Published:Updated:

தொடரும் உயிரிழப்புகள்: கிரிக்கெட்டில் மரணங்களை தடுப்பது எப்படி?

Vikatan Correspondent
தொடரும் உயிரிழப்புகள்: கிரிக்கெட்டில் மரணங்களை தடுப்பது எப்படி?
தொடரும் உயிரிழப்புகள்: கிரிக்கெட்டில் மரணங்களை தடுப்பது எப்படி?
தொடரும் உயிரிழப்புகள்: கிரிக்கெட்டில் மரணங்களை தடுப்பது எப்படி?

மீபகாலமாக கிரிக்கெட்டில் நிகழும் உயிர்பலிகளை பார்க்கும் பொழுது, கிரிக்கெட் விளையாட்டு பாதுகாப்பனதுதானா? என்ற கேள்வி எழுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தேடினால், 1624-ம் ஆண்டே முதல் மரணம் நிகழ்ந்துள்ளது.

அதற்கு பின் தற்போது வரை பல்வேறு காலக்கட்டங்களில் பந்து தாக்கியும், வேறு வகையான காயங்கள் காரணமாகவும் 9 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

'கார்டியாக் அரெஸ்ட்' என்றால் என்ன?


அண்மையில் கொல்கத்தாவை சேர்ந்த அங்கித் கேஷ்ரி என்ற 20 வயது கிரிக்கெட் வீரர், சக வீரருடன் மோதி உயிரிழந்தது இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பந்தை கேட்ச் பிடிக்கும் முயற்சியில் சக வீரரான மாண்டலுடன் அங்கித் மோதினார்.

அந்த அதிர்ச்சியில் அவரது இதயம் இயங்குவதை நிறுத்திக் கொண்டது. மருத்துவரீதியாக இதனை 'கார்டியாக் அரெஸ்ட்' என்று கூறுவார்கள்.

தொடரும் உயிரிழப்புகள்: கிரிக்கெட்டில் மரணங்களை தடுப்பது எப்படி?

பொதுவாக ஒருவருக்கு இதயநோய் இருந்து அது தெரியாமல் இருந்தால், இது போன்ற அதிர்ச்சிகரமான நேரங்களில் 'கார்டியாக் அரெஸ்ட்' ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால்தான் அடிக்கடி விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவபரிசோனை நடத்தப்பட வேண்டுமென்றும் 'கார்டியாக் அரெஸ்ட்' பற்றி விளையாட்டு வீரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் பல காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தரமற்ற உபகரணங்கள்
கிரிக்கெட் விளையாட்டில் வீரர்கள் உயிரிழக்கும் போதும், மீள முடியாத காயங்கள் ஏற்படும் போதும் வீரர்களின் பாதுகாப்பு பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஒரு வாரமோ அல்லது இரு வாரமோ அந்த சம்பவம் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது-. பின்னர் அந்த நிகழ்வு மறக்கப்பட்டு விடுகிறது. இதனால்தான் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. ஹெல்மட், தொடை மற்றும் மார்பு பகுதிகளில் பேட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்தாலும் மரணம் நிகழ்வது, அந்த உபகரணங்களின் தரம் குறித்த கேள்வி எழுகிறது.

பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் கிடையாது

ஆஸ்திரேலிய வீரர் ஃபில் கியூஸ் பந்து தாக்கி மரணம் அடைந்த போது, அவர் பயன்படுத்திய ஹெல்மெட் நவீன பாதுகாப்புகளை தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த சமயத்தில் வந்திருந்த நவீன ஹெல்மெட்டை பயன்படுத்த கியூஸ் தவிர்த்தார் என்றும், அதனால்தான் அவருக்கு காது ஓரத்தில் பந்து தாக்கிய போது, தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

தொடரும் உயிரிழப்புகள்: கிரிக்கெட்டில் மரணங்களை தடுப்பது எப்படி?

கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கில் வீரர்களே தங்களது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வதாகவும், அதனாலேயே இது போன்ற துர் சம்பவங்கள் நிகழ்வதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.


பவுன்சர் பந்து தேவையா?
மேலும் கிரிக்கெட்டின் ஆபத்தான அம்சமாக பார்க்கப்படுவது பவுன்சர் பந்து தான்... அதாவது எகிறி வரும் பந்து.  ஹியூசின் மரணத்தின் போது பவுன்சர் பந்துகளை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்து அடங்கியது. பவுன்சர் பந்துகளுக்கு தடை விதித்தால் கிரிக்கெட்டின் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்றும், இதுபோன்ற சில சம்பவங்களுக்காக பவுன்சர் பந்துகளுக்கு தடை விதிப்பது முறையல்ல என்றும் முன்னாள் வீரர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போதும் கிரிக்கெட்டில் பவுன்சர் பந்துகள் வீசப்பட்டுதான் வருகின்றன.

வீரர்களுக்கும் அக்கறை வேண்டும்

போட்டியில் தீவிர கவனம் செலுத்தும் வீரர்கள் தங்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனரா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். பேட்ஸ்மேனுக்கு அருகில் பீல்டிங்கில் ஈடுபடும் சில வீரர்கள் தலைக்கவசம் அணியாமல் நிற்பதை இப்போதும் பார்க்க முடிகிறது. வெற்றி தோல்வியிலும், சாதனைகள் நிகழ்த்துவதிலும் கவனம் செலுத்தும் வீரர்கள், தங்களது பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுதான் கிரிக்கெட் விளையாட்டில் அசம்பாவித சம்பவங்களை குறைக்கும் வழியாக அமையும்.

-மதியழகன்