான் அவரை டெலிவரி பாயாக மாற்றியுள்ளது. வீட்டுக்குள் இருந்துகொண்டு இணையத்தில் தேடிய அம்பேர்ட்டோவின் கண்களுக்கு ஐஸ் கிரீம் டெலிவரி குறித்த விளம்பரம் ஒன்று தென்பட, அடுத்த சில மணி நேரங்களில் டுரின் பகுதி மேயரை சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி அனுமதி பெற்றுவிட்டு, அடுத்த நாளே உணவு டெலிவரி பணியில் களம் இறங்கினார்.

டுரின் மக்களுக்கு பீட்சா, பாஸ்தா, பர்கர் எனப் பல வகையான உணவுப் பொருள்களை டெலிவரி செய்து வரும் அம்பேர்ட்டோ தன்னோடு தன் கிளப் நண்பர்களையும் ஈடுபடுத்தி அசத்தி வருகிறார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வரை டெலிவெரிக்கு பயணிக்கும் அம்பேர்ட்டோ இது பற்றி கூறுகையில், ``லாக்டௌன் நீண்டுகொண்டே இருக்கிறது. என்னால் என் துறைக்கான பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை, ஜிம்முக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள் இருந்து கொண்டே உடற்பயிற்சி செய்வதும் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அம்பேர்ட்டோ
அம்பேர்ட்டோ

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் மக்களுக்கும் இந்த நேரத்தில் என்னால் இயன்றதை ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதன் விளைவாகத்தான் தற்போது உணவு டெலிவரி பணியில் இறங்கியிருக்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் மக்கள் பசியாற்ற பணி மேற்கொள்வது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. லாக்டௌன் முடியும் வரையிலும் தொடர்ந்து இந்த உணவு டெலிவரி பணிகளை மேற்கொள்ள விருக்கிறேன். என் சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவியாகத்தான் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றேன்" என்றார்.

அம்பேர்ட்டோவின் இந்த சமூக அக்கறை செயல் டுரின் பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு