Published:Updated:

அருண் கார்த்திக் சதம்... எக்ஸ்ட்ராஸில் மதுரை பாந்தர்ஸ் ஒரு சாதனை! #TNPL

கார்த்திகா ராஜேந்திரன்

பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் வெற்றியை ஈட்டின.

Arun Karthik - Harish Kumar
Arun Karthik - Harish Kumar ( TNPL )

முதல் இன்னிங்ஸில் 190+ ரன்கள்...இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் மழை... டி.என்.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தன. பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

முதல் போட்டி: கோவை vs மதுரை

மதியம் 3:30 மணிக்கு திண்டுக்கலில் தொடங்கிய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 3-வது ஓவரிலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் சரத்ராஜ் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கேப்டன் அருண் கார்த்திக், ஐந்தாவதாக களமிறங்கிய கெளசிக்கின் அதிரடியாக ரன் சேர்க்க, மதுரை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

அருண் கார்த்திக் - 106 (61) - 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்
Arun Karthik
Arun Karthik
TNPL

டி.என்.பி.எல் டி-20 தொடரின் நடப்பு சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் அணி, இம்முறையும் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளதை நேற்றைய போட்டியின் மூலம் தெளிவுப்படுத்தியது. கேப்டன் அருண் கார்த்திக்கின் ஃபார்ம், மதுரை அணிக்கு பலம். அசால்டாக பந்துகளை எதிர்கொண்ட அருண், டி.என்.பி.எல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். ஒன் மேன் ஆர்மியாக அணியை வழிநடத்திச் சென்ற அருண் கார்த்திக்கு இனி வரும் போட்டிகளில் மற்ற பேட்ஸ்மேன்களும் கைகொடுத்தால் மதுரை அணி இன்னும் அசத்தும்.

196 ரன் இலக்கை சேஸ் செய்த கோவை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் அவுட்டாகி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 55/4 என தடுமாறிக் கொண்டிருந்தபோது அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார் கேப்டன் அபிவ் முகுந்த். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அவுட்டாகினர். பெளலிங்கில் அசத்திய மதுரையின் செல்வக் குமரன், 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த கோவை அணிக்கு, டெத் ஓவர்களில் சேஸிங் கடினமானது. 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்த கோவை, வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. 23 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற மதுரை பாந்தர்ஸ், டாப் நான்கில் இடம் பெறுவதற்கான ரேஸில் இணைந்துள்ளது.

சுவாரஸ்யமாக, நேற்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் பெளலர்கள் எக்ஸ்ட்ராஸ் எதுவும் தரவில்லை. எனவே, டி.என்.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் எக்ஸ்ட்ராஸ் எதுவும் தராத முதல் அணியானது மதுரை பாந்தர்ஸ்.

இரண்டாவது போட்டி: சேப்பாக் vs காஞ்சி

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கங்கா ஶ்ரீதர் ராஜூ, கோபிநாத் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒன் டவுன் களமிறங்கிய கேப்டன் கெளசிக் காந்தி, 48 பந்துகளில் அரை சதம் கடந்தார். குறைவான இலக்கு சேஸிங்கை எளிதாக்கும் என்பதை உணர்ந்திருந்த சேப்பாக் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சசிதேவ், ஹரிஷ் குமார், கடைசி 10 ஓவர்களில் ரன் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் 192 ரன் எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

ஹரிஷ் குமார் - 53* (20) – 1 பவுண்டரி, 6 சிக்சர்கள் | பெளலிங் 4-15-4
Harish Kumar
Harish Kumar
TNPL

193 ரன்களை சேஸ் செய்த காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் பெளலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். பாபா அபராஜித், சஞ்சய் யாதவ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹரிஷ் குமார், மொத்தம் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சத்தீஷ் மட்டும் 44 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த காஞ்சி வீரன்ஸ், 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. 61 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற சேப்பாக் கில்லீஸ், 8 புள்ளிகள் 1.981 ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.