Published:Updated:

`பேரப்பிள்ளைங்க கட்டிப் பிடிச்சு பாராட்டினாங்க!'-ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற பட்டுக்கோட்டை மூதாட்டி

`மகள்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாச்சு. பேரன் பேத்திகளை கொஞ்ச வேண்டிய வயதில் ஓட்டயப்பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறாயே' எனக் கேட்டார்கள்.

மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர்களுக்கான ஆசிய தடகளப் போட்டியில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 72 வயதான ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

இளைய தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த மூதாட்ட

திலகவதி
திலகவதி

பட்டுக்கோட்டை பழைய ஹவுஸிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் திலகவதி. உடற்கல்வி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு வயது 72. கணவர் செல்வராஜ் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சுஜாதா, அஜிதா என இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் தடை தாண்டும் தடகளப் போட்டி உட்பட தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், சாதனைகள் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என நிரூபித்து வருகிறார்.

சான்றிதழ்
சான்றிதழ்

இந்தநிலையில் மலேசியா நாட்டில் குச்சிங்க் என்ற இடத்தில் மூத்தோர்களுக்கான 21-வது ஆசிய தடகளப்போட்டி நடைபெற்றது. கடந்த 2 -ம் தேதி தொடங்கிய இப்போட்டி 7 -ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திலகவதி 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும் 80 மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியிருக்கிறார். பதக்கங்களுடன் ஊர் திரும்பிய அவருக்குப் பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திலகவதியிடம் பேசினோம். ``விளையாட்டு மீது எனக்கு சிறுவயதிலிருந்தே ஆசை. அதற்கு ஏற்றாற்போல் உடற்கல்வி ஆசிரியராகப் பணி கிடைத்தது, எனக்கு இன்னும் வசதியாகப் போனது. பள்ளியில் படிக்கும்போது மாநில அளவிலான போட்டியில் நீளம் தாண்டுதல் உட்பட பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளேன். கடந்த 1965-ல் தேசிய அளவில் பாட்னாவில் நடந்த 100, 200 மீட்டர் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளேன்.

பாராட்டு
பாராட்டு

எனக்கு வயதான பிறகும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் கொஞ்சம்கூட குறையவில்லை. சிலர், `மகள்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திட்ட.. பேரன் பேத்திகளைக் கொஞ்ச வேண்டிய வயதில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறேன் என அலைந்து கொண்டிருக்கிறாயே' எனக் கேட்பார்கள். அவர்களிடம், `இந்த விளையாட்டுகளில் கலந்து கொள்வதால்தான் எனக்கு உசுரே ஓடிக்கொண்டிருக்கிறது' எனக் கூறுவேன்.

மூத்தோர்களுக்கான போட்டி எங்க நடந்தாலும் நான் தவறாமல் கலந்து கொள்வேன். தற்போது, மலேசியாவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து 200 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் பல பிரிவுகளில் நடந்த பல போட்டிகளில் விளையாடினோம். இதில், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 80 மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றேன். இதற்காக என்னைப் பலரும் பாராட்டி வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது. ஊருக்கு வந்ததும் என் பேரப் புள்ளைங்க என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது எனக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

திலகவதி
திலகவதி

அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் கனடாவில் உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறேன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் யார் துணையும் இல்லாமல் தனியாகவே சென்று போட்டியில் கலந்துகொண்டு வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு எனக்கு விபத்து ஒன்றில் காலில் பலத்த அடிபட்டு விட்டது. அதற்கான சிகிச்சை இப்போதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் இனி உன்னால் ஓடுவது சிரமம் எனச் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் நான் தன்னம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டு போட்டிகளில் பங்கெடுத்து வருகிறேன். என் வீட்டைவிட கிரவுண்டை மிகவும் நேசிக்கிறேன்.

இளைய தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஓடி வருகிறேன். ஓடுவதால் எனக்கு உடலில் எந்த நோயும் இல்லை. கடைசி நேரத்திலேயும் நான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். என் மூச்சு கிரவுண்டில் இருக்கும் போதே பிரிய வேண்டும்” என்றார் உறுதியான குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு