Published:Updated:

`தடை... ஊதியம்... குமுறும் வீரர்கள்!'- ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் என்னவாகும்?

தினேஷ் ராமையா

`ஊதியம் பின்னர் வழங்கப்படும் என்று உறுதிமொழி கிடைத்தால், நான் இலவசமாகவே விளையாடத் தயாராக இருக்கிறேன்'.

Zimbabwe Players
Zimbabwe Players ( Twitter/@ZimCricketv )

அரசியல் தலையீடு, சங்கத்துக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்யப்பட்டதாக ஜிம்பாப்வே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரித்த ஐசிசி, ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கத்தை சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தது. இதன்மூலம், ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கத்துக்கு ஐசிசி ஒதுக்கிய நிதி உடனடியாக முடக்கப்படுவதோடு ஐசிசி நடத்தும் தொடர்களிலும் பங்கேற்க முடியாத நிலை ஜிம்பாப்வேக்கு ஏற்பட்டிருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே, ஐசிசி நிதியை அரசின் செலவுகளுக்கு மடைமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

ICC
ICC
Twitter

ஐசிசியின் முடிவு குறித்து பேசிய அதன் தலைவர் சஷாங்க் மனோகர், `எந்தவொரு உறுப்பு நாட்டின் சங்கத்தையும் சஸ்பெண்டு செய்ய வேண்டும் என ஐசிசி எளிதாக முடிவெடுக்காது. ஆனால், கிரிக்கெட்டின் நலன்கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டது' என்றார். இது ஜிம்பாப்வே கிரிக்கெட்டர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஐசிசியின் முடிவு குறித்து வெளிப்படையாகவே வேதனை தெரிவித்தார், ஜிம்பாப்வே கிரிக்கெட்டர் சிக்கந்தர் ராசா. இந்த விவகாரத்தில் ஜிம்பாப்வே எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் அக்டோபர் மாதத்தில் நடக்கும் கூட்டத்தில் விவாதித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஐசிசி முடிவெடுக்க இருக்கிறது.

ஐசிசியால் சஸ்பெண்டு செய்யப்பட்டாலும், டெக்னிக்கலாக இருநாடுகள் பங்கேற்கும் (bilateral) தொடர்களை அந்நாடு நடத்தத் தடை இல்லை. அந்தத் தொடர்களுக்கான நடுவர்களையும் ஐசிசி நியமிக்க வேண்டும். அதேநேரம், ஐசிசியின் நிதி உதவி இல்லாமல், அதுபோன்ற தொடர்களை நடத்துவது ஜிம்பாப்வேவுக்கு எளிதில் கைகூடாத விஷயம். அந்த அணியின் எதிர்காலத் திட்டமிடலின்படி, அடுத்ததாக டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அந்த அணி விளையாட வேண்டும். பெண்கள் டி20 உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகள் வரும். ஆகஸ்டிலும் ஆண்கள் அணிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் வரவிருக்கின்றன. அக்டோபரிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. தற்போதைய சூழலே நீடித்தால் அந்தப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி பங்கேற்பது கடினம்.

Zimbabwe Players
Zimbabwe Players
Twitter/@ZimCricketv
எந்தவொரு உறுப்பு நாட்டின் சங்கத்தையும் சஸ்பெண்டு செய்ய வேண்டும் என ஐசிசி எளிதாக முடிவெடுக்காது
சஷாங்க் மனோகர்

அதேபோல், வரும் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதையடுத்து, வங்கதேசத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் பங்கேற்கிறது ஜிம்பாப்வே. மேலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் அந்த அணி விளையாடுகிறது. ஜிம்பாப்வே அணியின் எதிர்காலத் தொடர்கள் (FTP) அட்டவணையின்படி அக்டோபர், நவம்பரில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் அந்த அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக வரும் 2020 ஜனவரியில் இந்தியா வருகிறது.

`கிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்' - ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா வேதனை!

இந்தச் சூழலில், ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் தற்போதைக்கு விளையாட ஜிம்பாப்வே அணியின் சீனியர் வீரர் ஒருவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஈ.எஸ்.பி.என் ஊடகத்திடம் பேசியிருக்கும் அந்த வீரர், `இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டும் வரை இலவசமாகவே விளையாட நாங்கள் தயார். எங்களது அடுத்த தொடர், டி20 உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகளே. ஊதியம் பின்னர் வழங்கப்படும் என்று உறுதிமொழி கிடைத்தால், நான் இலவசமாகவே விளையாடத் தயாராக இருக்கிறேன். ஜிம்பாப்வேயில் கிரிக்கெட் உயிர்ப்புடன் இருக்க இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். தாமதமானாலும் ஊதியம் வழங்கப்பட வேண்டும்' என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

Zimbabwe Players
Zimbabwe Players
Twitter/@ZimCricketv

அந்நாட்டு கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்குக் கடந்த 2 மாதங்களாகவே ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், சமீபத்தில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அந்நாட்டு ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் போட்டி ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்தச் சூழலில், கிரிக்கெட்டின் நலனுக்காக இலவசமாகவே விளையாடத் தயார் என்று மூத்த வீரர் ஒருவர் கூறியிருக்கிறார்.

வீரர்கள் ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் விளையாடினாலும், ஜிம்பாப்வே, தான் நடத்தும் பெரும்பாலான தொடர்களுக்கு ஐசிசியின் நிதியையே அதிகம் எதிர்பார்த்திருக்கிறது. அதனால், தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் அந்நாட்டுக் கிரிக்கெட் சங்கம் எந்தத் தொடரையுமே நடத்த முடியாத நிலைதான் இருக்கிறது.

ஊதியம் பின்னர் வழங்கப்படும் என்று உறுதிமொழி கிடைத்தால், நான் இலவசமாகவே விளையாடத் தயாராக இருக்கிறேன். ஜிம்பாப்வேயில் கிரிக்கெட் உயிர்ப்புடன் இருக்க இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்
ஜிம்பாப்வே அணி வீரர்

ஐசிசி நிதி கிடைக்காதபட்சத்தில் சொந்த மண்ணில் எந்தத் தொடரையும் நடத்த முடியாது. இந்திய சுற்றுப்பயணம் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொடர்களைத் தவிர, அந்த கிரிக்கெட் சங்கத்துக்கு வேறு லாபம் ஈட்டும் தொடர் எதுவும் தற்போது இல்லை என்றே தெரிகிறது. இதனால், அக்டோபரில் நடக்கும் ஐசிசியின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை நோக்கி ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கம் காத்திருக்கிறது.