Published:Updated:

`தோனி பாணியில் ஃபினிஷிங்; கெத்து காட்டிய பன்ட் !’ - வெஸ்ட் இண்டீஸை ஒய்ட் வாஷ் செய்த இந்தியா

ராம் பிரசாத்

முதல் இரண்டு போட்டிகளில் ரிஷப் பன்ட் பேட்டிங்கில் சொதப்பியதால் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளானார்.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட் ( AP )

தோனிக்கு அடுத்து கீப்பிங் க்ளவுஸை யார் கையில் எடுக்கப்போவது என்ற பேச்சு ஆரம்பித்து வெகுகாலம் ஆகிவிட்டது. தினேஷ் கார்த்திக் சீனியர், இளம்வீரர் ஒருவர் அந்தப் பணிக்கு வந்தால்தான் நன்றாக இருக்கும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக இருந்தது. இந்தக் கேள்விக்கு தற்போது விடையாக இருப்பது ரிஷப் பன்ட் தான். தோனி ஓய்வு அளிக்கப்படும் சமயங்களில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். கீப்பிங்கில் தோனி கில்லி, அதை யாரும் மறுப்பதற்கு இல்லை. தோனியிடம் எதிர்ப்பார்ப்பதை இப்போதே ரிஷப் பன்டிடம் எதிர்பார்க்கக் கூடாது என கங்குலியே கூறியுள்ளார். தற்போது இருக்கும் தோனியாக மாற தோனிக்கே சில காலம் தேவைப்பட்டது. பன்ட்டுக்கும் சில அவகாசம் தேவை என்று கங்குலி பேசியிருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில்தான் 2 மாத ஓய்வில் தோனி காஷ்மீர் செல்ல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரில் கீப்பராக பன்ட் சேர்க்கப்பட்டார். முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பியதால் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளானார். என்ன ஷாட் ஆடுகிறார் எதற்கு அவசர கதியில் விக்கெட்டை இழக்க வேண்டும். இவர்தான் அடுத்த தோனியா என்ற பேச்சுகள் எழுந்தது. ஆனாலும் பன்ட் கீப்பிங்கில் நன்றாகவே செயல்பட்டார். முதல் போட்டியில் சைனி பந்தில் பொல்லார்ட் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். முதலில் சைனி அப்பீல் செய்தும் அவுட்கொடுக்க அம்பயர் மறுத்துவிட்டார். இந்திய வீரர்கள் சந்தேகத்துடன் தான் காணப்பட்டனர். ரிஷப் பன்ட் தீர்க்கமாக இது அவுட் என்றும் கோலியை டிஆர்எஸ் கேட்குமாறு கூறினார். இதையடுத்துதான் பொல்லார்ட்டுக்கு அவுட் வழங்கப்பட்டது. கோலி களத்திலே ரிஷப் பன்டை பாராட்டினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த கடைசி டி-20 போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான், கே.எல்.ராகுல் இருவரும் விரைவிலே வெளியேறினர். பின்னர் ஆடிய கோலி - ரிஷப் பன்ட் இணை இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கோலி 59 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி பாணியில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை தித்திப்பாக முடித்துவைத்தார் பன்ட்.

ரிஷப் பன்ட், பொல்லார்ட்
ரிஷப் பன்ட், பொல்லார்ட்

இந்த டி-20 போட்டியில் தோனியின் சாதனை ரிஷப் பன்ட் முறியடித்துள்ளார். டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் இதுதான். தோனி அதிகபட்சமாக இங்கிலாந்து எதிராக 56 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல் விராட்கோலி டி-20 கிரிக்கெட்டில் தனது 21வது அரைசதத்தை பதிவு செய்தார். இதுவரை டி-20 கிரிக்கெட்டில் அதிக 50 ப்ளஸ் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் இருந்தார். இதன்மூலம் கோலி, ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளார்.