Published:Updated:

`நீங்க இல்லாம அது சாத்தியமே இல்ல' - டிவிலியர்ஸ்க்கு ஆதரவு தெரிவித்த கோலி, யுவராஜ் சிங்!

மலையரசு

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சிலர் புகுந்தது சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் இன்னும் அதிகமான அன்பு கிடைக்க நானும் அனுஷ்காவும் எப்போதும் உங்களுக்காக இருப்போம்..

கோலி - டிவிலியர்ஸ்
கோலி - டிவிலியர்ஸ் ( twitter )

உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு அணி நிர்வாகத்தை தொடர்புகொண்டு மீண்டும் அணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் கூறியதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த நிலையில் அதற்கு நீண்ட நெடிய விளக்கம் ஒன்றை நேற்று அளித்தார் டிவிலியர்ஸ். அதில், ``நேர்மையான காரணங்களுக்காவே நான் ஓய்வு பெற்றேன்.

டிவிலியர்ஸ்
டிவிலியர்ஸ்
twitter

ஓய்வுக்குப்பின் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கத்துக்கும் எனக்குமான தொடர்பு இல்லை. சங்கத்திலிருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் அவர்களை தொடர்புகொள்ளவில்லை. டூ பிளசிஸ்ஸும் நானும் பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்கள். சரியாக உலகக் கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாள் முன்னர் இருக்கும். நான் டூ பிளசிஸ்ஸுக்கு சாட் செய்தேன்.

ஓய்வுக்குப் பின் ஐபிஎல் தொடரில் விளையாடி நான் ஃபார்மில் இருந்தேன். அதனால் அணிக்குத் தேவைப்பட்டால் நான் விளையாடுகிறேன் எனச் சாதாரணமாகத்தான் கூறினேன். இதில் கவனிக்கப்பட வேண்டியவை, ``தேவைப்பட்டால் மட்டுமே....'' என்றுதான் கூறினேன். அணிக்குள் நுழைய எந்த டிமாண்டும், எந்த வற்புறுத்தலையும் அவரிடம் நான் சொல்லவில்லை. இந்தச் சம்பவங்கள் என்னிடம் இருந்தோ.. என்னைச் சார்ந்தவர்களிடம் இருந்தோ, டூ பிளசிஸ்ஸிடம் இருந்தோ வெளியாகவில்லை.

டிவிலியர்ஸ்
டிவிலியர்ஸ்
twitter

ஆனால், முடிவில் நான் ஒரு சுயநலவாதியாக, திமிர்பிடித்தவனாக மாற்றப்பட்டேன். இப்போதும் என்னுடைய மனம் தெளிவாக உள்ளது. உண்மையான காரணங்களுக்காகவே நான் ஓய்வு பெற்றேன். தென்னாப்பிரிக்கா அணிக்கு எப்போதும் எனது ஆதரவு இருக்கும். நோ ப்ராப்ளம்... எனக்கு யார் மீதும் எந்தக் கோபமும் இல்லை" என உருக்கமாக விளக்கமளித்தார்.

இதற்கிடையே, டிவிலியர்ஸுக்கு இந்திய கேப்டன் கோலி, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிவிலியர்ஸின் பதிவுக்குக் கீழே பதிலளித்துள்ள கோலி, ``என்னுடைய சகோதரரே... எனக்குத் தெரிந்தவரை நீங்கள் நேர்மையான மனிதர் மட்டுமல்ல. உறுதியானவரும்கூட. துரதிருஷ்டவிதமாக உங்களுக்கு இதுபோன்று நடந்துவிட்டது. எங்களுக்கு தெரியும். உங்களை நாங்கள் நம்புகிறோம். உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சிலர் புகுந்தது சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் இன்னும் அதிகமான அன்பு கிடைக்க நானும் அனுஷ்காவும் எப்போதும் உங்களுக்காக இருப்போம்" எனப் பதிவிட்டு ஆதரவு கூறியுள்ளார்.

கோலி - டிவிலியர்ஸ்
கோலி - டிவிலியர்ஸ்
twitter

இதேபோல் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில்,``என் நெருங்கிய நண்பரே... லெஜண்ட்டே... எனக்கு தெரிந்து கிரிக்கெட் விளையாட்டில் மிகச்சிறந்த வீரர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை வெல்ல சாத்தியமே இல்லை. நீங்கள் அணியில் இடம்பெறாதது அணிக்குத்தான் இழப்பே தவிர உங்களுக்கு அல்ல. மிகப்பெரிய வீரர்.... மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டுவிட்டார். எங்கள் அனைவருக்கும் தெரியும் நீங்கள் ஜென்டில்மேன் என்று.." என ஆறுதல் கூறியுள்ளார்.