Published:Updated:

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரெஸ்ட்; 2 மாதம் ராணுவ குழுவுடன் கேம்ப்! - தோனியின் புதுப் பிளான்

மலையரசு

மகேந்திர சிங் தோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருப்பது நாம் அறிந்ததே. நேரம் கிடைக்கும்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தோனி
தோனி

உலகக்கோப்பை தோல்விக்குப் பின் தோனியின் ஓய்வு குறித்துதான் கிரிக்கெட் வீரர்களிடையே, ரசிகர்களிடையே பெரும் விவாதமாக உள்ளது. நாளொரு வண்ணம் அவர் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், தோனி தரப்பில் இந்த விவாதம் குறித்த எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. அதேநேரம் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

தோனி
தோனி

தோனி தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த நிலையில், ``இனி வரும் காலங்களில் தோனி விக்கெட் கீப்பர் சாய்ஸில் முதலில் இருக்க மாட்டார். விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸாக பன்ட்தான் இருப்பார். அவர் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள நேரம் வழங்கப்படும். வரும் காலங்களில் தோனி 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இருப்பார். ஆனால், ப்ளேயிங் லெவனில் கொஞ்சம் கஷ்டம்தான். அணிக்கு அவரின் வழிக்காட்டுதல் நிச்சயம் தேவை. அவர் அணியிலிருந்து விலகுவது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது" எனப் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி ஓய்வு கேட்டுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். இதுதொடர்பாக பிடிஐக்குப் பேசியுள்ள அந்த அதிகாரி, ``தோனி இப்போதைக்கு ஓய்வு பெறவில்லை. எனினும் அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை. 2 மாதம் ஓய்வு கேட்டுள்ளார். ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கும் தோனி இந்த இரண்டு மாத ஓய்வை தனது துணை ராணுவக் குழுவுடன் செலவிடவுள்ளார். இந்தத் தகவலை செலக்சன் கமிட்டிக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். தோனியின் முடிவை கோலியிடம், தேர்வுக் குழுவிடமும் தெரிவித்துவிட்டோம்" எனக் கூறியுள்ளார்.

தோனி
தோனி

மகேந்திர சிங் தோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருப்பது நாம் அறிந்ததே. நேரம் கிடைக்கும்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். `தோனி விளையாடும் வீடியோ கேம்ஸ்கூட ஆர்மி சம்பந்தமானதாகத்தான் இருக்கும்' என விராட் கோலியே ஒருமுறை கூறியுள்ளார். அதன்படியே இந்தமுறையும் ராணுவ வீரர்களை அவர் சந்திக்கவுள்ளார். இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனிக்குப் பதிலாக பன்ட் முழுநேர கீப்பராக செயல்படப்போவது உறுதியாகியுள்ளது.