Published:Updated:

அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது: கெய்ல் மகிழ்ச்சி

விகடன் விமர்சனக்குழு
அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது: கெய்ல் மகிழ்ச்சி
அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது: கெய்ல் மகிழ்ச்சி
அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது: கெய்ல் மகிழ்ச்சி

லண்டன்: மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடனான கருத்து வேறுபாடுகள் அனைத்தும் தீர்ந்து விட்டதாக அந்நாட்டு அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ் கெய்ல் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் 32 வயதான கிறிஸ் கெய்ல், மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை பகிரங்கமாக விமர்சித்ததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

இதன் பிறகு அவருக்கும், கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் ஒரு வழியாக சமரசம் ஏற்பட்டு, 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மேற்கு இந்திய தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து-மேற்கு இந்திய தீவுகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் கெய்ல் பங்கேற்கிறார்.

முன்னதாக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்சில் நடந்த மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் விளாசினார். டேரன் பிராவோ சதத்தின் உதவியுடன் அந்த ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் மிடில்செக்ஸ் அணியை நொறுக்கியது.

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பிறகு கெய்ல், மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய முதல் ஆட்டம் இது தான். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கும் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே இருந்த அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு விட்டன. மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடி, அணியை மேலும் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி அனைத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் மேலும் ரன்கள் குவிக்க முடியும், சதங்கள் விளாச முடியும் என்று நம்புகிறேன்.

மிடில்செக்ஸ் அணியை எதிர்த்து களம் இறங்கிய போது தொடக்கத்தில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக மீண்டும் 45-ம் நம்பர் கொண்ட உடையை அணிந்து விளையாடியது மகிழ்ச்சியான விஷயம். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

பீட்டர்சனுக்கு பாராட்டு!

கெவின் பீட்டர்சன், இங்கிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஒரு நாள் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை தவற விடுவது பயிற்சியாளர், கேப்டன், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நிச்சயம் வருத்தத்தை அளிக்கும். இது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையாகும்.

ஒரு நாள் போட்டியில் இருந்து நீங்கள் விலகும் போது, அதன் பிறகு 20 ஓவர் சர்வதேச போட்டியிலும் ஆட முடியாது` என்று இங்கிலாந்து விதி சொல்கிறது. ஒரு வீரர், குறிப்பிட்ட வடிவிலான போட்டியில் இருந்து மட்டும் ஓய்வு பெற விரும்பினால், இன்னொரு வடிவிலான போட்டியில் இருந்தும் ஏன் ஓய்வு பெற வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை என்றும் கெய்ல் கேள்வி எழுப்பியுள்ளார்.