Published:Updated:

டெஸ்ட் கிரிக்கெட் 2000.. களைகட்டியது லார்ட்ஸ்!

விகடன் விமர்சனக்குழு

லண்டன், ஜூலை 20,2011

இந்தியா - இங்கிலாந்து இடையில் வியாழக்கிழமை தொடங்கவுள்ள சாதனை டெஸ்ட் போட்டிக்காக லார்ட்ஸ் மைதானம் களைகட்டியுள்ளது. ##~~##

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2000-வது போட்டியாக அமையும் இந்த டெஸ்டுக்காக, லார்ட்ஸ் மைதானம் கோலாகலமாக தயாராகியுள்ளது.

டோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கும இடையே 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் நாளை லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. 134 வருட கிரிக்கெட் வரலாற்றில் நடைபெறும் 2000-வது டெஸ்ட் போட்டி எனும் சிறப்பை பெறும் இந்த போட்டிக்காக கிரிக்கெட்டின் மெக்கா என்று வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் கோலாகலமாக தயாராகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 100வது டெஸ்ட் போட்டி எனும் சிறப்பும் இந்த டெஸ்ட்டுக்கு உள்ளது.

இதனால் ரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிரிக்கெட்டின் சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை அடிக்க வாய்ப்புள்ளதும் இந்த டெஸ்ட் போட்டியின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் இந்தியா தனது முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த தொடரில் வெல்ல வேண்டும் என்று உறுதியாக உள்ளது.

எனவே, முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையிலான பலப்பரிட்சையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லார்ட்சில் நாளை துவங்கும் இந்திய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டிக்காக இரு நாட்டை சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டிக்காக சிறப்பு நாணயமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே   முதல் டெஸ்ட்டை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி சார்பில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக இளம் வீரர் சுரேஷ் ரெய்னா களம இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.