Published:Updated:

இந்தியாவின் மலிங்கா... பூம் பூம் பும்ராவின் பின்னணி தெரியுமா? #Bumrah

VIVEK ANAND P
இந்தியாவின் மலிங்கா... பூம் பூம் பும்ராவின் பின்னணி தெரியுமா? #Bumrah
இந்தியாவின் மலிங்கா... பூம் பூம் பும்ராவின் பின்னணி தெரியுமா? #Bumrah

இங்கிலாந்திடம்  தோல்வியடைந்து தலைகுனிவை சந்தித்திருக்க வேண்டிய தருணத்தில், 'அவ்ளோ சீக்கிரம் விட்ற  மாட்டோம் கண்ணுகளா' என கெத்தாக ஜெயித்து நிமிர்ந்திருக்கிறது இந்தியா. அணியின் வெற்றிக்கு அதிமுக்கிய காரணம் பும்ராவின் அந்த மேஜிக் ஓவர். தான் பதவியேற்ற முதல் தொடரையே தோல்வியுடன் துவங்கியிருக்க வேண்டிய கோஹ்லிக்கு, டிவிஸ்ட் கொடுத்து மேட்ச்சை ஜெயிக்க வைத்து டி20 தொடரை உயிர்ப்புடன் வைக்க உதவியிருக்கிறது நெஹ்ரா - பும்ரா இணை.  

யார் இந்த பும்ரா ?

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பிறந்தவர் பும்ரா, ஆனால் சீக்கிய வம்சத்தைச்  சேர்ந்தவர். ஜாஸ்பிட் பும்ராவின்  முழு பெயர் ஜாஸ்பிட் ஜாஸ்பிர் சிங் பும்ரா. எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் இருக்கும் அதே டெம்பிளேட் தான் பும்ராவுக்கும். சிறு வயதில் இருந்தே படிப்பை விட கிரிக்கெட் மீது தான் ஆர்வம் அதிகம். பின்னர்  பெற்றோர் ஆசியுடன் முழு நேர கிரிக்கெட் வீரராகி விட்டார். ஆரம்பத்தில் ஸ்விங் பவுலிங்கில் தான் அதிக கவனம் செலுத்தினார்.

நான்காண்டுகளுக்கு  முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சி செய்யும்போது பந்துவீசுவதற்காக பும்ரா அழைக்கப்பட்டிருந்தார். அங்கே இவரது திறமையை  தெரிந்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள், இவரை பற்றி பயிற்சியாளர் ஜான்  ரைட்டிடம் சொல்லியிருக்கிறார்கள்.  பும்ராவின் ஆட்டத்தைப் பார்த்து திருப்தி அடைந்த ஜான் ரைட் மும்பை அணிக்கு ஏலத்தில் எடுக்க பரிந்துரை செய்தார். மிகக் குறைந்த விலைக்கு அப்போது மும்பை அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். " முப்பது பேர் கொண்ட அணியில் இருப்பது பெரிய விஷயமில்லை, அணிக்குள் உன்னை எடுக்க வேண்டும் எனில்  நீ மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும்" என ஜான் ரைட் பும்ராவிடம் சொல்லியிருந்தார், சையது முஷ்டாக்  அலி டி20  கோப்பைத் தொடர் மார்ச் மாதத்தில் நடந்தது. அந்த தொடரில் முழு திறமையைப் பயன்படுத்தி பந்து வீசினார். குஜராத்துக்காக ஆடிய பும்ரா, தனது ஸ்விங்களால் எதிரணியைத் திணறடித்தார். இறுதிப்போட்டியில் குஜராத்தும் பஞ்சாபும் மோதின. குஜராத்தோ தான் பிறந்த மாநிலம், பஞ்சாபோ தனது பூர்வீகம், ஐ.பி.எல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரமே இருந்த சமயம் அது. பஞ்சாப் அணியை சுருட்டி எறிந்து, கோப்பையை ஜெயிப்பதே  இப்போதைய கோல் என சபதம் எடுத்தார் பும்ரா.

