Published:Updated:

இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர்... காஞ்சி வீரன்ஸ் ஹாட்ரிக் வெற்றி! #TNPL2019 #TPvVBKV

கார்த்திகா ராஜேந்திரன்

லைகா கோவை கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த காஞ்சி வீரன்ஸ், அதைத் தொடர்ந்து நடந்த மூன்று போட்டிகளையும் வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் அசத்துகிறது.

Kanchi Veerans
Kanchi Veerans ( Tnpl )

2019 டி.என்.பி.எல் டி-20 தொடர் முதல் பாதி முடிந்துவிட்டது. நேற்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில், தூத்துக்குடி பேட்ரியட்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ், 193 ரன்கள் எடுத்து இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

டி.என்.பி.எல் வரலாற்றில், இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடி, ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தூத்துக்குடி பேட்ரியட்ஸ், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இந்த சீஸனில் இன்னும் வெற்றிகளைப் பதிவு செய்யவில்லை. நேற்றைய போட்டியிலும் இலக்கை சேஸ் செய்ய தூத்துக்குடி தடுமாறியது.

திருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற தூத்துக்குடி கேப்டன் சுப்ரமணிய சிவா ஃபீல்டிங் தேர்வு செய்தார். காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் வைத்யா, சித்தார்த் ஓப்பனிங் களமிறங்கினர். போட்டி தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது காஞ்சி அணி. தமிழ் குமரன் ஓவரில் விஷால் வைத்யா கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியை கரை சேர்க்க ஒன்டவுன் களமிறங்கினார் கேப்டன் பாபா அபராஜித்.

Sidharth - Baba Aparijith
Sidharth - Baba Aparijith
Tnpl

சித்தார்த் - அபராஜித் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தூத்துக்குடி பெளலர்களின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசிய இந்த பார்ட்னர்ஷிப், 71 ரன்கள் சேர்த்தது. 38 பந்துகளில் அரை சதம் கடந்தபோது, வெங்கடேஷ் பந்துவீச்சில் சித்தார்த் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

கடைசி 5 ஓவர் அதிரடி

15-வது ஓவரின்போது பேட்டிங் களமிறங்கிய ராஜகோபாலன் சத்தீஷ், வந்தவுடன் அதிரடியைத் தொடங்கினார். அதிசயராஜ் வீசிய ஓவரில், 3 சிக்சர், 1 பவுண்டரி விளாசிய சத்தீஷ் வெறும் 19 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். கடைசி 5 ஓவரில் 77 ரன்கள் குவித்த காஞ்சி வீரன்ஸ், அணியின் ஸ்கோரை 190+ எடுத்துச் சென்றனர்.

Rajagopalan Sathish
Rajagopalan Sathish
Tnpl

காஞ்சி வீரன்ஸ்

பாபா அபாரிஜித் - 76*(48) (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்)
ராஜகோபாலன் சத்தீஷ் - 47*(19) (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்)

77 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த பாபா - ராஜகோபாலன் இணை, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். 20 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு காஞ்சி வீரன்ஸ் 193 ரன்கள் குவித்தது. இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர் இது!

ரன் இலக்கை சேஸ் செய்த தூத்துக்குடி பேட்ரியட்ஸ் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலேயே தடுமாறினர். பார்ட்னர்ஷிப் பில்ட் செய்யாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அக்‌ஷய் ஶ்ரீனிவாசன், முருகேசன் கமலேஷ் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எட்ட, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Gowtham Thamarai Kannan
Gowtham Thamarai Kannan
Tnpl
கெளதம் தாமரை கண்ணன் 4 - 40 - 3

காஞ்சி வீரன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் கெளதம் தாமரைக் கண்ணன், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன் சேர்க்கத் திணறிய தூத்துக்குடி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததால், தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது தூத்துக்குடி பேட்ரியட்ஸ். ஒரு முறை சாம்பியன், இரண்டு முறை இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கும் தூத்துக்குடி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, டாப் நான்கில் இடம் பெற முடியும்.

லைகா கோவை கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த காஞ்சி வீரன்ஸ், அதைத் தொடர்ந்து நடந்த மூன்று போட்டிகளையும் வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் அசத்துகிறது. இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ள காஞ்சி வீரன்ஸ் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் அசத்தி வருகிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் காஞ்சி வீரன்ஸ், அடுத்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை எதிர்கொள்கிறது.