Published:Updated:

`இந்தப் பெயர் கிரிக்கெட் முகத்தை மாற்றியது; உத்வேகத்தைக் கொடுத்தது!'- தோனிக்கு ஐசிசி கெளரவம்

ராம் பிரசாத்

தோனியை மிகவும் பிடிக்கும். அவரது மின்னல் வேக ஸ்டெம்பிங்கை அடித்துக்கொள்ள முடியாது.

தோனி
தோனி

தோனி குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோ, தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு ஐசிசி கொடுத்துள்ள கேப்ஷனும் அவரது ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளது. அந்த வீடியோவுக்கான கேப்ஷனில், ``இந்தப் பெயர் இந்தியக் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியது. இந்தப் பெயர் பலருக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இது மறக்க முடியாத பெயர். எம்.எஸ்.தோனி... வெறும் பெயர் இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக தோனி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஐசிசி நடத்தும் தொடர்களான 50 ஓவர் உலகக் கோப்பை, டி- 20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி மூன்று கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரு சர்வதேச கேப்டன் தோனி தான். இந்திய அணி, தோனி வழி நடத்திய காலத்தில் ஐசிசி தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் முதலிடத்தில் இருந்தது.

இந்த வீடியோவில், இந்திய அணியின் கேப்டன் கோலி, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து வீரர்கள் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தோனியுடனான தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். ``தோனி அமைதியானவர், அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். தோனி என்றைக்குமே எனது கேப்டன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. நான் எப்போதும் அவருடைய அறிவுரைகளைக் கேட்பேன்” என்று கோலி பேசியுள்ளார்.

இங்கிலாந்து போட்டியின் போது தோனி - கோலி
இங்கிலாந்து போட்டியின் போது தோனி - கோலி
AP

``நான் 2016-ம் ஆண்டு இந்திய அணிக்குள் வரும்போது, தோனி தான் கேப்டன். அவர், அணியை அமைதியாக வழிநடத்துவார். அவர், எப்போதும் அணியினருக்கு உதவத் தயாராக இருப்பார்” என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பேசியுள்ளார்.

“ `மிஸ்டர் கூல்’ ஒரு விக்கெட் கீப்பராக அவர் எனக்கு முன்மாதிரி. களத்தில் எனக்கு தோனியை மிகவும் பிடிக்கும். அவரது மின்னல் வேக ஸ்டெம்பிங்கை அடித்துக்கொள்ள முடியாது. பேட்டிங் செய்யும் போது மிகவும் அமைதியாகக் காணப்படுவார். நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன்” என்கிறார் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

``தோனி, ஒரு தனித்துவமான விக்கெட் கீப்பர்; சிறந்த விளையாட்டு வீரர்களில் அவரும் ஒருவர்.அவரைப்போல யாரும் நல்லவர்கள் இருப்பார்கள் எனத் தெரியவில்லை'' என்கிறார், இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.