Published:Updated:

"என் விதியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்!" தடை குறித்து ப்ரித்வி ஷா உருக்கம்

மலையரசு

இந்திய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திரம் ப்ரித்வி ஷா. ஐ.பி.எல் போட்டி, டெஸ்ட் போட்டி எனத் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

இந்தியா அறிமுகப்படுத்திய 293 வது டெஸ்ட் வீரர்... 18 வது வயதில் முதல் டெஸ்ட்... முதல் ஆட்டத்திலேயே சதம்... குறைந்த வயதில் தன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த 4 வது வீரர்... டெஸ்ட் போட்டிகளில் குறைந்த வயதில் அறிமுகமான இரண்டாவது வீரர்... இப்படி சின்ன வயதில் சச்சினுக்கு நிகராக மட்டுமல்ல அடுத்த சச்சின் என்று வர்ணிக்கப்பட்டவர் தான் இந்திய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திரம் ப்ரித்வி ஷா. ஐ.பி.எல் போட்டி, டெஸ்ட் போட்டி எனத் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

அதில், ``ப்ரித்வி ஷா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை கவனக்குறைவாக எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இந்தத் தடைசெய்யப்பட்ட மருந்து இருமல் மருந்துகளில் பொதுவாக காணப்படும். இதனால் ப்ரித்வி ஷாவுக்கு நவம்பர் 15, 2019 வரை, அதாவது எட்டு மாதங்கள் தடை விதிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் மிக கவனமாக மருந்துகளை உட்கொள்ள அறிவுறுத்துகிறோம்" எனத் தெரிவித்தது. இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடைக்கான காரணம்!

கடந்த பிப்ரவரியில் சையத் முஷ்டாக் அலி ட்ராபி போட்டிகளில் விளையாடினார் ப்ரித்வி. அப்போது அவர் அளித்த சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட ‘டெர்புடலின்’ என்ற மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது வாடாவினால் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து. மூச்சுக்குழல் தொடர்பான பிரச்னையில் இருமல் மருந்தை எடுத்துக்கொண்டதில் இந்த டெர்புடலைன் இருந்துள்ளது. இதைக் கவனக்குறைவால் அவர் எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

தடை இப்போது விதிக்கப்பட்டாலும், பிப்ரவரி மாதமே இந்த விவகாரம் தெரியவந்ததால் அப்போது இருந்த தடை கணக்கிடப்படுகிறது. இதனால் நவம்பர் 15ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டுமல்ல விதர்பா கிரிக்கெட் வீரர் அக்‌ஷய் துல்லர்வார், ராஜஸ்தான் வீரர் திவ்ய காஜ்ராஜ், ஆகியோரும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அவர்களையும் பிசிசிஐ சஸ்பெண்ட் செய்துள்ளது.

ப்ரித்வி ஷா இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், ஒரு அரை சதம் என 237 ரன்கள் எடுத்துள்ளார். இந்தத் தடையால் அக்டோபரில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா, நவம்பரில் நடைபெறவுள்ள வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர் வரை அவர் இந்திய அணிக்காக விளையாட முடியாது. ஏற்கெனவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தவர் தற்போது இந்தப் பிரச்னையின் காரணமாகவும் வருத்தமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள ப்ரித்வி, ``ஊக்க மருந்தாக இதை எடுத்துக் கொள்ளவில்லை. மூச்சுக்குழல் பிரச்னைக்காக எடுத்துக் கொண்டேன்.

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

என் விதியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் நான் காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை. இருந்தாலும் இந்தத் தடைச் செய்தி என்னை அசைத்துப் பார்த்து உள்ளது. எனக்காக உதவிய பிசிசிஐ மற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிரிக்கெட்தான் என்னுடைய வாழ்க்கை. இந்திய அணிக்காகவும் மும்பை அணிக்காகவும் விளையாடுவதை விட வேறு எந்தப் பெருமையும் எனக்கு இருக்க முடியாது. மிக விரைவாக வலுவாக மீண்டு வருவேன்'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.