Published:Updated:

15 பேர் அணியில் `யெஸ்’; ப்ளேயிங் லெவனில் `நோ’ - தோனி விஷயத்தில் பிசிசிஐ புதிய திட்டம்?

பிரேம் குமார் எஸ்.கே.

விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸாக பன்ட் தான் இருப்பார். அவர் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள நேரம் வழங்கப்படும்.

தோனி
தோனி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்துவிட்டது. இந்திய அணி அரையிறுதி ஆட்டத்துடன் வெளியேறியது. இந்திய அணியில் தோனியின் இடம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. தோனி அதிக விமர்சனத்தைச் சந்தித்த தொடராக இது அமைந்தது என்று சொல்லலாம்.

தோனி
தோனி

பலரும் உலகக் கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று தெரிவித்துவந்தனர். ஆனால், தோனி இன்னும் தன் முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இந்தத் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. தோனி தொடர்பாகவும் முக்கிய முடிவெடுக்கப்படும். தோனி தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், தோனி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பன்ட்
பன்ட்

இது தொடர்பாக ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேசிய பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், ``மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனி தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்றே தெரிகிறது. இனி வரும் காலங்களில் அவர் விக்கெட் கீப்பர் சாய்ஸில் முதலில் இருக்க மாட்டார். விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸாக பன்ட்தான் இருப்பார். அவர் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள நேரம் வழங்கப்படும்.

இடைப்பட்ட காலங்களில் அணியின் சுமுகமான மாற்றத்துக்கு தோனி துணை நிற்பார். வரும் காலங்களில் தோனி 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இருப்பார். ஆனால், ப்ளேயிங் லெவனில் கொஞ்சம் கஷ்டம்தான். அணிக்கு அவரின் வழிக்காட்டுதல் நிச்சயம் தேவை. அவர் அணியிலிருந்து விலகுவது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது” என்றார்.

பிசிசிஐ
பிசிசிஐ

மேலும், ``அவருக்கு அவரின் பலம் தெரியும். எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அப்போது அவர் ஓய்வை அறிவிப்பார். இதில் அவசரம் காட்ட எதுவும் இல்லை” என்றார்.

இந்தியத் தேர்வுக் குழு நாளை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.