Published:Updated:

கொரிய ஓப்பன் பேட்மின்ட்டன்: இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து!

ராகினி ஆத்ம வெண்டி மு.
கொரிய ஓப்பன் பேட்மின்ட்டன்: இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து!
கொரிய ஓப்பன் பேட்மின்ட்டன்: இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து!

கொரிய ஓப்பன் பேட்மின்ட்டன் தொடரில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார், இந்திய பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி.சிந்து.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று வந்த சிந்து, அதன்பிறகு பல போட்டிகளில் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார். ப்ரீமியர் பேட்மின்ட்டன் லீக் தொடரில், சென்னை ஸ்மேஷர்ஸ் அணியை வழிநடத்தி சாம்பியனாக்கினார். அந்தத் தொடரில், ஐந்து போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றிபெற்று அசத்தினார். இரண்டு வாரங்கள் கழித்து நடந்த சையது மோடி சர்வதேசப் போட்டியிலும் சிந்துவே சாம்பியன். அடுத்து, இந்தியன் சூப்பர் சீரிஸ் போட்டி கால் இறுதியில் சாய்னாவோடு மோதினார் சிந்து. அதில், சாய்னாவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். அடுத்து வந்த இறுதிப்போட்டியில், ரியோவில் தங்கத்தை இழந்த கரோலின் மரினோடு போட்டியிட்டு,  அவரை அட்டகாசமாக வீழ்த்தி சாம்பியன் ஆனார் சிந்து. சமீபத்தில், அதே வேகத்தோடு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானின் நசோமியை எதிர்த்துப் போட்டியிட்டு வெள்ளி வென்றார்.

தற்போது, கொரிய ஓப்பன் அரையிறுதியில், சீனாவின் ஹி பிங்ஜியவோ-வை 21-10 17-21 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப்பை ஜப்பானின் நசோமியிடம் இழந்த சிந்து, கொரிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நசோமியைச் சந்திக்க உள்ளார். இதனால், விட்டுக்கொடுத்த பட்டத்தை இப்போட்டியின்மூலம் கைப்பற்றுவாரா சிந்து என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.