Published:Updated:

உணவு இடைவேளைக்கு முன்பே ஆட்டமிழந்த இங்கிலாந்து! - 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து #ENGvIRE

தினேஷ் ராமையா

அயர்லாந்து அணிக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 85 ரன்களில் ஆட்டமிழந்தது.

England - Ireland Test
England - Ireland Test ( AP )

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய், ஆலி ஸ்டோன் மற்றும் அயர்லாந்து தரப்பில் மார்க் அடெய்ர் ஆகியோர் அறிமுக வீரர்களாகக் களமிறங்கினர்.

England - Ireland Test
England - Ireland Test
AP

தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அயர்லாந்து அணிக்கு, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இது முதல் போட்டியாகும். வில்லியம் போட்டர்ஃபீல்டு தலைமையில் களமிறங்கிய அந்த அணி, சிறப்பான பந்துவீச்சு மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தது. உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய், 5 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த எந்த வீரரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. குறிப்பாக, முர்டாக் மற்றும் அறிமுக வீரர் அடெய்ர் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினர்.

இங்கிலாந்து அணி, 23.4 ஓவர்களில் 85 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோ டென்லி, 23 ரன்களும் ஸ்டோன் 19 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில், முர்டாக் 9 ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில், 2 மெய்டன் ஓவர்களும் அடங்கும். அடெய்ர், 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tim Murtagh
Tim Murtagh
AP
இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update

நியூசிலாந்து அணிக்கெதிரான பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது, இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான். உலகக் கோப்பையை வென்று சில நாள்களே ஆன நிலையில், அதே மைதானத்தில் இங்கிலாந்து அணி மிகக்குறைவான ரன்களில் ஆட்டமிழந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.