Published:Updated:

நான் இன்னொரு டெஸ்ட் போட்டியில் ஆடப்போவதில்லை - ஓய்வை அறிவித்த ஸ்டெயின்!

ராம் பிரசாத்

நான் இன்னொரு டெஸ்ட் போட்டியில் ஆடப்போவதில்லை என்பது பயங்கரமான முடிவு எனத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

 டேல் ஸ்டெயின்
டேல் ஸ்டெயின்

டேல் ஸ்டெயின்... தென்னாப்பிரிக்காவின் வேகப்புயல். காயம் காரணமாகத் தொடர்ந்து அவதிப்பட்ட வந்த ஸ்டெயின் தனக்கு மிகவும் விருப்பான டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 2004-ம் ஆண்டு ஸ்டெயின் அறிமுகமானார். டெஸ்டில் கிரிக்கெட்டில் ‘ஸ்டெயின்’ கில்லி. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். இவர் 92 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். உலகக்கோப்பைத் தொடருக்குத் தேர்வான ஸ்டெயின் காயம் காரணமாக அதிலிருந்து விலகினார். இந்நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஸ்டெயின்
ஸ்டெயின்

``நான் அதிகம் விரும்பக்கூடிய ஒரு வடிவத்தில் இருந்து நிரந்தரமாக விலகும் முடிவை எடுத்துள்ளேன். கிரிக்கெட்டின் சிறந்த வடிவம் டெஸ்ட் போட்டிகள் எனக் கூறுவேன். அது உங்களை மனதளவில் மட்டுமல்லாமல் உணர்வு ரீதியாகவும் சவாலளிக்கக் கூடியது. நான் இன்னொரு டெஸ்ட் போட்டியில் ஆடப்போவதில்லை என்பது பயங்கரமான முடிவுதான். இனி விளையாடவே முடியாது என்பது அதைவிட பயங்கரமானது. ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அதன் காரணமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய கிரிக்கெட் கேரியரில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தனி ஒரு நபரை குறிப்பிட முடியாது. இந்தப் பயணத்தில் நிறைய பேர் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். குறுகிய வடிவிலான போட்டிகளில் இனி கவனம் செலுத்தவுள்ளேன்” என்றார்.

ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015-ல் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் தோள்பட்டையில் ஸ்டெயினுக்கு காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் அவருக்குத் தொடர்ந்து பிரச்னைகளைக் கொடுத்தது. அதற்காக அறுவைசிகிச்சை மேற்கொண்டார். 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஸ்டெயின் காயத்தால் பிரச்னை ஏற்பட்டது. அதன்பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏற்ற இறக்கமாகத்தான் இருந்தது. பல போட்டிகளில் ஸ்டெயின் மேட்ச் வின்னராக இருந்துள்ளார்.

டேல் ஸ்டெயின்
டேல் ஸ்டெயின்

2018-ம் மீண்டும் வெற்றிகரமாகத் திரும்பினார். அந்த வருடம் டெஸ்ட் அரங்கில் ஸ்டெயின் ஜொலித்தார். இதையடுத்துதான் உலகக் கோப்பைத் தொடருக்குத் தேர்வானார். காயம் காரணமாகத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வெளியேறினார். அடுத்த வருடம் நடக்கும் டி-20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டே ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.