Published:Updated:

கிரிக்கெட் ஆஸ்திரேலியா விராட்டுக்கு கேப்டன் பதவி வழங்கியதன் பின்னணி!

விகடன் விமர்சனக்குழு
கிரிக்கெட் ஆஸ்திரேலியா விராட்டுக்கு கேப்டன் பதவி வழங்கியதன் பின்னணி!
கிரிக்கெட் ஆஸ்திரேலியா விராட்டுக்கு கேப்டன் பதவி வழங்கியதன் பின்னணி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் , ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள இன்டர்நேஷனல் லெவன் அணிக்கு இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டிருப்பதுதான்.இந்த அணியில் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) குயின்டன் டி காக் (தென்ஆப்ரிக்கா) ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா) பாபர் ஆஷம் (பாகிஸ்தான்) மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) ஜஸ்ப்ரித் பும்ரா (இந்தியா) இம்ரான் தாகிர் (தென்ஆப்ரிக்கா) ஆகியோரும் இடத் பெற்றுள்ளனர். 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஜனவரியில் நடந்த தொடரில் அதன் சொந்த மண்ணில் ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. இந்திய அணி தோல்வி கண்டாலும் தனிப்பட்ட முறையில் விராட் கோலி அபாரமாகவிளையாடினார். பெர்த்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 91 ரன்களும் அடுத்து 56,117,106 ரன்கள் எடுத்து அசத்தினார். ஒருநாள் தொடரை இந்திய அணி  இழந்தாலும் டி20 போட்டித் தொடரில் அசத்தியது. முதன்முறையாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி டி20 தொடரில் அதன் சொந்த மண்ணிலேயே வொயிட் வாஷ் செய்தது. டி20 போட்டியிலும் விராட் கோலி 90, 59, 50 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய ரசிகர்களை மிரள வைத்தார்.

தொடர்ந்து 2016ம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடரிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சாத்தி எடுத்தது. மொகாலியில் நடந்த ஆட்டத்தில் விராட் கோலி 84 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த காலண்டர் வருடத்தில் கோலி 3 சதங்களும் 4 அரை சதங்களும் கோலி விளாசியுள்ளார். 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 739 ரன்களைக் குவித்துள்ளார். கேப்டனாக அணியை வழிநடத்தும் திறமை மட்டுமல்லாமல் அட்டகாசமான பேட்டிங் திறனும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டை மயக்கியது. இதையடுத்துதான் ஸ்டீவன் ஸ்மித்தை விடுத்து, விராட்டுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது. 

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விடுத்துள்ள அறிக்கையில்,'' இந்த ஆண்டில் 10 ஒருநாள் போட்டிகளில்தான் விராட் கோலி விளையாடியுள்ளார். அதில் 8 இன்னிங்ஸ்களில் 45 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் . ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்ச்சியான சதங்கள், நியூசிலாந்து அணிக்கு எதிராக  ஒரே இன்னிங்சில் 154 ரன்களை குவித்தது ஆகியவை அவரை இந்த ஆண்டின் சிறப்பான ஒருநாள் ஆட்டக்காரராக அடையாளம் காட்டியுள்ளது. இந்தியா அணி 59 முறை ரன் சேசிங் செய்ததில் 20 முறை வெற்றிக்கு விராட் காரணமாக இருந்துள்ளார். ரன் சேசிங்கின் போது அவரது சராசரி 90.10 ஆகும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டை போலவே, ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக கோலி முன்னதாக  அடையாளம் கண்டு நியமிக்கப்பட்டதும் களத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷமும் தங்களை இம்ப்ரெஸ் செய்துள்ளது'' என கூறியுள்ளது. 

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனுக்கும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் பிடித்த ஒன்று. கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது,  ''இந்த நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட வருவது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆஸ்திரேலியா எனக்கு மிகவும் பிடித்த நாடு. இங்கு வரும் போது எனக்குள் ஒரு பாசிடிவ் எனர்ஜி ஏற்படுகிறது ''என விராட் கோலி தெரிவித்திருந்தார். 

வரும் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

-எம்.குமரேசன்