Published:Updated:

`தோனி எப்படி நடந்துகொண்டாரோ அப்படித்தான் நானும்!' - இளம்வீரர்கள் குறித்து கேப்டன் கோலி

மலையரசு

நான் 20 வயதில் இருக்கும்போது, பாதியளவுகூட இந்த மாதிரியான இளம் வீரர்கள் இல்லை. இப்போது உள்ளவர்கள், தங்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் நடந்துகொள்கிறார்கள்.

கோலி
கோலி

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, இந்திய அணி அடுத்த தொடருக்குத் தயாராகிவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டிக்கான வீரர்கள் தேர்வு முடிந்துவிட்டது. அதில், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சஹா, ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, சாஹல், கலீல் அஹமது, நவ்தீப் சைனி, க்ருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர் என இளம் வீரர்கள் அதிகமாகத் தேர்வாகியுள்ளனர். இதனால், இந்திய அணிக்கு இந்தத் தொடர் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி
கோலி

மேலும், இனி வரும் தொடர்களிலும் இளம் வீரர்கள் அதிகமாகத் தேர்வுசெய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இளம் வீரர்கள்குறித்து கேப்டன் கோலி பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``இப்போது இருக்கும் இளம் வீரர்கள் மிகத் திறமையாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது, எனக்கு உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது. நான் 20 வயதில் இருக்கும்போது பாதியளவுகூட இந்த மாதிரியான இளம் வீரர்கள் இல்லை.

இப்போது உள்ளவர்கள், தங்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் நடந்துகொள்கிறார்கள். ஐபிஎல் போன்ற தொடர்கள், அவர்களது திறமையை வளர்க்க உதவுகிறது. நிறைய கற்றுக்கொள்கிறார்கள். தங்கள் தவறுகளைச் சரி செய்துகொள்கிறார்கள். தங்களை வெளிப்படுத்திக்கொள்ள சரியான இடத்தை அவர்களுக்கு கொடுப்பதாக நம்புகிறேன். அவர்கள் தடுமாறும்போது, நேராகச் சென்று பேசுகிறேன்.

கோலி
கோலி

நான் செய்த தவறுகளை நீங்கள் செய்யாதீர்கள் என அறிவுரை சொல்கிறேன். டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களை திட்டும் பழக்கம் இல்லை. குல்தீப்புடன் தோனி எப்படி நடந்துகொண்டாரோ அதேபோல்தான் நானும் நடந்துகொள்கிறேன். டிரெஸ்ஸிங் ரூம் கலாசாரம் எதுவும் மாறவில்லை. எல்லாம் இப்போதும் அப்படியே தான் இருக்கிறது. தவறு நடந்தால் சுட்டிக்காட்டவும் செய்கிறேன்" என்று பேசியுள்ளார்.