Published:Updated:

நைஜீரியாவின் ஆணவப் பேச்சுக்கு முடிவுகட்டிய மெஸ்ஸி!

எம்.குமரேசன்

நைஜீரிய வீரர்களின் ஆணவப் பேச்சுக்குக் கிடைத்த பரிசுதான் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேற்றம்.

நைஜீரியாவின் ஆணவப் பேச்சுக்கு முடிவுகட்டிய மெஸ்ஸி!
நைஜீரியாவின் ஆணவப் பேச்சுக்கு முடிவுகட்டிய மெஸ்ஸி!

ப்பிரிக்க அணிகளிடம் அடிவாங்குவதெல்லாம்  அர்ஜென்டினாவுக்கு  புதிது அல்ல. 1990- உலகக்கோப்பைத் தொடரிலேயே அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க சிங்கத்திடம் 'கடி' வாங்கியிருக்கிறது. அந்த உலகக்கோப்பையில் புதுமுக அணியாக என்ட்ரி ஆகியிருந்தது, கேமரூன். அது என்ன மாயமோ மந்திமோ தெரியவில்லை. மரடோனா, படிஸ்டா, கனிஜியா என நட்சத்திர வீரர்களை முரட்டு ஆட்டத்தால் முடக்கிப் போட்டனர் கேமரூன் வீரர்கள். அதோடு, கேமரூன் அணி கோலும் அடித்துவிட்டது.

மரடோனாவைச் சுற்றி எப்போதும் 2 ,3 கேமரூன் வீரர்கள் இருந்தனர். இவர்களை மீறி பந்தை கடத்திச் சென்றால், தயவு தாட்சண்யமே இல்லாமல் ஃபவுல் செய்தனர். அர்ஜென்டினா வீரர்கள்  நொந்து நூடுல்ஸ் ஆக,  கேமரூன் 1-0 என்று வெற்றியும் பெற்றுவிட்டது. அர்ஜென்டினாவை வீழ்த்தியதால், அன்று முதல் ஆப்பிரிக்கச் சிங்கம் ஆனது கேமரூன்.  நேற்றையை ஆட்டத்தில், நைஜீரியாவிடம் அர்ஜென்டினா தப்பித்தான் பிழைத்தது. ஆட்டம் சமனில் முடிந்தாலும்கூட நைஜீரியா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கும். இந்த ஆட்டத்திலும்கூட  மெஸ்ஸியைச் சுற்றி எப்போதும் 2,3 நைஜீரிய வீரர்கள் இருக்கத்தான் செய்தனர். இவர்களை மீறி மெஸ்ஸி கோல் அடித்தது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. 

ஆட்டம் தொடங்கும் முன், அர்ஜென்டினா அணியை உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேற்றிவிட்டுதான் ஓயப் போவதாக நைஜீரிய அணி வீரர்கள் அர்ஜென்டினாவுக்கு சவால் விடுத்தனர் . ஐஸ்லாந்து அணிக்கு எதிராக 2 கோல் அடித்த நைஜீரிய வீரர் அகமது மூசா, அர்ஜென்டினா அணிக்கு எதிராகவும் இரண்டு கோல்கள் அடிப்பேன் என்று தெனாவட்டாக சவால் விடுத்தார். நேற்றைய ஆட்டத்தில், மூசா சத்தத்தையே காணோம். நைஜீரிய பின் கள ஆட்டக்காரர் பிரையன் இடாவூ, , 'மெஸ்ஸி உலகக்கோப்பையில் விளையாடும் கடைசி ஆட்டம் இதுவாகத்தான் இருக்கும். அவருக்கு நாங்கள் பிரியா விடை அளிப்போம்' என்று ஆணவமாகப் பேசியிருந்தார். மார்கோ ரோஜோவின் கடைசி நேர 'வாலி'  கோல்,  அர்ஜென்டினாவைக் காப்பாற்ற,. ஆணவமாகப் பேசிய நைஜீரிய வீரர்களுக்குத்தான் இப்போது பிரியாவிடை கிடைத்திருக்கிறது