Published:Updated:

`பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை நான் சரிசெய்கிறேன்!'- அமெரிக்காவில் இம்ரான் கான் சபதம்

ராம் பிரசாத்

``பாகிஸ்தான் அணியை நான் சரிசெய்கிறேன்'' என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவில் பேசியுள்ளார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடனே வெளியேறியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, பாகிஸ்தான் உலகக் கோப்பையைக் கைப்பற்றும் என முன்னாள் வீரர்கள் சிலர் கூறியிருந்தனர். இதுபோன்ற பெரிய தொடர்களின் போது, வழக்கமாக முன்னாள் வீரர்கள் தங்கள் அணிக்கு ஆதரவாகப் பேசுவது வழக்கம்தான். உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. அப்போது பேசிய முன்னாள் வீரர்கள் சிலர், 1992-ல் இம்ரான் கான் தலைமையில் நாங்கள் உலகக் கோப்பை வென்றபோதும் ஆரம்பத்தில் தோல்வி முகம்தான். அதில் இருந்து பாகிஸ்தான் அணி எழுச்சிபெற்றது. இப்போதும் அப்படி நடக்கும்'' என்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இந்தத் தொடரில், வெற்றி தோல்வி என பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்தித்தது. வலுவான நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது மீண்டும் அதே ஒப்பீடு. இந்த முறை முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் களமிறங்கினார். 1992-ம் ஆண்டு, நியூசிலாந்தை வீழ்த்திய பிறகு தான் எங்களுக்கு அரையிறுதி வாய்ப்பு தெரிந்தது. இந்த முறையும் அதேபோல்தான் உள்ளது, வரலாறு திரும்பும் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் எனப் பேசினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரசுமுறை பயணமாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுடன் இம்ரான் கான் உரையாடினார். அப்போது பேசியவர், “ நான் இங்கிலாந்து சென்றேன். அங்கு கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன். நாங்கள் அங்கிருந்து திரும்பியபோது, மற்ற வீரர்களின் தரத்தை உயர்த்தினோம். தற்போது, உலகக் கோப்பை முடிந்துள்ளது. பாகிஸ்தான் அணியை சரிசெய்ய முடிவுசெய்துள்ளேன். எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த உலகக் கோப்பையில், நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி ஒரு தொழில்முறை அணியாக இருக்கும். நாங்கள், எங்களது அமைப்புகளைச் சரிசெய்ய உள்ளோம். திறமையாளர்களை வெளிக்கொண்டுவருவோம்'' என்று பேசியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சில அதிரடி மாற்றங்கள் நடந்துவருகிறது. உலகக் கோப்பை தொடரில் கேப்டனாகச் செயல்பட்ட சர்ப்ராஸ் கான் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகள் மற்றும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்க முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி தொடங்குவதற்கு, இந்த மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல், அடுத்த வருடம் டி-20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதால், ஒருநாள் போட்டிகளைக் குறைத்துக்கொண்டு, டி-20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.