Published:Updated:

கோவை, காஞ்சி... டி.என்.பி.எல் ப்ளே ஆஃப் நுழைவது யார்?!

கார்த்திகா ராஜேந்திரன்

திண்டுக்கல், சேப்பாக், மதுரை அணிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் இணையப்போவது கோவையா, காஞ்சியா?

TNPL teams
TNPL teams

டி.என்.பி.எல் டி-20 தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் விளையாடிவரும் இந்தத் தொடரில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஏற்கெனவே, காரைக்குடி, திருச்சி அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்ததால், மற்ற ஆறு அணிகள் மட்டுமே களத்தில் உள்ளன. லீக் சுற்று முடிய இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், எந்தெந்த அணிகளுக்கு ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது என்பதை ஸ்கேன் செய்து பார்ப்போம்...

திண்டுக்கல் டிராகன்ஸ்

Silambarasan - Ashwin
Silambarasan - Ashwin
TNPL

கேப்டன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸுக்கு இந்த சீசனில் அடுத்தடுத்து வெற்றிகள். ஐந்து போட்டிகளையும் வென்றுள்ள டிராகன்ஸ், 10 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. பேட்டிங்கில் நாராயண் ஜெகதீசனும், பெளலிங்கில் சிலம்பரசனும் திண்டுக்கல் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். லீக் சுற்றில், இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது திண்டுக்கல் அணி.

2018 டி.என்.பி.எல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ், 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரையிடம் கோப்பையை நழுவவிட்டது. இந்த சீசனில், விட்டதைப் பிடிக்கும் நோக்கத்தில் களமிறங்கியுள்ள திண்டுக்கல் டிராகன்ஸ், கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவிட்டது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

இரண்டு சீஸனில் ஃபைனலிஸ்ட்ஸ், ஒரு முறை சாம்பியன் என டி.என்.பி.எல் ப்ளே ஆஃப்புக்கு மிகவும் பழக்கப்பட்ட அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ். கேப்டன் கெளசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் அணி, இந்த சீஸனின் முதல் போட்டியைத் தோல்வியில் தொடங்கியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்து, பின் சுதாரித்துக்கொண்ட சேப்பாக், அடுத்தடுத்து நான்கு போட்டிகளை வென்றது. ஆல்-ரவுண்டர் ஹரிஷ் குமார், 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்து, இந்த சீஸனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

பேட்டிங்கில் கோபிநாத், பெளலிங்கில் ஹரிஷ் குமார், அலெக்ஸாண்டர் கைகொடுக்க, ப்ளே ஆஃப் சுற்றுக்கு பக்கத்தில் நெருங்கிவிட்டது சேப்பாக் அணி. லீக் சுற்றின் கடைசி போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மதுரை பாந்தர்ஸ்

நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு, இந்த சீஸன் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது. நான்கு போட்டிகளை வென்றிருந்தாலும் திண்டுக்கல், காஞ்சி அணிகளுக்கு எதிரான போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதே அணி, அடுத்த போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கை வென்றது. இந்த சீஸனில், கன்சிஸ்டென்ட் இல்லாதது மதுரை அணிக்குப் பின்னடைவு.

Arun Karthik
Arun Karthik
TNPL

விக்கெட் கீப்பர் கேப்டன் அருண் கார்த்திக்கின் ஃபார்ம், அணிக்கு பலம். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் பெரிதாக சோபிக்காததால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் இதை சரிசெய்ய வேண்டியது அவசியம். கிரண் ஆகாஷ், ரஹில் ஷா, அபிஷேக் தன்வார் உள்ள பெளலிங் கூட்டணி, அணிக்கு ஆறுதல். காரைக்குடி காளை அணிக்கு எதிரான கடைசிப் போட்டியையும் வென்றால், மதுரை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதி.

நான்காவது இடத்துக்கான போட்டி

காஞ்சி வீரன்ஸ் vs கோவை கிங்ஸ் vs தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான கடைசி இடத்துக்கு இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள், தலா மூன்று வெற்றிகளுடன் களத்தில் உள்ளன.

Tuti Patriots
Tuti Patriots
TNPL

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது, காஞ்சி வீரன்ஸ். இந்தத் தோல்வியால், ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு தூரமானது. திருச்சி, திண்டுக்கல் அணிகளுக்கு எதிரான அடுத்த போட்டிகளில், காஞ்சி அணி கட்டாயம் வெற்றிபெற்றால் மட்டுமே, ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை அணி ப்ளே ஆஃப் செல்ல, திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான கடைசிப் போட்டியை வெல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கும் காஞ்சி வீரன்ஸ், ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் மட்டுமே கோவை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும்.

``ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கே அந்த சந்தேகம் இருந்தது!’’  – அஷ்வின் #VikatanExclusive

டி.என்.பி.எல் முதல் சீஸனில் சாம்பியன். இரண்டாவது சீஸனில் ஃபைனலிஸ்ட்ஸ். இந்த சீஸனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கே திணறிக்கொண்டிருக்கிறது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ். கேப்டன் சுப்ரமணிய சிவா தலைமையிலான தூத்துக்குடி அணி, அடுத்து வரும் இரண்டு லீக் போட்டிகளையும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு பக்கத்தில் செல்ல முடியும். வெற்றிபெறுவது மட்டுமின்றி, காஞ்சி, கோவை அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே தூத்துக்குடி அணியின் ப்ளே ஆஃப் கனவு உறுதியாகும். -1.155 என நெகட்டிவ் ரன் ரேட் இருப்பதால், டாப் நான்கில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.