Published:Updated:

`அவர்தான் கேப்டன்.. அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது!' - கோலிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கங்குலி

மலையரசு

கோலிக்கு பயிற்சியாளர் குறித்துப் பேச அனைத்து உரிமையும் தகுதியும் இருக்கிறது என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

கங்குலி
கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக இதுவரை 2,000 பேர் வரை விண்ணப்பித்திருக்கிறார்கள் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் கிரிக்கெட்டர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே இருந்தவர் இல்லாமல் புதிதாக ஒருவர் பயிற்சியாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துவருகின்றனர்.

கோலி - ரவி சாஸ்திரி
கோலி - ரவி சாஸ்திரி

அதேவேளையில் வந்துள்ள 2,000 விண்ணப்பங்களில் ரவி சாஸ்திரியை ஈடு செய்யும் அளவுக்கு திறமையானவர்கள் குறைவுதான் என்றும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி, பரத் அருண், ஸ்ரீதர், ராபின் சிங், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹசன், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் மட்டுமே புதிதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளது பிசிசிஐ.

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கிளம்பும் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட கோலி,``பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக கிரிக்கெட் ஆலோசனைக் குழு என்னை அணுகவில்லை. அவர்கள் என்னுடன் ஆலோசனை நடத்த விரும்பினால், நான் அவர்களைச் சந்திக்கத் தயார். வீரர்களுடன் ரவிசாஸ்திரி நல்ல நட்பில் உள்ளார். பயிற்சியாளர் பொறுப்பில் மீண்டும் அவர் நீடித்தால் மகிழ்ச்சி'' என்றார்.

கோலி - ரவி சாஸ்திரி
கோலி - ரவி சாஸ்திரி

கோலியின் கருத்துக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் அன்ஷுமான் கெய்க்வாட், ``விராட் கோலி என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; எங்களுக்குக் கவலை இல்லை. அது எங்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவது இல்லை. நாங்கள் ஒரு குழு. அவருடைய கருத்தை பிசிசிஐ குறித்துக்கொள்ளும்; நாங்கள் அல்ல. பிசிசிஐ-யின் வழிகாட்டுதலின்படி நாங்கள் நடந்துகொள்வோம். நாங்கள் மகளிர் அணிக்காக பயிற்சியாளர்களை சமீபத்தில் தேர்வு செய்தோம். இதுகுறித்து நாங்கள் யாரிடமும் ஆலோசிக்கவில்லை'' எனக் கூறினார்.

இது விவாதத்தை ஏற்படுத்தியது. கோலிக்கு பயிற்சியாளர் குறித்து பேச அனைத்து உரிமையும் தகுதியும் இருக்கிறது என ரசிகர்கள் பேசத் தொடங்கினர். இதே கருத்தை மேற்கோள்காட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ``கோலிதான் அணியின் கேப்டன். அவருக்கு இந்த விவகாரத்தில் கருத்துக்கூற அனைத்து உரிமையும் இருக்கிறது.

கோலி
கோலி

ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கருத்து இருக்கும். அதனால் இந்த விவகாரத்தில் அன்ஷுமான் கெய்க்வாட் கருத்துக்கு எந்தப் பதிலையும் கூற நான் விரும்பவில்லை" எனக் கூறியவர், ப்ரித்வி ஷா மீதான சஸ்பெண்டு குறித்தும் பேசினார். அதில், ``இருமல் மருந்தில் பல வகைகள் உள்ளன. ப்ரித்வி ஷா விஷயத்தில் என்ன நடந்தது என முழுதாகத் தெரியவில்லை. அதனால் அது தொடர்பாக நான் பேசுவது முறையாக இருக்காது" என்றார்.