Published:Updated:

மும்பை டெஸ்ட்: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு!

விகடன் விமர்சனக்குழு
மும்பை டெஸ்ட்: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு!
மும்பை டெஸ்ட்: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு!
மும்பை டெஸ்ட்: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு!

மும்பை: மும்பையில் இன்று தொடங்க உள்ள மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது தான் இந்திய ஜாம்பவான் 40 வயதான சச்சின் டெண்டுல்கர் விளையாடப்போகும் கடைசி போட்டி என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை காண தவமாய் தவமிருக்கிறது. சச்சினின் 200வது டெஸ்ட் இது என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். 200வது டெஸ்ட் மைல்கல்லை எட்டப்போகும் முதல் வீரர் இவர் தான்.

1989ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்குள் நுழைந்த சச்சின், 24 ஆண்டுகால தனது கிரிக்கெட் சகாப்தத்தை முடிக்க இருப்பதால் இந்த டெஸ்ட் உணர்ச்சிபூர்வமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அவரது தாயார் ரஜ்னி, சச்சினின் ஆட்டத்தை ஒருமுறை கூட நேரில் பார்த்தது இல்லை. மகனின் கடைசி சர்வதேச ஆட்டத்தை வீல்சேர் உதவியுடன் அவர் பார்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இது அவரது சொந்த ஊர் என்பதால் மும்பை நகரமே டெண்டுல்கரின் மோகத்தால் மூழ்கி கிடக்கிறது.

அது மட்டுமல்ல, இந்த டெஸ்டில் 2வது விக்கெட் எப்போது சரியும், சச்சின் எப்போது களம் இறங்குவார் என்று தான் ஒவ்வொருவரும் ஏங்குவார்கள். அவர் மைதானத்திற்குள் கால் பதிக்கும் போது போது இரு அணி வீரர்களும் வரிசையில் நின்று மரியாதை செலுத்துவார்கள். கேப்டன் டோனி, அவருக்கு கடைசி நாளிலோ அல்லது டெஸ்ட் முழுவதும் கேப்டன் பதவியை வழங்கி கவுரவிக்கலாம். இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்படும்.

இப்படி கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் சுற்றியே அனைத்து நிகழ்வுகளும் அரங்கேற இருப்பதால், அவர் இந்த போட்டியின் நெருக்கடியையும், எதிர்பார்ப்புகளையும் அந்த அளவுக்கு நிறைவேற்ற போகிறார்? என்ற ஏக்கமும் இல்லாமல் இல்லை. அவர் கடைசி டெஸ்டில் வெற்றியை ருசித்து, சதத்துடன் விடைபெற்றால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இதுவரை 31 வீரர்கள் தங்களது கடைசி டெஸ்டில் சதம் அடித்துள்ளனர். அந்த பட்டியலில் சச்சினும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் இந்த ஆட்டத்தை நேரில் காண இருக்கும் 32 ஆயிரம் பேருக்கும் இது மறக்க முடியாத நிகழ்வாக அமையும்.

##~~##
முதலாவது டெஸ்டில் 3வது நாளிலேயே சுருண்ட மேற்கிந்திய தீவு அணி சரிவில் இருந்து மீள கடுமையாக முயற்சிக்கும். சச்சின் பிரிவு உபசார டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டும், சச்சினை சீக்கிரம் காலி செய்ய வேண்டும் என்பது தான் மேற்கிந்திய தீவு அணியின் ஒரே இலக்காகும். மேற்கிந்திய தீவு வீரர் சந்தர்பாலுக்கு இது 150வது டெஸ்ட் போட்டியாகும். வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.
இதனால் டெஸ்டில் முதல் நாளில் கடைசி நாள் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. சச்சின் இந்த ஆட்டத்தில் எத்தனை ரன்கள் அடிப்பாரா? சதம் அடிப்பாரா? என்று ஒரு பக்கம் கோடிக்கணக்கில் சூதாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.