மார்ச் 31, 2013 அன்று இந்தூர் ஸ்டேடியத்தில் மேட்ச் நடந்தது. முதலில் பேட்டிங் பிடித்தது பஞ்சாப் அணி. முதல் ஓவரே மெய்டன் வீசினார் பும்ரா. இறுதிப்போட்டி ஒன்றில், பவர்பிளேவில் மெய்டனா என அதிர்ச்சியடைந்து பஞ்சாப். ஆனால் அந்த அதிர்ச்சியில் அந்த அணி மீள்வதற்குள் மேட்சே முடிந்து விட்டது. நான்கு ஓவர் வீசி ஒரு மெய்டனுடன் 14 ரன்கள்  விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார் பும்ரா. குஜராத் வென்றது. 

உள்ளூர் போட்டிகளில் பும்ராவின் திறமையை உணர்ந்து திருப்தியடைந்த ஜான் ரைட், ஐ.பி.எல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இவரை களமிறங்கினார்.  கெயில், டிவில்லியர்ஸ், கோஹ்லி என பிரம்மாண்டமான  வீரர்கள் இருக்கும் அணிக்கு எதிரான போட்டியில், 20 வயது இளம் பவுலர்  என்ன தாக்கத்தை ஏற்படுத்தி விடப்போகிறார் என்று தான் அனைவரும் நினைத்தனர். சச்சின் அணியில் இடம்பெற்றதை பெரும் பாக்கியம் என கருதிய பும்ரா, இந்த வாய்ப்பை விடக்கூடாது என முடிவு செய்தார். ஐ.பி.எல்லில் பும்ராவின் முதல் விக்கெட்டே விராட் கோஹ்லி தான். அந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் பும்ரா. ஆனால் அந்த சீஸனில் கடும் போட்டி காரணமாக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் தான் வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆனால் அந்த சீஸனில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை ஜெயித்தது, மும்பை அணிக்கு முதல்  ஐ.பி.எல் கோப்பை அது, சச்சினுக்கு கடைசி ஐ.பி.எல் தொடர் அது தான். ஆறு வருட கனவு நினைவேறியதால் செண்டிமெண்ட் காரணமாக பல வீரர்களை தக்கவைக்க முடிவு செய்தது மும்பை அணி. 

2014ல் பும்ராவை 1.2 கோடி கொடுத்து மீண்டும் ஏலத்தில் எடுத்தது மும்பை அணி. மலிங்காவுடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார் பும்ரா. அப்போது மலிங்காவிடம் யார்க்கர்கள் குறித்து டிப்ஸ்  கேட்டிருக்கிறார். முதலில் நீ யார்க்கர் வீசு எனச் சொல்லி பும்ராவை பரிசோதித்தார் மலிங்கா. "உன்னிடம் ஆர்வம் இருக்கிறது, ஆனால் இன்னம் கொஞ்சம் விவேகம் தேவை, எதிரில் இருக்கும்  பேட்ஸ்மேனை பொறுத்து, மேட்சின் தன்மையை பொறுத்து, ஆடுகளத்தை பொறுத்து, வீச வேண்டும். சில சமயம்  தொடர்ச்சியாக யார்க்கர் தாக்குதலும் நடத்தலாம். உன்னுடைய பந்தில் சிறிது ஸ்விங் இருக்கிறது, அதே சமயம் நீ யார்க்கரும் வீசுகிறாய், கொஞ்சம்  சீரியசாக பயிற்சி செய்தால் உனக்கு பல உயரங்கள் காத்திருக்கிறது" என உத்வேகம் தந்ததுடன், பல டிப்ஸ்களை தந்திருக்கிறார் மலிங்கா.

அந்த சீஸனில் 11 போட்டிகளில் ஆடும் வாய்ப்பு  கிடைத்தது, யார்க்கர், ஸ்விங் இரண்டையும் நன்றாக வீச வேண்டும் என முடிவு செய்ததால், திடீரென தடுமாற ஆரம்பித்தார் பும்ரா. விக்கெட்டுகளே கிடைக்கவில்லை. ஆனால் அந்த  சீஸனில்  அபார யார்க்கர்களால் கடைசி கட்ட ஓவர்களில் கூட  குறைவான ரன்களையே தந்தார். நல்ல எகானமி கொண்ட பவுலர் என்ற அடையாளம்  அவருக்கு கிடைத்தது, அந்த சீசனில் சராசரியாக ஒரு ஓவருக்கு வெறும் 7.58 ரன்களை மட்டுமே தந்தார்.  வயது கூட, கூட வேகத்துடன் விவேகமும் சேர்ந்தது. உள்ளூர் போட்டிகளில் இவர் டெத் ஓவர்களில் மிரட்ட, ஆஸ்திரேலிய தொடருக்கு எனக்கு பும்ரா வேண்டும் என கேட்டு வாங்கினார் கேப்டன் தோனி.

