Published:Updated:

`தோனி லெஜெண்ட்; நானே அவரின் பெரிய ரசிகன்!’ - யுவராஜ் தந்தையின் திடீர் யூ டர்ன்

பிரேம் குமார் எஸ்.கே.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜின் தந்தை யோகராஜ் முதல் முறையாக தோனியைப் புகழ்ந்துள்ளார்.

யோகராஜ்
யோகராஜ்

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் -ன் தந்தை யோகராஜ், பெரும்பாலான பேட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சிக்கக் கூடியவர். சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் தோனியின் செயல்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்தார். அணி வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் தோனி விளையாடவில்லை எனக் கடுமையாக சாடினார்.

தோனி - யுவராஜ்
தோனி - யுவராஜ்

இது இன்று நேற்று நடப்பது கிடையாது. தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தது தோனி தான் எனப் பல குற்றச்சாட்டுகளை பல்வேறு கட்டங்களில் யோகராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், தோனி தரப்பிலிருந்து யோகராஜ் கருத்துக்கு என்றுமே பதில் வராது.

இந்நிலையில் யோகராஜ், தான் இந்திய அணியின் தோல்விக்கு என்றுமே தோனியை விமர்சித்தது கிடையாது எனப் பெரிய யூ- டர்ன் அடித்துள்ளார். மேலும் நானும் தோனி ரசிகன்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

`தோனி லெஜெண்ட்; நானே அவரின் பெரிய ரசிகன்!’ - யுவராஜ் தந்தையின் திடீர் யூ டர்ன்

தோனியை விமர்சித்தது தொடர்பாகப் பேசிய யோகராஜ், ``நான் அப்படிச் சொன்னது கிடையாது. இந்திய அணியின் தோல்விக்கு நான் தோனியை விமர்சித்தது இல்லை. அது எனது கருத்தே கிடையாது. நீங்கள் தவறான கேள்வியை தவறான நபரிடம் கேட்கிறீர்கள்.

நீண்ட காலமாக இந்திய அணிக்கு பாங்காற்றிய அருமையான வீரர் அவர் என்பது சந்தேகமே இல்லை. அவர் லெஜெண்ட். இன்னும் சொல்லப் போனால் நானும் தோனி ரசிகன்தான். கிரிக்கெட்டை அவர் விளையாடிய விதம், அணியை அவர் வழிநடத்திய விதம், முக்கிய கட்டத்தில் களத்தில் அவர் எடுத்த முடிவுகள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

`கோலி புகழைத் தடுக்க வேண்டுமென்றே அப்படி ஆடினாரா தோனி?’ - யுவராஜ் தந்தை தாக்கு!

யோகராஜின் இந்தக் கருத்து தோனி ரசிகர்களையே ஆச்சர்யபடுத்தியுள்ளது. தோனி தற்போது இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஹிமெண்டில் பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக அவர் பிசிசிஐயிடம் 2 மாத ஓய்வு கேட்டார். அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் இடம் பெறவில்லை. பன்ட் முழு நேர விக்கெட் கீப்பராக வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கிறார்.