Published:Updated:

161 ரன் பார்ட்னர்ஷிப்... விக்கெட் இழப்பின்றி சேஸ்... அசத்தும் அஷ்வின் அண்டு கோ! #TNPL2019 #DDvIDKK

கார்த்திகா ராஜேந்திரன்

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் வருகையும், காரைக்குடி காளைக்கு கைகொடுக்கவில்லை.

ஹரி நிஷாந்த் - ஜெகதீசன்
ஹரி நிஷாந்த் - ஜெகதீசன் ( Twitter )

ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஹரி நிஷாந்த், ஜெகதீசனின் 161 ரன்கள் ரெக்கார்டு பார்ட்னர்ஷிப்பால், காரைக்குடி காளைக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றது. தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள திண்டுக்கல் டிராகன்ஸ், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது.

டி.என்.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் நான்காவது சீஸன் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சங்கர் நகர் மைதானத்தில் நடந்த போட்டியில் ரவிசந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியும் மோதின.

டாஸ் வென்ற காரைக்குடி காளை, பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் களமிறங்கிய சூர்ய பிரகாஷ், அனிருதா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. 43 ரன்கள் எடுத்திருந்தபோது கெளசிக் பந்துவீச்சில் சூர்ய பிரகாஷ் போல்டானார். அவரைத் தொடர்ந்து ஒன் டவுன் களமிறங்கிய நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

Ashwin
Ashwin
Twitter

நட்சத்திர வீரர்கள் தினேஷ் கார்த்திக் vs அஷ்வின் மோதல் இரண்டு ஓவர்களில் முடிந்தது. அஷ்வின் பந்தில் அவுட்டான தினேஷ் கார்த்திக் 17 ரன்களுக்கு வெளியேறினார். காரைக்குடி காளையின் மற்ற பேட்ஸ்மேன்களும் சோபிக்காத நிலையில், கேப்டன் அனிருதா மட்டும் களத்தில் நின்று ரன் சேர்த்தார்.

அஷ்வின், முகமது பந்துகளை பவுண்டரிகளுக்கு விளாசிய அவர், மொத்தம் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டர்கள் அடித்தார். அணியின் ஸ்கோரை உயர்த்திய அனிருதா, சதம் அடிப்பார் என எதிர்பார்த்தபோது முகமது வீசிய கடைசி ஓவரில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 59 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து, டி.என்.பி.எல் தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

அனிருதா ஶ்ரீகாந்த்
அனிருதா ஶ்ரீகாந்த்
Twitter
அனிருதா ஶ்ரீகாந்த் - 98 (7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்)

20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு காரைக்குடி காளை 158 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ரோஹித், முகமது தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

2019 டி.என்.பி.எல் தொடரில் இன்னும் தோல்வியைச் சந்திக்காத திண்டுக்கல் டிராகன்ஸின் வெற்றிப் பயணம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. 158 ரன் இலக்கை சேஸ் செய்த திண்டுக்கலுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். போட்டியின் முதல் ஓவரிலிருந்து ரன் அடிக்கத் தொடங்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்ப முடியாமல் காரைக்குடி பெளலர்கள் திணறினர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் - 161/0 (17 ஓவர்கள்)

ஹரி நிஷாந்த் - 81* (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்)
ஜெகதீசன் - 78* (7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்)
ஹரி நிஷாந்த்
ஹரி நிஷாந்த்
Twitter

சிக்ஸர்களும் பவுண்டரிகளாலுமே 96 ரன்கள் குவித்த இந்த இணை, 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள அஷ்வின் அண்டு கோ, 8 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் வருகையும், காரைக்குடி காளைக்கு கைகொடுக்கவில்லை. திருச்சி அணியுடனான போட்டி 'டை' ஆக, சூப்பர் ஓவர் முறையில் காரைக்குடி வெற்றி பெற்றிருந்தது. மற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள காரைக்குடி 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.

ஆகஸ்டு 1-ம் தேதி தூத்துக்குடி பேட்ரியட்ஸ் - காரைக்குடி காளை அணிகளும், ஆகஸ்டு 3-ம் தேதி திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகளும் மோதுகின்றன