2016 ஜனவரியில் குடியரசு தினத்தன்று நடந்த  போட்டியில் அடிலெய்டு மைதானத்தில் பும்ரா அறிமுகமானார். 3.3 ஓவர்கள் வீசி  23 ரன் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் வார்னர், பால்க்னர் விக்கெட்டுகளும் அடங்கும்.  ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியிலே அசத்திய பும்ராவை தோனிக்கு மிகவும் பிடித்துப்போனது. " கடைசி கட்ட ஓவர்களில், குறிப்பாக டெத் ஓவர்களில் வீசுவதற்கு ஒரு நல்ல பவுலரை  தேடிக்கொண்டிருந்தோம்,  இதோ பும்ரா கிடைத்துவிட்டார்"  என பெருமையாகச் சொன்னார் தோனி. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார். தோனியின் நம்பிக்கையை காப்பாற்றியது மட்டுமின்றி அபாயகரமான டெத் பவுலராக மாறினார் பும்ரா. ஆஸ்திரேலிய மண்ணிலும் சரி, ஆசிய கோப்பையிலும் சரி தொடர் யார்க்கர்கள் வீசி பிரமிக்க வைத்தார்.  யாரு சாமி இவன் என  எதிரணி பேட்ஸ்மேன்களும், இந்திய ரசிகர்களும் ஆச்சர்யம் காட்டினார்கள். உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான முக்கியமான போட்டியொன்றில் மேட்ச் கடைசி ஓவர் வரை செல்வதற்கு காரணமே பும்ரா தான். கடந்த ஆண்டில் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் பும்ரா. உலகிலேயே ஒரு ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் பும்ரா தான்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் பும்ராவின் பெர்ஃபார்மென்ஸ் மெச்சத்தக்க வகையில் இல்லை. பேட்டிங் பிட்ச்களில் கொஞ்சம் திணறவே செய்தார். நேற்று மேட்ச் நடந்த நாக்பூர் பிட்ச் ஸ்லோவாக இருந்தது, இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் பும்ரா. இங்கிலாந்து வீரர்கள் பும்ராவின்  யார்க்கர்களை எப்படிச் சமாளிப்பது என வீடியோ பார்த்து  சில டெக்கினிக்குகளை கடைபிடித்தனர். இவர்களுக்கு யார்க்கர் சரிவராது என்பதை உணர்ந்த பும்ரா, நேற்று லென்த் பால் வீசுவதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அதோடு ஸ்லோவாக பந்து வீசும் யுக்தியையும், ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசி பேட்ஸ்மேனை குழப்பும் யுக்திகளையம் ஒரு சேர கடைபிடித்தார். தனது கடைசி இரண்டு ஓவர்களில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே  விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் ரூட், பட்லர்,  மொயின் அலி என மூன்று அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச வேண்டியதிருந்தும் கூட, அதிராமல், அசராமல் வீசினார் பும்ரா. ரூட்டும், பட்லரும் அவுட் ஆயினர். கடைசி பந்தில்  ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை  ஏற்பட, தனது பிரதான ஆயுதமான வைடு யார்க்கர் வீசி அணியை வெற்றியடைய வைத்தார்.

வெகு காலத்திற்கு பிறகு தொடர்ச்சியாக கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பவுலர் நமக்கு கிடைத்திருக்கிறார். இவருக்கு வயது வெறும் 23 தான். மிகச்சரியாக இவரை பயன்படுத்தினால் இந்திய அணியின் மலிங்காவாக இவரை மாற்றலாம். அது பும்ரா, இந்திய அணி இருவரின் கைகளில் இருக்கிறது. 

- பு.விவேக் ஆனந்த்