Published:Updated:

‘என்னாது இந்திய டீம் கேப்டனா...? அப்படி ஓரமா போய் உக்காரு!’ - கேரள சர்ச்சை

Vikatan Correspondent
‘என்னாது இந்திய டீம் கேப்டனா...? அப்படி ஓரமா போய் உக்காரு!’ - கேரள சர்ச்சை
‘என்னாது இந்திய டீம் கேப்டனா...? அப்படி ஓரமா போய் உக்காரு!’ - கேரள சர்ச்சை

இந்திய கால்பந்து ஜாம்பவான்களில் தற்போதைய தலைமுறைக்கு மூன்றே மூன்று பேரைத்தான் அனேகமாகத் தெரியும். அதில் முதலாமானவர் ஐ.எம்.விஜயன். மற்ற இருவர் பாய்ச்சிங் பூட்டியா, சுனில் சேத்ரி. இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் விஜயனும் ஒருவர். சர்வதேச  ஆட்டத்தில், போட்டித் தொடங்கியதும் மிக விரைவாக அதாவது 12வது விநாடியில் கோல் அடித்து சாதனை படைத்தவர் இந்த விஜயன் இந்த சாதனைக்கு உலகளவில் மூன்றாவது இடம் வகிக்கிறது. கடந்த 1995ம் ஆண்டு பூடான் அணிக்கு எதிராக இந்த சாதனையை விஜயன் படைத்திருந்தார். மோகன் பகான், ஜேசிடி மில்ஸ், ஈஸ்ட் பெங்கால், எப்.சி கொச்சின் போன்ற புகழ்பெற்ற கிளப் அணிகளுக்காகவும் விஜயன் விளையாடியுள்ளார். 

இந்திய அணிக்காக 1989ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை 79 சர்வதேச போட்டிகளில் விளையாடி 40 கோல்களையும் அடித்துள்ளார். இந்திய அணிக்கு நீண்ட காலமாக கேப்டனாகவும் இருந்தார். தமிழில் 'திமிரு ' என்ற படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார். பன்தமுகத் திறமை கொண்ட விஜயனுக்கு நடப்பு ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் வேதனைக்குரிய அந்த அனுபவம் கிடைத்தது. 

ஐஎஸ்எல் தொடரின் இறுதி ஆட்டம் கொச்சியில் நடைபெற்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இந்த போட்டியை காண கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர் சச்சினும் அத்லெடிகோ டி கொல்கத்தா அணியின் உரிமையாளருமான கங்குலியும் வந்திருந்தனர். போட்டியை காண ஐ.எம். விஜயனுக்கு கேரள கால்பந்து சங்கம் டிக்கெட் வழங்கியது. டிக்கெட் என்றால் விவிஐபிக்கான டிக்கெட் எல்லாம் கிடையாது. சாதாரண ரசிகர்கள் அமரும் பகுதியில் அதுவும் ஒன்றே ஒன்று போனால் போகிறது என்ற ரீதியில் வழங்கியிருந்தது. 

இதையடுத்து, கேரள கால்பந்து சங்கத்தை தொடர்பு கொண்டு விஜயன் கேட்டுள்ளார். 'உங்களுக்குலாம் அதிகபட்சமாக இதுதான் செய்ய முடியும். நீங்கலாம் விவிஐபிகள் அமரும் பகுதியில் அமர்ந்து போட்டியை பார்க்கும் அளவுக்கு வொர்த் இல்லைனு' சொல்லிருக்காங்க. நொந்து போனார் மனிதர். விஜயனுக்கோ சச்சின், கங்குலி அருகே அமர்ந்து போட்டியை பார்க்க ஆசை 

'இதே போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றிருந்தால், கங்குலி அருகே அமர்ந்து போட்டியை பார்த்திருப்பேன். ஆனாலும்  கண்டிப்பாக நான் போட்டியை பார்க்க வருவேன்' என்று விஜயன் வெடித்து விட்டார். இந்த விஷயத்தை கேள்விபட்ட கேரளா பிளாஸ்ட்ர்ஸ் அணியின் அம்பாசிடரான நடிகர் நிவின் பாலி  கேரள கால்பந்து சங்கத்திடம்  விஜயனை , விவிஐபி பகுதியில் அமர வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிவின் பாலியின் சிபாரிசின் அடிப்படையில் விவிஐபிக்கள் அமரும் பகுதிக்கு செல்ல விஜயனுக்கு அனுமதி கிடைத்தது. நிவின் பாலியே நேரில் வந்து விஜயனை தன்னுடன் அழைத்து சென்றார். 

இந்த சம்பவம் குறித்து விஜயன் கூறுகையில்,  ''எனக்கு மைதானத்தில்  'ஈ' ஸ்டேன்டில் சாதாரண டிக்கெட் ஒதுக்கப்பட்டிருந்தது. கேட்டதற்கு உங்களுக்கெல்லாம் அதிகபட்சமாக இதுதான் செய்ய முடியும். சச்சின், கங்குலி கூடவெல்லாம் அமர்ந்து போட்டியை பார்க்க ஆசைப்படாதீர்கள் என்றார்கள். இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஈவன்ட் மேனேஜ்மேன்ட் நிறுவனத்தால் விற்கப்பட்டுள்ளன. 300 ரூபாய் டிக்கெட் 3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதனால் கால்பந்து விளையாட்டை உண்மையாக நேசிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களால் போட்டியை காண முடியவில்லை'' என்றார் வேதனையுடன். 

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனுக்கே நடிகர் சிபாரிசில்தான் இருக்கை கிடைக்கிறது என்பதுதான் காலத்தின் கொடுமை!

-எம்.குமரேசன்

புகைப்பட உதவி: MANORAMA