Published:Updated:

தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி! ஆம்லா, ஸ்டெயின் அசத்தல் ஆட்டம்!

Vikatan Correspondent
தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி! ஆம்லா, ஸ்டெயின் அசத்தல் ஆட்டம்!
தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி! ஆம்லா, ஸ்டெயின் அசத்தல் ஆட்டம்!
தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி! ஆம்லா, ஸ்டெயின் அசத்தல் ஆட்டம்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா ஒரு இன்னிங்ஸ், 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்மித் தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 385 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் குக் 115 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்கா தரப்பில் மோர்னே மோர்க்கெல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா அணியில் கேப்டன் ஸ்மித்- ஆம்லா ஜோடி அபாரமாக விளையாடியது. 100வது போட்டியில் பங்கேற்ற ஸ்மித் சதம் அடித்து சாதனைப் படைத்தார். ஸ்மித்தை தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஆம்லா முச்சதம் அடித்தார். இதன் மூலம் முச்சதம் அடித்த முதல் தென் ஆப்ரிக்கா வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

காலிஸ் தன் பங்குக்கு சதம் அடித்து விலாச தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 637 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அப்போது ஆம்லா 311 ரன்களுடனும், காலிஸ் 182 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

252 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி, 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. பெல் 14 ரன்னும், போபரா 11 ரன்னும் களத்தில் இருந்தனர்.

ஐந்தாம் நாளான நேற்று இங்கிலாந்து அணி டிரா செய்யும் நோக்கத்தில் விளையாடியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். தென் ஆப்ரிக்கா வீரர் ஸ்டெயின் அபாரமாகப் பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்தார்.

தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி! ஆம்லா, ஸ்டெயின் அசத்தல் ஆட்டம்!

ஓரளவுக்கு சிறப்பாக ஆடிய பெல் 55 ரன்களில் வீழ்ந்தார். இதற்காக பெல் 220 பந்துகளை எதிர்கொண்டு கடுமையாக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெல் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணியினரின் நம்பிக்கையும் தகர்ந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் தென் ஆப்ரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தென் ஆப்ரிக்கா வீரர் ஸ்டெயின் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 311 ரன்கள் குவித்த தென் ஆப்ரிக்கா வீரர் ஆம்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின்மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்கா அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங்கில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் முதன்முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக இங்கு நடந்த 13 டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி 7 போட்டியை டிரா செய்தது. இங்கிலாந்து அணி 6 போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.