Published:Updated:

இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாய்னா, காஷியாப் அபாரம்!

விகடன் விமர்சனக்குழு
இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாய்னா, காஷியாப் அபாரம்!
இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாய்னா, காஷியாப் அபாரம்!
இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாய்னா, காஷியாப் அபாரம்!

ஜகர்த்தா: இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் காலிறுதி ஆட்டத்திற்கு இந்தியாவின் சாய்னா நேவால், ஆண்கள் பிரிவில் காஷியாப் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
 
இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையும், 2 முறை சாம்பியனுமான இந்தியாவின் சாய்னா நேவால், தகுதி நிலை வீராங்கனை இந்தோனேஷியாவின் அப்ரிலா யஸ்வந்திரியை சந்தித்தார்.
 
இதில் கடும் சவாலை சந்தித்த சாய்னா சுமார் 1 மணி நேரம் போராடி 21-17, 14-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில் அவர் 3-ம் நிலை வீராங்கனை சீனாவின் ஷிஸியான் வாங்கை எதிர்கொள்கிறார். இவருக்கு எதிராக சாய்னா இதுவரை மூன்று முறை மோதி அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
 
ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் காஷியாப், உலகின் 3-ம் நிலை வீரரும், போட்டித்தர நிலையில் முதலிடம் வகித்தவருமான சீனாவின் லாங் சென்னுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அசத்தலாக ஆடிய காஷியாப் 21-17, 21-14 என்ற நேர் செட்டில் 45 நிமிடங்களில் வெற்றிபெற்று லாங் சென்னுக்கு அதிர்ச்சி அளித்தார்.
 
தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள காஷியாவுக்கு, அவரது பேட்மிண்டன் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு லாங் சென்னுக்கு எதிராக ஆடிய மூன்று ஆட்டங்களிலும் காஷியாப் தோற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றவரான காஷியாப், காலிறுதியில் டென்மார்க்கின் ஹான்ஸ் கிரிஸ்டியன் விட்டிங்ஹசுடன் மோதுகிறார்.
 
மற்றொரு இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்றுடன் வெளியேறினார். அவரை இந்தோனேஷியாவின் ஹயோம் ரும்பக்கா 21-15, 21-14 என்ற நேர் செட்டில் வென்றார். இதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-21, 14-21 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜுலியன் செங்கிடம் வீழ்ந்தார்.